உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (சுருக்கமாக:டேன்டீ)(Tamilnadu Tea Plantation Corporation (TANTEA) ), தமிழ்நாடு அரசின் 68 பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் 1968-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை நிறுவியது. பின்னர் 1976-ஆம் ஆண்டில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் எனும் பொதுத்துறை நிறுவப்பட்டு அதன் கீழ் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் லிமிடெட் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும், தென்னிந்தியாவிலேயே நான்காவதாகவும் உள்ளது.

இக்கழகத்தின் பதிவு அலுவலகம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா சாலையில் உள்ளது. இந்நிறுவனம் நீலகிரி மாவட்டததின் உதகமண்டலம், கோத்தகிரி, கூடலூர், நடுவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை பகுதிகளில் 4,054 எக்டேர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் கொண்டுள்ளது. இத்தேயிலைத் தோட்டக் கழகத்திற்கு சொந்தமான கோத்தகிரி, கூடலூர், வால்பாறை, போன்ற இடங்களில் தேயிலைத் தூள் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது.

1964ல் சாஸ்திரி-சிறிமா ஒப்பந்தப்படி, இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த 25,000 இலங்கை வாழ் மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு இத்தேயிலைத் தோட்டங்களில் தினக்கூலிகளாக பணியமர்த்தப்பட்டனர்.

நிதிப் பிரச்சனைகள்

[தொகு]

கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் நட்டத்தில் இயங்கி வருவதால் தேயிலை சாகுபடியை 10,000 ஏக்கரில் இருந்து 5,000 ஏக்கராக குறைத்து உற்பத்தி செய்யவும் மற்றும் இதர செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது. கூடலூரில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 500க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் டான்டீயாவின் நிதி நெருக்கடி சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

நிரந்தரத் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 4,500 பேர் வேலை செய்யும் டான்டீயின் முடிவுக்கு எதிராக தொழிலாளர்களும் அவர்களது சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாமல் தேயிலைக் கழகம் திணறி வருகிறது. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் மூன்றாண்டுகளில் மட்டுமே தேயிலைக் கழகம் லாபம் ஈட்டியுள்ளது. 1997-98, 1998-99 மற்றும் 2020-21ல் முறையே ரூபாய்.30 கோடி, 35 கோடி மற்றும் 7 கோடி லாபம் ஈட்டியுள்ளது. வனத்துறைக்கான குத்தகைத் தொகை மற்றும் வங்கிக் கடனைத் தவிர்த்து, தேயிலைக் கழகத்தின் குவிந்த நட்டம் சுமார் ரூபாய் 240 கோடி ஆகும்.[1]

இத்தேயிலை கழகத்தில் மொத்தம் 9,000 தொழிலாளர்கள் மற்றும் 480 அதிகாரிகள் தொடக்கத்தில் பணிபுரிந்தனர். தற்போது நிதிநெருக்கடி காரண்மாக இருபது ஆண்டுகளில், தொழிலாளர்களின் எண்ணிக்கை 4,000 ஆக குறைந்தது. கூடலூர் தேயிலைத் தோட்டத்தின் தொழிலாளர்கள் நபருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்தால் தங்கள் வாழ்வு மலரும் என அரசைக் கோருகிறார்கள்.[2]

போராட்டங்கள்

[தொகு]

இத்தேயிலைக் கழகத்தின் வால்பாறை மற்றும் நடுவட்டம் பகுதிகளில் உள்ள 2152 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு வனத்துறையின் பெயருக்கு மாற்ற தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதை எதிர்த்து இப்பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர்.[3]20 நவம்பர் 2022 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தலமையில் கூடலூரில் தேயிலைக் கழகத்தின் தேயிலைத் தோட்டங்களை வனத்துறைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]