சோலிஸ்தான் பாலைவனம்
சோலிஸ்தான் பாலைவனம் (ரோகி) | |
பாலைவனம் | |
சோலிஸ்தான் பாலைவனம்
| |
நாடு | பாகிஸ்தான் |
---|---|
Biome | பாலைவனம் |
சோலிஸ்தான் பாலைவனம் (Cholistan Desert) (உருது: صحرائے چولِستان; பஞ்சாபி: صحرائے چولستان), தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூர் மாவட்டத் தலைமையிட நகரமான பகவல்பூரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ளது. உள்ளூரில் சோலிஸ்தான் பாலைவனத்தை ரோகி என அழைப்பர். சோலிஸ்தான் பாலைவனம் 26,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீண்டு பரவியுள்ளது. இப்பாலைவனத்தில் அமைந்த பதினோறு கோட்டைகளில் தராவர் கோட்டை மிகவும் நீண்டதும், உயரமும் கொண்டது.[1]
சோல் எனும் துருக்கி மொழிச் சொல்லிற்கு பாலைவனம் என்பது பொருள். சோலிஸ்தான் பாலைவனத்தில் நீரையும், புல்லையும் தேடி ஓரளவு நாடோடி வாழ்க்கை நடத்தும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மேய்க்கும் மக்கள் வாழ்கின்றனர். ஹக்ரா ஆற்றின் உலர் வடிநிலம் சோலிஸ்தான் பாலைவனம் வழியாகச் செல்கிறது. இப்பாலைவனத்தில் சிந்துவெளி நாகரீகத்தின் எச்சங்கள் கிடைத்துள்ளன.
இப்பாலைவனத்தில் ஆண்டுதோறும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் மோட்டார் கார் பந்தய நிகழ்ச்சிகள் பாகிஸ்தானில் புகழ் பெற்றது.
பண்பாடு மற்றும் மரபுகள்
[தொகு]கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள்
[தொகு]சோலிஸ்தான் பாலைவனத்தின் கடுமையான பகல் வெயிலையும், கடுமையான இரவுக் குளிரையும் தாங்கிக் கொண்டு, மிகக் குறைந்த மழை நீர் மற்றும் புல்வெளிகளை நம்பி, ஒட்டகம், ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகளை பாலைவனத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மேய்த்து வாழும் சோலிஸ்தான் மக்கள் பருத்தி நூலைக் கொண்டு கதர் துணி நெய்தல், கால்நடைகளின் முடிகளைக் கொண்டு கம்பளித் துணி நெய்தல், தோல் பதனிடுதல், தோல் காலணிகள் தயாரித்தல் மற்றும் மட்பாண்டங்கள் தயாரிக்கும் வேலைகளை குடிசைத் தொழிலாகச் செய்கின்றனர்.
முகலாயப் பேரரசர் அக்பரின் காலத்தில், வெளி உலகை அறியாத சோலிஸ்தான் பகுதியை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, இப்பகுதி மக்களைக் கொண்டு கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் கட்டும் பணி துவக்கினார். மேலும் சோலிஸ்தான் மக்களின் பண்பாடு மற்றும் மரபுகள் காக்கும் பொருட்டு சுடுமட் பாண்டங்கள், கைநெசவுத் தொழில், கட்டுமானம் முதலிய வேலைகளுக்கு ஆதரவளித்தார்.
கால்நடைகள்
[தொகு]சோலிஸ்தானின் பொருளாதாரம் கால்நடை வளர்ப்புத் தொழிலை மட்டும் நம்பியுள்ளது. இப்பகுதி மக்கள் கால்நடைகள் மூலம் பெறப்படும் பால், தோல், மாமிசங்களை விற்பனை செய்து தங்களது வாழ்க்கைக்கான பிற தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். இப்பாலைவனத்தில் 1.6 மில்லியன் கால்நடைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.
பருத்தி மற்றும் கம்பளி உற்பத்தி
[தொகு]சோலிஸ்தான் கால்நடைகளின் முடிகளைக் கொண்டு கை நெசவுத் தறிகளில் மூலம் உயர்தர கம்பளி போர்வைகள், கால்மிதிகள் மற்றும் கம்பளித் துணிகளை குடிசைத் தொழிலாக உற்பத்தி செய்கின்றனர்.
நெசவுத் தொழில்
[தொகு]பாலைவனத்தின் வெயிலைத் தாங்கும் பொருட்டு பருத்தி நூலிலான கதர் துணிகள், குல்லாய்கள், லுங்கிகள், தலைப்பாகைகள், மேலாடைகளை கை நெசவுகளின் மூலம் உற்பத்தி செய்கின்றனர்.
ஒட்டக வளர்ப்பு
[தொகு]போக்குவரத்திற்கும், சரக்குகளைக் கையாளுவதற்கும், கம்பளித் துணி நூலுக்காகவும், தோலுக்காகவும் சோலிஸ்தான் பாலைவன மக்கள் ஒட்டகங்களை பேணி வளர்க்கின்றனர்.
தோல் உற்பத்தி
[தொகு]கால்நடைகளின் மூலம் கிடைக்கப் பெறும் தோலிருந்து அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காலணிகளை குடிசைத் தொழிலாக சோலிஸ்தான் மக்கள் உற்பத்தி செய்கின்றனர்.
சோலிஸ்தான் பாலவனத்தில் தராவர் கோட்டை, இஸ்லாம்கான் கோட்டை, மீர்கர் கோட்டை, ஜாம்கர் கோட்டை, மோஜ்கர் கோட்டை, மரோட் கோட்டை, பூல்ரா கோட்டை, கன்கர் கோட்டை, கைகர் கோட்டை, நவான்கோட் கோட்டை மற்றும் பிஜ்னோட் கோட்டை என பதினோறு கோட்டைகள் உள்ளது. இக்கோட்டைகளில் தராவர் கோட்டையை பாகிஸ்தான் அரசு உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி யுனெஸ்கோ நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தது.[3]
சுடுமட்கலம்
[தொகு]சிந்துவெளி நாகரீகக் காலத்திய சோலிஸ்தானில் சுடுமண் சிற்பங்கள் மற்றும் சுடுமண் பாண்டங்கள், பீங்கான் பாண்டங்கள் சோலிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் சோலிஸ்தான் பகுதியில் கோயில்கள், அரண்மனைகள், கோட்டைகள் கட்டப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cholistan desert
- ↑ Tourism Development Corporation of Punjab official website http://www.tdcp.gop.pk/tdcp/Destinations/HistoricalPlaces/Forts/CholistanDesertForts/tabid/267/Default.aspx பரணிடப்பட்டது 2013-07-16 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Derawar and the Desert Forts of Cholistan
உசாத்துணை
[தொகு]- Mughal, M.R. 1997. Ancient Cholistan. Lahore: Feroz and Sons.