ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 1978
ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 1978 (Jammu & Kashmir Public Safety Act 1978) முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர் சேக் அப்துல்லா ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலப் பாதுகாப்பிற்கும் மற்றும் பொதுமக்கள் நலத்திற்கும் 1978-இல் இயற்றப்பட்ட தடுப்புக் காவல் சட்டமாகும். [1] இச்சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பலர் 5 ஆகஸ்டு 2019 முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். [2]
இச்சட்டம் அரசின் பாதுக்காக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வெளிநபர்கள் நுழைவதைத் தடுக்க வகை செய்கிறது. மேலும் பொது அமைதியைப் பாதிக்கும் நடவடிக்கைகளை தூண்டுவதை மேற்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைத் தடைசெய்ய வகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரிவு 8-இன் கீழ் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, அரசு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஒரு தனிநபரை எவ்வித விசாரணையின்றியும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமலும் ஒராண்டு முதல் ஈராண்டு வரை தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட நீதிபதி / மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபர் குறித்து ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைக் குழுவிற்கு நான்கு வாரங்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவருக்கு தனது தரப்பை எடுத்துக் கூற வழக்கறிஞரை வைத்துக் கொள்ள அனுமதியில்லை. இருப்பினும் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்து தடுப்புக் காவலில் உள்ளவரை வெளிக்கொணர முடியும்.[3] மேலும் உயர் நீதிமன்றம் உரிய காரணங்கள் இன்றி ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என நினைத்தால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவரை விடுவிக்க ஆணையிடலாம். [4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ What Is Jammu & Kashmir Public Safety Act?
- ↑ ஜம்மு-காஷ்மீர்: பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபரூக் அப்துல்லா கைது
- ↑ காஷ்மீர்: "எங்கே ஃபரூக் அப்துல்லா?"- வைகோ மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- ↑ What is Public Safety Act of Jammu and Kashmir and what are its provisions?
- ↑ What is Jammu and Kashmir’s Public Safety Act?
வெளி இணைப்புகள்
[தொகு]- Jammu and Kashmir Public Safety Act 1978 பரணிடப்பட்டது 2020-09-25 at the வந்தவழி இயந்திரம்