தென்கரைக்கோட்டை கல்யாணராமர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்கரைக்கோட்டை கல்யாணராமர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தென்கரைக்கோட்டையில் உள்ள உள்ள ஒரு இராமர் கோயிலாகும். [1][2]

கோயில்பற்றிய கதை[தொகு]

சீல நாயக்கன், சென்னப்ப நாயக்கன் ஆகிய உடன்பிறந்தவர்கள் தன் படைகளுடன் தென்கரைக்கோட்டைப் பகுதியில் இருந்த காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்தனர். அப்போது அவர்களின் வேட்டை நாயை முயல் விரட்டியதைக் கண்டு வியந்தனர். இரவு அங்கேயே உறங்கினர் அவர்களின் கனவில் இராமர் தோன்றி அங்குள்ள ஆலமரத்தை அடையாளம் காட்டி அங்கு தனக்கு ஒரு கோயில் எழுப்பச் சொன்னார். பொழுது விடிந்தபின் சகோதரர்கள் தங்கள் தலை நகரம் திரும்பினர். கோயில் கட்ட வேண்டிய பணத்தை அண்ணன் சீலநாயக்கன் தம்பி சென்னப்ப நாயக்கனிடம் தந்து கோயில் வேலைகளை செய்யுமாறு அனுப்பி, தலைநகரில் ஆட்சியைத் தொடர்ந்துவந்தான். கோயில்வேலைகளை சென்னப்ப நாயக்கன் வெளியூர் சிற்பிகளையும் வேலையாட்களையும் கொண்டு செய்வதைக் கண்டு, எரிச்சலடைந்த உள்ளூர் இளைஞர்கள் இருவர் சீல நாயக்கனிடம் சென்று இளவரசர் கோயில் வேலையை கவணிக்காமல், அதற்கான பணத்தை தவறான வழியில் செலவிட்டு வருவதாக கோள் மூட்டினர். இதைக்கேட்டு சீலநயக்கன் தம்பியைக் காணப் புறப்பட்டான். அண்ணன் வருவதை அறிந்து தம்பி சென்னப்ப நாயக்கன் அவரை எதிர்கொண்டு அழைக்க பரிவாரங்களோடு வந்தான். இதை அறிந்த உள்ளூர் இளைஞர்கள் தம்பி அண்ணனைக் கொல்ல வருவதாக அவரிடம் சூதுரைக்க இதை நம்பிய சீல நாயக்கன் தம்பி சென்னப்ப நாயக்கனை கொன்றுவிட்டு, பின்னர் கோட்டையையும் கோயிலையும் பார்வையிட்டு, சிற்பிகளிடம் விசாரித்தான். சிற்பிகளுக்கு தரவேண்டிய பணம் போன்றவை முறையாக கொடுக்கப்பட்டிருப்பதையும் கணக்குவழக்குகள் சரியாக இருப்பதை அறிந்தான். குற்றம் செய்யாத தன் தம்பியை கொன்றதற்காக வருந்தி, தம்பியைக் கொன்ற இடத்திலேயே தன்னை அழித்துக் கொள்கிறான். இவர்களின் மனைவிமார் அந்த இடத்திலேயே உடன்கட்டை ஏறுகின்றனர். இவ்வாறு இவ்விடத்தில் செவிவழிக்கதை நிலவுகிறது.[3]

கோயிலமைப்பு[தொகு]

இக்கோயில் இரு தள விமானத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன் மண்டபத்தின் வட தென் புறங்களில் குதிரை வீரன் தூண்கள், சிங்க வீரன் தூண்கள், யாளி வீரன் தூண்கள் ஆகியவை வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் பல இசைத்தூண்களும் உள்ளன.

கோயில் உண்ணாழியில் இராமர் அமர்ந்த கோலத்தில் பரிவாரங்களோடு காட்சியளிக்கிறார். இராமரின் வலக்கை அபய முத்திரையோடும் இடக்கை தொடைமீது வைத்தபடியும், அருகில் சீதை வலக்கையில் மலர் ஏந்தியபடியும், இடக்கையில் வரத முத்திரை கொண்டும் விளங்குகிறார். சீதாராமரின் முன்னே விசுவாமித்திரர், வசிட்டர் ஆகியோர் அமர்ந்திருக்க அவர்களோடு இராமனின் தம்பியரான பரதன், இலக்குவன், சத்துருக்கன், ஆகியோருடன் குகன், சுக்ரீவன், வீடணன், அனுமன், அங்கதன் ஆகியோர் பரிவாரங்களாக எழுந்தருளியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கல்யாண ராமர் கோயிலில் சிவனடியார்கள் உழவார பணி". செய்தி. தினகரன். 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "தென்கரைக்கோட்டை-பெருமாள்/கல்யாணராமர்". அறிமுகம். www.naavaapalanigotrust.com. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 119.