தெற்கத்திய புள்ளி மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்கத்திய புள்ளி மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Picumnus innominatus malayorum) என்பது புள்ளி மரங்கொத்தியின் துணையினம் ஆகும்.[1][2]

விளக்கம்[தொகு]

சிட்டுக்குருவியை விடச் சிறியதான இப்பறவை சுமார் 10 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு சிலேட் கறுப்பு நிறமாகவும், விழிப்படலம் சிவந்த பழுப்பு நிறமாகவும், கால்கள் ஆழ்ந்த ஈய நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி மஞ்சள் தோய்ந்த ஆலிவ் நிறத்தில் இருக்கும். உச்சந்தலை ஆரஞ்சும் கறுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். கண்கள் வழியாகக் கறுப்புத் தோய்ந்த அகன்ற ஆலிவ் நிறப்பட்டை மேலும் கீழும் வெள்ளைக் கறைகள் அழகுபடுத்த கீழ் நோக்கிக் கழுத்து வரை செல்லக் காண இயலும். உடலின் அடிப்பகுதி மஞ்சள் கலந்த வெண்மையாகப் பெரிய கறுப்புக் கறைகளோடு காட்சியளிக்கும். வயிற்றிலும் வாலடியிலும் கறுப்புக் கறை கறுப்புப் பட்டையாக நீண்டு காட்சியளிக்கும். பெண் பறவையின் தலை உச்சியில் மஞ்சள் கலந்த ஆலிவ் நிறமாக முதுகின் நிறம்போன்றே காணப்படும்.[3]

பரவலும் வாழிடமும்[தொகு]

தெற்கத்திய புள்ளி மரங்கொத்தியானது தென்னிந்தியாவில் கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் சார்ந்த பகுதிகளில் ஈரம் மிகுந்த இலையுதிர் காடுகளிலும், மூங்கில் காடுகளிலும் காணப்படுகிறது.[3]

நடத்தை[தொகு]

தெற்கத்திய புள்ளி மரங்கொத்தியை கதிர்க்குருவி, பட்டாணிக் குருவி, பசையெடுப்பான் குருவி போன்ற சிறு பறவைகளின் இரைதேடும் கூட்டத்துடன் காணலாம். தனித்தும் இணையாகவும் மரக்கிளைகளைச் சுற்றியும், தாழ்வான சிமிறுகளில் அமர்ந்தும், இரைதேடும். இது அடிக்கடி மரங்கொத்தியைப் போல மரப்பட்டைகளை ஒலி உண்டாகும்படி அலகால் தட்டவும் செய்யும். இப்பறவை விரைந்து நேராக பறக்கும் இயல்பு உடையது. எறும்புகளையும், அதன் முட்டைகளையுமே இது முதன்மை உணவாக கொண்டுள்ளது. 'ஸ்பிட், ஸ்பிட்' என மென் குரல் கொடுப்பதோடு அலகால் மரப்பட்டைகளையும், மூங்கிளையும் தட்டி உரக்க ஒலி எழுப்பும்.[3]

இனப்பெருக்கம்[தொகு]

தெற்கத்திய புள்ளி மரங்கொத்தி சனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கிறது. மூங்கில் அல்லது காய்ந்த மரத்தில் பொந்து குடைந்து அதில் கூடமைத்து மூன்று அல்லது நான்கு வெள்ளை முட்டைகளை இடுகிறது. இவை அமைக்கும் பொந்துகள் ஒன்று முதல் ஐந்து மீட்டர் உயரத்தில் மூன்று செ.மீ இக்கும் குறைவான விட்டத்தில் அமைக்கின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gorman, Gerard (2014) (in en). Woodpeckers of the World. Firefly Books. பக். 42. https://archive.org/details/woodpeckersofwor00unse_0. 
  2. "ITIS - Report: Picumnus innominatus". www.itis.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  3. 3.0 3.1 3.2 3.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 319-321.