தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தி
தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Dinopium benghalense puncticolle) என்பது பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினம் ஆகும்.[1] இது கேரளம் நீங்கலாக தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தியானது மைனாவை விடப் பெரியதாக சுமார் 29 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கொம்பு போன்ற கறுப்பு நிறமாகும். இதன் விழிப்படலம் சிவந்த பழுப்பு நிறமாகவும், கால்கள் சாம்பல் தோய்ந்த இலைப் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் உச்சியும் கொண்டையும் ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். உடலின் மேற்பகுதி பொன் நிறமான மஞ்சளாகவும் ஓரங்கள் கறுப்பாகவும் இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகக் கறுப்புக் கோடுகளோடு காட்சியளிக்கும். தொண்டையும் தலையின் பக்கங்களும் கறுப்பாகச் சிறு வெண் புள்ளிகளோடு காட்சியளிக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
[தொகு]தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தி கேரளம் நீங்கலாக தென்னிந்தியா முழுவதும் இலையுதிர்க்காடுகளிலும் தோப்புகள், தோட்டங்கள், சாலை ஓர மரங்கள் ஆகியவற்றைச் சார்ந்து எங்கும் சாதாரணமாக காணப்படுகிறது.[2]
நடத்தை
[தொகு]தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தி பொதுவாக இணையாக மரத்திற்கு மரம் தாவி மரங்களில் கொத்தி இரை தேடக்கூடியது. கரிச்சான் முதலிய பிற பூச்சி பிடிக்கும், இரைதேடும் பறவைக் கூட்டங்களுடன் இணைந்து இரை தேடுவதும் உண்டு. தாவித் தாவி அடிமரங்களில் கொத்தி மரப்பட்டைகளை அலகால் தட்டி இரைத்தேடும் இப்பறவை பின்னோக்கி இறங்கவும் வல்லது.[2]
இப்பறவை பெப்ரவரி முதல் சூலை வரை இனப்பெருக்கம் செய்கிறது. மரங்களில் மூன்று முதல் ஆறு மீட்டர் வரை உயரத்தில் பொந்து குடைந்து அதில் மூன்று முட்டைகள் இடும். மா, இலந்தை, முள்முருக்கு, தென்னை, பனை முதலான மரங்களில் பொந்து குடையும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Woodpeckers". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 26 May 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 324–325.