உள்ளடக்கத்துக்குச் செல்

தெறிப்புவகைத் தொலைநோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்கிளின் நிறுவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் 24 அங்குல தெறிப்புத் தொலைநோக்கி ஒன்று.

தெறிப்புவகைத் தொலைநோக்கி அல்லது தெறிப்புத் தொலைநோக்கி என்பது, ஒரு ஒளியியல் தொலைநோக்கி ஆகும். இது ஒரு தனியான அல்லது கூட்டு வளைவாடிகளைப் பயன்படுத்தி ஒளியைத் தெறிக்கச் செய்து தொலைவில் உள்ள பொருட்களின் விம்பங்களை உருவாக்குகிறது. தெறிப்புவகைத் தொலைநோக்கி 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்காலத்தில், வில்லைகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட முறிவுவகைத் தொலைநோக்கிகள் பயன்பாட்டில் இருந்தன. நிறப்பிறழ்ச்சி எனும் தோற்றப்பாடு காரணமாக இவற்றின் பயன்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டது. தெறிப்புத் தொலைநோக்கிகள் இதற்கு ஒரு தீர்வாக அமைந்தன. தெறிப்புத் தொலைநோக்கிகளிலும் வேறுவிதமான பிறழ்ச்சிகள் இருந்தாலும், இவ்வகையில் அதிக விட்டம் கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது. இவ்வகைத் தொலைநோக்கிகள் பெரும்பாலும் பெரிய ஆய்வுத் தொலைநோக்கிகளாக மட்டுமே காணப்படுகின்றன. தெறிப்புத் தொலைநோக்கிகள் பலவிதமான வடிவமைப்புக்களில் உள்ளன. விம்பங்களின் தரத்தை உயர்த்துவதற்காக அல்லது விம்பத்தை வசதியான இடத்தில் உருவாக்குவதற்காக வேறு ஒளியியற் கூறுகளும் இவ்வகைத் தொலைநோக்கிகளில் பயன்படுவது உண்டு.[1][2][3]

வரலாறு

[தொகு]

இத்தாலியப் பேராசிரியரான நிக்கோலோ சுக்சி (Niccolò Zucchi) என்பவரே 1616 ஆம் ஆண்டில், முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியைச் செய்தவர் ஆவார். இதைப் பயன்படுத்தி 1630 ஆம் ஆண்டில், வியாழக்கோளின் இரண்டு வளையங்களையும், செவ்வாய்க் கோளில் புள்ளிகள் இருப்பதையும் இவர் அவதானித்தார். எனினும் குழிவு ஆடியைத் துல்லியமாகச் செய்ய முடியாமையும், ஆடியை மறைக்காமல் விம்பத்தைப் பார்ப்பதற்கான வழிமுறைகள் இல்லாதிருந்ததாலும், பிறர் இவரது வடிவமைப்பைப் பின்பற்றவில்லை. 1663 ஆம் ஆண்டில், ஜேம்ஸ் கிரரரி என்பவர் வெளியிட்ட ஒப்ட்டிக்கா புரொமோட்டா (Optica Promota) என்னும் நூலில் இரண்டு குழிவில்லைகளைப் பயன்படுத்தித் தொலைநோக்கிகளைச் செய்வது பற்றி விளக்கியிருந்தார். இதுவே முதலாவது நடைமுறைச் சாத்தியமான தெறிப்புத் தொலைநோக்கிக்கான வடிவமைப்பு எனலாம். எனினும், செயல்படும் தொலைநோக்கி இன்னும் பத்து ஆண்டுகள் கழிந்த பின்பே உருவாக்கப்பட்டது. இதனைச் செய்தவர் ராபர்ட் ஹூக் என்பவர். முதலாவது நடைமுறையில் செயல்படக்கூடிய தொலைநோக்கியை வடிவமைத்து உருவாக்கியவர் ஐசாக் நியூட்டன் ஆவார். இது 1668 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவ் வடிவமைப்பில், தெறித்து வரும் ஒளியை 90 பாகையினால் திருப்பி விடுவதற்காகச் சாய்வாக அமைக்கப்பட்ட சிறிய ஆடி ஒன்று முதன்மை ஆடியின் குவியத்துக்கு அருகில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் உள்ளே வரும் ஒளியை மறைக்காமல் விம்பத்தைப் பார்க்கக் கூடிய வழி ஏற்பட்டது. இவரது தொலைநோக்கி நிறப்பிறழ்ச்சிப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வாக அமைந்தது.

தொழில்நுட்பம்

[தொகு]

வளைவான முதன்மை ஆடியே தெறிப்புத் தொலைநோக்கியின் அடிப்படை ஒளியியல் கூறு. இது அதன் குவியப் புள்ளியில் விம்பத்தை உருவாக்கும். இவ்விடத்தில் ஒளிப்படத் தகட்டையோ அல்லது ஒரு எண்முறை உணரியையோ அமைத்து விம்பத்தைப் பதிவு செய்யமுடியும். இதில் கண்வில்லை ஒன்றை வைத்து நேரடியாகவோ, ஒளியை ஆடிமூலம் வேறிடத்தில் உள்ள கண்வில்லைக்குத் தெறிக்கச்செய்தோ அவதானிக்கவும் முடியும்.

ஆடிகள் நிறப் பிறழ்ச்சிக்கான வாய்ப்பை இல்லாமல் ஆக்கினாலும், வேறு வகைப் பிறழ்ச்சிகளை உண்டாக்கவே செய்கின்றன. பொதுவாக இவை கோளப் பிறழ்ச்சியை உருவாக்கக்கூடும். இதில், ஆடியின் நடுப் பகுதியும், விளிம்புப் பகுதியும் ஒரே குவியத்தைக் கொண்டிருப்பதில்லை. தொடக்கத்தில் ஹபிள் தொலைநோக்கியில் இருந்த அமைப்புக் குறைபாடும் இதுவே. கோள வடிவம் அல்லாத வேறு வடிவங்களில் ஆடிகளை உருவாக்குவதன் மூலம் இக் குறைபாட்டை நீக்க முடியும்.

தெறிப்புத் தொலைநோக்கி வடிவமைப்புக்கள்

[தொகு]

நியூட்டன்வகை

[தொகு]
நியூட்டன்வகைத் தொலைநோக்கி

நியூட்டன் வகைத் தொலைநோக்கி பொதுவாக ஒரு பரவளைவுரு முதன்மை ஆடியைக் கொண்டிருக்கும். ஆனால், 12 சமீ அல்லது அதிலும் குறைவான, சிறிய துளை அளவு கொண்டவையும், f/8 அல்லது அதைவிடக் குறைவான குவிய விகிதத்தைக் கொண்டவையுமான தொலைநோக்கிகளுக்குக் கோளவுரு ஆடிகளே போதுமானவை. ஒரு துணை ஆடியான ஒரு தளவாடி ஒளியைத் தெறித்து, தொலைநோக்கிக் குழாயின் பக்கவாட்டுக்கு அனுப்புகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட முதன்மை ஆடியைக் கொண்ட தொலைநோக்கிகளோடு ஒப்பிடும்போது எளிமையானதும், மலிவானதுமான தொலைநோக்கி இதுவே. ஆர்வலத் தொலைநோக்கி செய்யுனர் மத்தியில் இது புகழ் பெற்றதாக விளங்குகிறது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Henry C. King (1955). The History of the Telescope. p. 74. ISBN 978-0-486-43265-6. Retrieved 2013-08-01.
  2. Fred Watson (2007). Stargazer: The Life and Times of the Telescope. Allen & Unwin. p. 108. ISBN 978-1-74176-392-8.
  3. Fred Watson (2007). Stargazer: The Life and Times of the Telescope. Allen & Unwin. p. 109. ISBN 978-1-74176-392-8.