தீயணைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீயணைப்பான்

தீயணைப்பான் (Fire Extinguisher) என்பது குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய தீப் பற்றல், பரவல்களை தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு கருவி ஆகும். வண்டிகளில் பயன்படும் சிறிய ரக 500 கிராம் தீயணைப்பான்கள் முதல் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படும் 14 கிலோ தீயணைப்பான்கள் வரை இன்று பல அளவுகளில் தீயணைப்பான்கள் கிடைக்கப்பெறுகின்றன. இவை பொதுவாக இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. முதலாவது அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பான். இவ்வகை தீயணைப்பான்களில் நீர், வளிமம் (வாயு) போன்ற அடிப்படை தீயணைப்புக் காரணிகள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்படுகின்றன. மற்றது அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான். இவ்வகை தீயணைப்பான்களில் அடிப்படை தீயணைப்பு காரணிகளான வேதிப்பொருள்கள் ஒரே உருளையின் இருவேறு கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்படுகின்றன. இந்த வகை தீயணைப்பான்களின் தலை தாக்கப்படும்பொழுது இந்த கண்ணாடி குடுவை உடைந்து, இரண்டு வேதிப்பொருள்களும் ஒன்று சேர்கின்றன. இதனால் ஏற்படும் வேதிவினையால் உருவாகும் புதிய வேதிப்பொருள் அதிக அழுத்தத்தில் விரைந்து வெளியேறி நெருப்பை அணைக்கிறது.

வரலாறு[தொகு]

முதன்முதலில், 1723ம் ஆண்டு தீயணைப்பான் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்புரோசு காட்ஃப்ரே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இது இன்றைய புதிய தீயணைப்பான்களுக்கு முன்னோடியான ஒரு கருவி. இதில் தீயை அணைக்க உதவும் நீர்மமும், வெடிமருந்தும் ஒரே பெட்டியின் இருவேறு அறைகளில் இருக்கும். தீவிபத்து (தீப்பற்று நிகழ்வு) ஏற்படும் சமயங்களில் பெட்டி வெடித்து, நீர்மம் (திரவம்) வெளியேறுவதால் தீ அணைக்கப்பட்டது.
இதன் பிறகு, 1819ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த சார்சு வில்லியம் மாண்பை நவீன தீயணைப்பானை உருவாக்கினார். இதில் இவர் பொட்டாசியம் கார்பனேட் கலவையையும் அழுத்தப்பட்ட காற்றையும் பயன்படுத்தினார்.

இதன் பிறகு 1881ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ரீட் & காம்பல் என்ற நிறுவனத்தால் அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான்களும், 1905 ம் ஆண்டில் உருசியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் லாரன்ட்என்பவரால் வேதிநுரை தீயணைப்பான்களும் , 1924ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வால்டர் கிட்டி நிறுவனத்தால் கார்பன்-டை-ஆக்சைடை அடிப்படையாக கொண்ட தீயணைப்பான்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
பொதுவாக நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் அமெரிக்கர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலன் 1211 மற்றும் காலன் 1301 ஆகிய வளிமங்கள் (வாயுகள்) 1970 களில் ஐரோப்பாவுக்கும் பரவியது. எனினும் இந்த வளிமங்கள் சூழ்நிலை சீர்க் கேட்டை உருவாக்கவல்லது என்ற காரணத்தால் ஐரோப்பா மற்றும் அவுத்திரேலிய நாடுகளில் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் இந்த வளிமம் 1997ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது[1]. இருப்பினும் அமெரிக்கா, ஆசியா, நடு கிழக்கு நாடுகளில் இந்த வளிமம் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

வேலைசெய்யும் முறை[தொகு]

நெருப்பு முக்கோணம்

பொதுவாக தீயணைப்பான்கள் நெருப்பு முக்கோண அடிப்படையில் இயங்குகின்றன. அதாவது ஓர் இடத்தில் தீ உருவாக அல்லது பரவ வெப்பம், எரிபொருள் மற்றும் ஆக்சிசன் ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இவை மூன்றில் ஏதாவது ஒன்றை நீக்கும்பொழுது நெருப்பு அணைக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் குளிர்வித்தல், போர்த்துதல் ஆகிய முறைகளில் தீ அணைக்கப்படுகின்றது.

குளிர்வித்தல்[தொகு]

இந்த முறையில் தீப்பிடித்த பகுதிகளில் நீர் போன்ற குளிர்விப்பான்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் வெப்பம் நீக்கப்படுவதால் தீ கட்டுப்படுத்தப்படுகின்றது.

போர்த்துதல்[தொகு]

இந்த முறையில் தீப்பிடித்த பொருள்களில் சில வேதிப்பொருட்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் நுரை தீப்பிடித்த பொருள்களின் மேல் படிகின்றன. இதனால் அந்தப் பொருள்களுக்கு ஆக்சிசன் தொடர்பு துண்டிக்கப்படுவதால், நெருப்பு அணைக்கப்படுகின்றது.

வகைப்பாடு[தொகு]

தீயணைப்பான்கள் பொதுவாக விபத்துக்கான எரிபொருள் அல்லது விபத்துக்கான காரணி ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடு நாட்டுக்கு நாடு வேறுபடும்.

தேசிய தீவிபத்து தடுப்புக் கழகத்தின் தீவிபத்து வகைப்பாடு[தொகு]

தேசிய தீவிபத்து தடுப்புக் கழகம் என்பது ஒரு அமெரிக்க தேசிய நிறுவனம் ஆகும். இதன்விபத்து தடுப்பு தரநிர்ணயம் உலகின் சில நாடுகாளால் பின்பற்றபடுகின்றன. இது தீவிபத்துகளை பின்வரும் நான்கு முறையில் பகுத்துள்ளது.
A பிரிவு தீவிபத்து: காகிதம், மரம், ரப்பர், நெகிழி போன்ற பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
B பிரிவு தீவிபத்து: எண்ணெய், கரைப்பான், பெட்ரோல் போன்ற திரவ பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
C பிரிவு தீவிபத்து: மின்சாதன பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
D பிரிவு தீவிபத்து: மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாசுபரசு போன்ற எளிதில் தீபபற்றக்கூடிய உலோகங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

இந்திய தீவிபத்து வகைப்பாடு[தொகு]

இந்திய அளவில் தீவிபத்தானது பின்வரும் முறையில் ஐந்து வகையாக பகுக்கப்பட்டுள்ளது[2].
A பிரிவு தீவிபத்து: காகிதம், மரம், ரப்பர், நெகிழி போன்ற பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
B பிரிவு தீவிபத்து: எண்ணெய், கரைப்பான், பெட்ரோல் போன்ற நீர்ம பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
C பிரிவு தீவிபத்து: எளிதில் தீப்பற்றக்கூடிய வளிமங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
D பிரிவு தீவிபத்து: மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாசுபரசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய உலோகங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
E பிரிவு தீவிபத்து: மின்சாதன பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

பயன்பாடு[தொகு]

மேற்கூறிய இந்திய தீவிபத்து வகைப்பாட்டின் படி தீயணைப்பான்களின் பயன்பாடு பின்வரும்படி நிர்ணயக்ககப்பட்டுது.

நீர் தீயணைப்பான்[தொகு]

இவ்வகை தீயணைப்பான்களில் தீயணைப்பு கருவியாக நீர் பயன்படுகிறது. நீரை வேகமாக பீய்ச்சியடிக்க கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுகிறது. இவ்வகை தீயணைப்பான்கள் A வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை குளிர்வித்தல் முறையில் செயல்படுகின்றன.

வேதிநுரை தீயணைப்பான்[தொகு]

இவ்வகை தீயணைப்பான்களில் குறிப்பிட்ட வேதிப்பொடிகள் தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. வேதிப்பொடிகளை வேகமாக பீய்ச்சியடிக்க நைட்ரசன் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A & b வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன .

உலர் வேதிப் பொடி தீயணைப்பான்[தொகு]

இவ்வகை தீயணைப்பான்களில் அம்மோனியம் பாஸ்ப்பேட் போன்றவை தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A,B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.

கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான்[தொகு]

இவ்வகை தீயணைப்பான்களில் கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.

சிறப்பு உலர்வேதிப்பொடி தீயணைப்பான்[தொகு]

இவ்வகை தீயணைப்பான்களில் பல்வேறு வேதிப்பொடிகள் (உலோகத்துக்கு உலோகம் மாறுபடும்) தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் D வகை விபத்துகளைத் தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.

தீயணைப்பான் அட்டவணை[தொகு]


மேற்கூறிய அட்டவணை பொதுவாகப் பயன்படும் தீயணைப்பான்களை அடிப்படையாகக்கொண்டு, இந்திய அரசின் தீவிபத்து வகைப்பாட்டின் படி தயாரிக்கப்பட்டது.

இதையும் பார்க்கவும்[தொகு]

நெருப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indianexpress.com/oldStory/66169/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-24. பார்க்கப்பட்ட நாள் 2009-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீயணைப்பான்&oldid=3711525" இலிருந்து மீள்விக்கப்பட்டது