ஜென்னி வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜென்னி வில்லியம்ஸ்
2009 இல் ஜென்னி வில்லியம்ஸ்
பிறப்பு1962 (அகவை 61–62)
குவண்டா, சிம்பாப்வே
தேசியம்சிம்பாப்வே நாட்டவர்
பணிமனித உரிமை ஆர்வலர்
அமைப்பு(கள்)சிம்பாப்வே பெண்கள் எழுச்சி இயக்கம்
விருதுகள்சர்வதேச வீரதீரப் பெண்கள் விருது (2007)
ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் விருது (2009)
கின்னெட்டா சாகன் நிதி விருது (2012)

ஜென்னி வில்லியம்ஸ் ( Jenni Williams) (பிறப்பு 1962) சிம்பாப்வேவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான இவர் சிம்பாப்வே பெண்கள் எழுச்சி இயக்கத்தின் நிறுவனரும் ஆவார். அரசுத்தலைவரான இராபர்ட் முகாபே அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான இவர், 2009 ஆம் ஆண்டில் தி கார்டியன் பத்திரிக்கையால் "முகாபேவின் பக்கத்தில் மிகவும் சிக்கலான முட்களில் ஒன்று" என்று விவரிக்கப்பட்டார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை.[தொகு]

ஜென்னி வில்லியம்ஸ் சிம்பாப்வேயின் குவாண்டாவில் பிறந்தார். ஒரு ஐரிய தந்தைக்கும் தாயார் மார்கரெட் மேரி என்கிற மெக்கன்வில் என்பவருக்கும் பிறந்தார்.[1] தனது உடன்பிறந்தவர்களின் படிப்புச் செலவுகளை சமாளிப்பதற்காக 16 வயதில், வில்லியம்ஸ் தனது உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறினார்.[1] 1994 ஆம் ஆண்டில், இவரது மூத்த சகோதரர் எயிட்சு நோயால் இறந்தார்.[1]

செயல்பாடு[தொகு]

1994 முதல் 2002 வரை, ஜென்னி வில்லியம்ஸ் தலைமையிலான மக்கள் தொடர்பு நிறுவனம் சிம்பாப்வே வணிக விவசாயிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. வெள்ளையர்களுக்கு சொந்தமான பண்ணைகளை நிலச் சீர்திருத்த நடவடிக்கையாக அவர் கைப்பற்றிய கொள்கையின் காரணமாக விரைவில் நிறுவனம் முகாபேவுடன் மோதலில் ஈடுபட்டது.[1] வெள்ளையர்களுக்குச் சொந்தமான பண்ணைகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துமாறு முகாபே முன்னாள் வீரர்களை ஊக்குவித்த பிறகு, ஜென்னி மனித உரிமை மீறல்கள் என்று விவரித்து அதை எதிர்க்கத் தொடங்கினார். முகாபேவின் அரசியல் கூட்டாளிகளுக்கு சிறந்த பண்ணைகள் வழங்கப்பட்டதாகவும் ஜென்னி குற்றம் சாட்டினார்.[2] இதன் விளைவாக காவல் துறையின் துன்புறுத்தலில், ஜென்னி தனது நிறுவனத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[1][1]

2002 ஆம் ஆண்டில், முகாபே அரசாங்கத்திற்கு எதிராக பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சிம்பாப்வே பெண்கள் எழுச்சி இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரானார். இந்த அமைப்பு முகாபேவுக்கு எதிரான பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் கவனம் செலுத்தியது. அடுத்த ஆண்டுகளில் 70,000 உறுப்பினர்களாக வளர்ந்தது. ஜென்னி மற்றும் இயக்கத்தின் பிற தலைவர்கள் தலைமை சில நேரங்களில் ஆபத்தான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.[2]

2008ஆம் ஆண்டுக்குள், முகாபே அரசாங்கத்திற்கு எதிராக இவரது இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக ஜென்னி 33 முறை கைது செய்யப்பட்டார்.[2] 2003 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பன்னாட்டு மன்னிப்பு அவை இவரை “மனசாட்சியின் கைதி” என அறிவித்தது.[3] இவரும் இவரது இயக்கத்தின் இணைத் தலைவர் மாகோடோங்கா மஹ்லாங்கு ஆகியோரை மீண்டும் மீண்டும் கைது செய்வதையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்தது. மேலும் சிம்பாப்வே அரசாங்கம் பெண்களை விடுவிக்க வேண்டும் என்றும் "அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்" என்றும் அது கூறியது.[4] 2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மற்றொரு கைதுக்குப் பிறகு, அமெரிக்க தூதர் ஜேம்ஸ் டி. மெக்கீ இவரை விடுவிக்க வற்புறுத்தினார். ஜென்னி வில்லியம்சின் "குரல் கேட்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் ஒரு முக்கிய நபர்" என்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒரு "மோசடி" என்றும் விவரித்தார்.[5] அடுத்த நாள் இவருக்கு பிணை ஆணை வழங்கப்பட்டது. .[6] 2012 ஆம் ஆண்டில், குழுவின் பத்தாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் சிம்பாப்வே பெண்கள் எழுச்சி இயக்கத்தின் வருடாந்திர காதலர் தின அணிவகுப்பில் இவர் 40 வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டார்.[7]

அங்கீகாரம்[தொகு]

இடதுபுறத்தில் ஜென்னி வில்லியம்ஸ் மற்றும் நடுவில் மாகோடோங்கா மஹ்லாங்கு ஆகியோருக்கு நவம்பர் 23,2009 அன்று அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் விருதை வழங்குகிறார்.

"அமைதியான மற்றும் அகிம்சை வழிகளில் மாற்றத்திற்காக பணியாற்றுவதன் மூலம் தைரியம் மற்றும் தலைமைக்கு ஒரு எடுத்துக்காட்டு அளித்ததற்காக" 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச வீரதீர பெண்கள் விருது ஜென்னி வில்லியம்ஸுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வெளியுறவுத்துறை செயலாளர் காண்டலீசா ரைஸ் வழங்கினார். [8] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜென்னி மற்றும் சிம்பாப்வே பெண்கள் எழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவர் மாகோடோங்கா மஹ்லாங்கு ஆகியோருக்கு ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது. இது அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா வழங்கினார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Elizabeth Day (9 May 2009). "The woman who took on Mugabe". The Guardian. https://www.theguardian.com/world/2009/may/10/jenni-williams-freedom-campaigner. 
  2. 2.0 2.1 2.2 Dugger, Celia W. (17 October 2008). "From Underground, Leading a March for Democracy". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2008/10/18/world/africa/18williams.html?pagewanted=all. 
  3. "Prisoner of conscience: Jenni Williams" (PDF). Amnesty International. Archived from the original (PDF) on 2 September 2011. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  4. "Zimbabwe: End Crackdown on Peaceful Demonstrators". Human Rights Watch. 28 October 2008. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  5. "US calls for Zimbabwe to free rights activists". https://www.usatoday.com/news/world/2008-07-02-1313254554_x.htm. 
  6. "Woza Leaders Jenni Williams and Magodonga Mahlagu Released on Bail". Amnesty International. 4 July 2008. Archived from the original on 11 March 2011. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  7. "Still Fighting Despite the Odds". Amnesty International. 9 March 2012. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  8. Shoko, Bertha (8 June 2012). "US government honours WOZA's Jenny Williams". The Standard. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Obama awards – and kisses – Zimbabwe women activists". BBC News. 24 November 2009. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்னி_வில்லியம்ஸ்&oldid=3914178" இலிருந்து மீள்விக்கப்பட்டது