சேவல் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குப்பைக்கோழித் தனிப்போர்
சேவல் சண்டை

சாவக்கட்டு [1] அல்லது சேவல் சண்டை என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். சேவல் சண்டையானது சேவல்கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை என வெவ்வேறு பெயர்களில் நடக்கிறது. இதே போன்ற விளையாட்டுகள் வட அமெரிக்கா, ஆசியாவின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன.

சங்ககால விளையாட்டு[தொகு]

கோழிகளில் ஆண்கோழி சேவல் எனப்படும். ஆண் கோழிகள் தன் பெண் கோழி ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது. [2]

புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்த விளையாட்டுகளில் ஒன்று கோழிச்சண்டை [3] [4]

கோழிக் காலில் கத்தி கட்டி விளையாட விட்டும், கத்தி இல்லாமல் விளையாட விட்டும் வேடிக்கைப் பார்ப்பது வழக்கம். தமிழ்நாட்டில் இது பரவலாக அண்மைய காலம் வரையில் விளையாடப்பட்டு வந்தது. [5]

விளையாட்டுக்கு தயார் செய்தல்[தொகு]

காணும் பொங்கலன்று தமிழகத்தின் சில பகுதிகளில் சேவல் சண்டை நடத்தும் வழக்கம் இருக்கிறது. சேவல்கள் பொதுவாக நன்கு சண்டையிடக்கூடியவை என்றாலும், அவற்றை சண்டைக்கு முறையாக தயார்படுத்துவதுவர். போட்டிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே இதற்கான வேலைகளைத் தொடங்கிவிடுவர். நல்ல உடல்வாகுடன் இருக்கும் சேவல்களை சண்டைக்கு தேர்ந்தெடுத்து நீச்சல், ஓடுதல், உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சிகள் அளிப்பர். மேலும் உடல் வலுவுக்கு ஊட்டச்சத்துக்காக கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி, பாதாம், பிஸ்தா, சாரப்பருப்பு, திராட்சை, பேரீச்சம்பழம் ஆகியவற்றைக் கொடுப்பர்.

விளையாட்டு[தொகு]

சேவல் சண்டையில் வெப்போர், கத்தி கட்டு என இரண்டு வகைகள் உண்டு. கத்திக் கட்டு போட்டியில் சேவல்களின் கால்களில் கூர்மையான சிறுகத்தியைக் கட்டி போட்டிக்கு விடுவதாகும். இதில் சேவலைக் கையில் ஏந்தியபடி எதிர் சேவலை மோதல் காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோசத்துடன் மோதும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின் மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும்.

வெற்றுக்கால் சேவல் சண்டை அல்லது வெப்போர் என்னும் சேவல் சண்டையில் சேவலின் காலில் கத்தியைக் கட்டாமல் வெற்றுக் கால்களுடன போட்டி நடக்கும். வெப்போர் சேவல் சண்டைக்கு அசில் வகை சேவல்களை அதிகம் பயன்படுத்துவர். அதற்கு காரணம். அவற்றின் உடல்வாகும், போர்க் குணமும் ஆகும். மேலும் அதன் கால் பகுதியில் கட்டை விரலுக்கு மேலே, அம்பின் முனைபோல வளரும் ‘முள்’ அமைப்பும் முக்கிய காரணம். இதில் பெரிய சேவல், சின்ன சேவல் என பிரித்து போட்டிக்கு விடப்படும். நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு சேவலுக்கும் ஒரு மணி நேரம் வழங்கப்படும். மூக்கை கீழே வைத்தாலோ, ஓட்டம்பிடித்தாலோ அந்த சேவல் தோல்வியை தழுவியதாக கருதப்படும். [6]

விளையாட்டு முறை[தொகு]

போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு போட்டியாளர்களும் தங்களது சேவல்களை களத்தில் நேருக்கு நேர் பார்க்கும்படி நிறுத்திவிட்டு, பிறகு கையில் எடுத்துக்கொள்வர். இதற்கு நடவு விடுதல் என்று பெயர்.[7] இதன் மூலம் சேவலுக்கு எதிரி அடையாளம் காட்டப்படுகிறது. பின்னர் இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றி அவை ஆவேசம் அடையந்தது ஒன்றையொன்றை தாக்க ஓடி வரும்போது போட்டியாளர்கள் தங்களது சேவல்களை சண்டையிடாமல் கையில் பிடித்துக்கொள்வர். இதற்கு முகைய விடுதல் என்று பெயர்.[7] அதன்பின்பு இரு சேவல்களையும் மோத விடுவர். இதற்கு பறவை இடுதல் என்று பெயர்.[7]

சண்டையின்போது சேவல்கள் மோதிய பிறகு களத்தில் இருந்து ஓடவோ, அல்லது மூக்கை மண்ணில் படாமலோ களைத்துப் போயிருந்தால், சேவல் விடுபவர்கள், தொடர்ந்து அவை சண்டையிடாமல் செய்து, அவற்றிற்கு தண்ணீர் தந்தும், ஈரத்துணியால் காயங்களைத் துடைத்தும், மருந்திட்டும், முதுகில் தட்டிக் கொடுத்தும் களைப்பை போக்கி மீண்டும் களத்தில் விடுவர். 15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் இடைவேளை என இந்த சண்டை சுமார் ஒன்றேமுக்கால் மணிநேரம் நடக்கும்.[7]

எதிரி பறக்கும் உயரம், தாக்கும் வேகம், எதிரியின் முள் குறி வைக்கும் உடல் பாகம் ஆகியவற்றை உடனுக்குடன் துல்லியமாக கணிக்கும் சேவல்கள், அதன் பின்னர் எதிரியை எப்படி அடிக்க வேண்டும் என்று உடனே கணித்து, பறந்து சென்று எதிரியின் கழுத்து மற்றும் தலையை குறிவைத்து அடித்து எதிரியை வீழ்த்துகின்றன.[7]

தடை[தொகு]

பிற்காலத்தில் இது சூதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது.

திரைப்படம்[தொகு]

தமிழில் வெளியான ஆடுகளம் எனும் திரைப்படம் இச்சாவக்கட்டை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டது.

புகைப்பட தொகுப்பு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. கோழி சாகும்வரையில் போரிடும்படி நாம் விளையாடப் பந்தயம் கட்டு
 2. குப்பைக் கோழித் தனிப் போர் போல,
  விளிவாங்கு விளியின் அல்லது,
  களைவோர் இலை (குறுந்தொகை 305)
 3. கோழி என்னும் சொல்லே சேவலைக் குறிக்கும்
 4. பறழ்ப் பன்றி, பல் கோழி,
  உறைக் கிணற்றுப் புறச் சேரி,
  மேழகத் தகரொடு சிவல் விளையாட (பட்டினப்பாலை 75)
 5. Cockfight
 6. "தஞ்சாவூர் அருகே விளாரில் சேவல் சண்டை போட்டி: 1,500 சேவல்கள் பங்கேற்பு". செய்தி. தி இந்து (2017 பெப்ரவரி 12). பார்த்த நாள் 12 பெப்ரவரி 2017.
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 எஸ்.கோபு (2018 சனவரி 17). "ஆக்ரோஷ கொக்கரக்கோ: உடலே ஆயுதம்.. உடனே வியூகம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 17 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவல்_சண்டை&oldid=2472290" இருந்து மீள்விக்கப்பட்டது