உள்ளடக்கத்துக்குச் செல்

தளை (யாப்பிலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாப்பிலக்கணத்தில், தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.[1] செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும்.

தளைகளின் வகைகள்

[தொகு]

இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தளை ஏழு வகைப்படும். அவை:

ஆசிரியத்தளை

[தொகு]
1. நேரொன்றிய ஆசிரியத்தளை (மா முன் நேர்)
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நேர்
2. நிரையொன்றிய ஆசிரியத்தளை (விளம் முன் நிரை)
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நிரை

வெண்டளை

[தொகு]
3. இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விளம் முன் நேர்)
- நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர்
- வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை.
வருஞ்சீர் இயற்சீராயின், சிறப்புடை இயற்சீர் வெண்டளை எனப்படும்.
வருஞ்சீர் வெண்சீராயின், சிறப்பில் இயற்சீர் வெண்டளை எனப்படும்.
4. வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
- நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நேர்
வருஞ்சீர் வெண்சீராயின், சிறப்புடை வெண்சீர் வெண்டளை எனப்படும்.
வருஞ்சீர் வெண்சீர் தவிர்ந்த வேறு சீராயின், சிறப்பில் வெண்சீர் வெண்டளை எனப்படும்.

கலித்தளை

[தொகு]
5. கலித்தளை: (காய் முன் நிரை)
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நேர்
- வருஞ்சீர் முதலசை - நிரை
வருஞ்சீர் காய்ச்சீராயின், சிறப்புடைக் கலித்தளை எனப்படும்.
வருஞ்சீர் இயற்சீர் அல்லது கனிச்சீராயின், சிறப்பில் கலித்தளை எனப்படும்.

வஞ்சித்தளை

[தொகு]
6. ஒன்றிய வஞ்சித்தளை (கனி முன் நிரை)
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நிரை
வருஞ்சீர் கனிச்சீராயின், சிறப்புடை ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
வருஞ்சீர் கனிச்சீர் தவிர்ந்த வேறு சீராயின், சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
7. ஒன்றாத வஞ்சித்தளை (கனி முன் நேர்)
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நேர்
வருஞ்சீர் கனிச்சீராயின், சிறப்புடை ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.
வருஞ்சீர் கனிச்சீர் தவிர்ந்த வேறு சீராயின், சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]
குழலினி(து) யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

என்பது ஒரு திருக்குறள். இது இரு அடிகளைக் கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த ஒரு செய்யுள். இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய அசை வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.

குழ.லினி(து)[2] யா.ழினி.து என்.பதம் மக்.கள்
நிரை.நிரை
கருவிளம்
ஈரசைச்சீர்
(இயற்சீர்)
நேர்.நிரை.நேர்
கூவிளங்காய்
மூவசைச்சீர்
(வெண்சீர்)
நேர்.நிரை
கூவிளம்
ஈரசைச்சீர்
(இயற்சீர்)
நேர்.நேர்
தேமா
ஈரசைச்சீர்
(இயற்சீர்)
மழ.லைச்.சொல் கே.ளா தவர் .
நிரை.நேர்.நேர்
புளிமாங்காய்
மூவசைச்சீர்
(வெண்சீர்)
நேர்.நேர்
தேமா
ஈரசைச்சீர்
(இயற்சீர்)
நிரை
மலர்
ஓரசைச்சீர்
(அசைச்சீர்)


இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது ஈரசைச்சீர். நிலைச்சீரின் ஈற்றசை நிரை. வருஞ்சீரின் முதல் அசை நேர். நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும்.

இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர் வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும்.

இவ்வாறே இக்குறளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன:

குழ.லினி(து) யா.ழினி.து சிறப்பில் இயற்சீர் வெண்டளை
யா.ழினி.து என்.பதம் சிறப்பில் வெண்சீர் வெண்டளை
என்.பதம் மக்.கள் சிறப்புடை இயற்சீர் வெண்டளை
மக்.கள் மழ.லைச்.சொல் சிறப்பில் இயற்சீர் வெண்டளை
மழ.லைச்.சொல் கே.ளா சிறப்பில் வெண்சீர் வெண்டளை
கே.ளா தவர் இயற்சீர் வெண்டளை

பாக்களும், தளைகளும்

[தொகு]

மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விதமான தளைகள், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பாக உரியவை. இதனாலேயே குறிப்பிட்ட தளைகளின் பெயர்கள் தொடர்புடைய பாக்களின் பெயர்களால் வழங்கப்படுகின்றன.

ஆசிரியத்தளைகள் ஆசிரியப்பாவுக்கும், வெண்டளைகள் வெண்பாவுக்கும், கலித்தளைகள் கலிப்பாவுக்கும், வஞ்சித்தளைகள் வஞ்சிப்பாவுக்கும் சிறப்பாக உரியவை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. மாட்டைக் கயிற்றால் பிணிக்கும் கயிறு 'தளைக்கயிறு'. தளைகயிறு மாட்டையும் கட்டுத்தறியையும் பிணிப்பது போல நின்ற-சீரையும், வரும்-சீரையும் பிணிப்பது தளை
  2. து+யா=தி [தி] என்னும் குற்றியலிகரம் அலகு பெறவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளை_(யாப்பிலக்கணம்)&oldid=4046845" இலிருந்து மீள்விக்கப்பட்டது