நவீன கட்டிடக்கலை
நவீன கட்டிடக்கலை என்பது முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் பல மேற்கு நாடுகளில் எழுந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். சில சமயங்களில் இது அனைத்துலகப் பாணி எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. நவீனம் என்னும் சொல், நடந்து கொண்டிருக்கும் காலத்தைச் சேர்ந்தவற்றைக் கடந்த காலத்தவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே பொது வழக்கில் பயன்படுத்தப்படுகின்றது. கட்டிடக்கலையிலும், 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையை அதற்கு முந்திய பாணிகளுடன் ஒப்பிட்டு நவீன கட்டிடக்கலை என்றனர். எனினும், இன்று நவீன கட்டிடக்கலை என்னும் போது அது 20 ஆம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்த தனித்துவமானதொரு கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கவே பயன்படுகின்றது. இது பொதுவாக 20 ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகக் கொள்ளப்படினும், நவீன கட்டிடக்கலைக்கான வித்து இந் நூற்றாண்டு தொடங்குவதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே காணப்படுவதாக இன்றைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனினும், இதன் தொடக்கம் எதுவென்று அறுதியிட்டுக் கூறமுடியாத நிலையே உள்ளது.
நவீன கட்டிடக்கலை, பயன்பாடு சார்ந்த வடிவமைப்பு, கட்டிடப்பொருட்களின் அறிவார்ந்த பயன்பாடு போன்ற கொள்கைகளின் அடிப்படையில் உருவானது. இது வரலாற்றுப் பாணிகளைப் பின்பற்றுவதையும், அழகூட்டல் அணிகளைப் பயன்படுத்துவதையும் கைவிட்டு, கட்டிடப்பொருட்களினதும், கட்டிட வடிவங்களினதும் உள்ளார்ந்த அழகியல் தன்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதனால் நவீன கட்டிடக்கலை, கட்டிடங்களுக்கு எளிமையான வடிவத்தைக் கொடுத்தது.[1][2][3]
தொடக்கமும் வளர்ச்சியும்
[தொகு]சில வரலாற்றாளர்கள், நவீன கட்டிடக்கலையின் வளர்ச்சியை ஒரு சமூகவியல் நிகழ்வாகக் கருதுகின்றனர். அவர்கள் இதனை நவீனத்துவ இயக்கங்களோடும், அறிவொளி இயக்கங்களோடும் தொடர்புபடுத்துகிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி நவீன பாணி சமூக, அரசியல் புரட்சிகளினால் உருவானது. வேறு சிலர் இது முக்கியமாக தொழில்நுட்ப, பொறியியல் காரணிகளினாலேயே உந்தப்பட்டதாகக் கருதுகின்றனர்.
தொழிற் புரட்சியைத் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் கட்டிடக்கலை தொடர்பில் புதிய வாய்ப்புக்களை உருவாக்கும் சாத்தியங்கள் இருந்தன. இதனால், 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்தே இவ் வளர்ச்சிகளைக் கோட்பாட்டு அடிப்படையிலும், நடைமுறையிலும் கட்டிடக்கலையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கண்ணாடி, இரும்பு, காங்கிறீட்டு போன்ற பொருட்களின் உற்பத்தி தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் அவற்றைக் கட்டிடக்கலையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்கின. 1851 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜோசேப் பாக்ஸ்ட்டனின் கிறிஸ்டல் மாளிகை கண்ணாடி, இரும்பு ஆகியவற்றைப் பயன்படுத்திய தொடக்க கால எடுத்துக்காட்டு ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில், இரும்பை, அமைப்புச் சட்டகங்களாகப் பயன்படுத்திப் பல கட்டிடங்கள் உருவாயின. 1883-1885 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கட்டப்பட்ட வில்லியம் லே பாரன் ஜென்னி என்னும் கட்டிடக்கலைஞரின் ஹோம் இன்சூரன்ஸ் கட்டிடம் இரும்பினால் கட்டப்பட்ட ஒரு கட்டிடமாகும். 1889 ஆம் ஆண்டில் பாரிசில் கட்டப்பட்ட ஈபெல் கோபுரமும் இரும்பைக் கட்டிடங்களில் பயன்படுத்துவதில் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையாக விளங்கியது.
பயன்பாட்டியம்
[தொகு]நவீன கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களில் ஒன்று பயன்பாட்டியக் கொள்கை (functionalism) ஆகும். லூயிஸ் ஹென்றி சலிவன் என்னும் கட்டிடக்கலைஞர் பயன்பாட்டியக் கொள்கையைக் கட்டிடக்கலையில் அறிமுகப்படுத்தினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is Modern architecture?" (in ஆங்கிலம்). Royal Institute of British Architects. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
- ↑ Froissart, Rossella (2011). Avant-garde et tradition dans les arts du décor en France. lectures critiques autour de Guillaume Janneau (in French). Marseille: Université de Provence - Aix-Marseille. p. 73.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "6.12. Karl Friedrich Schinkel and the Bauakademie". 28 June 2020.