உள்ளடக்கத்துக்குச் செல்

சேதுபதி காசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேதுபதி மன்னர்கள் காசுகள் என்பவை வட்ட வடிவில் அமைந்த செம்பாலான காசுகள் ஆகும். இவற்றின் ஒருபுறம் தங்களது பெயரைநயம் மறுபுறம் பல்வேறு உருவங்ளையும் பொறித்துள்ளனர். இக்காசுகள் 2.2 கிராம் முதல் 3.2 கிராம் வரை எடை கொண்டுள்ளன.

காசுகளின் அமைப்பு[தொகு]

சேதுபதி மன்னர்கள் வெளியிட்ட செப்புக் காசுகளில் ஒருபுறம் ‘”சேதுபதி” என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும். மறுபுறம் சிவன், முருகன், திருமால் இராஜஇராஜேஸ்வரி ஆகியோர் மீது அவர்கள் கொண்ட பக்தியை வெளிப்படுத்துகின்ற முறையில் அத்தெய்வங்களின் உருவங்களுள் ஒன்று பொறிக்கப்பட்டிருக்கும். சில காசுகளில் சிவனது வடிவங்களான ரிஷபவாகனர், ரிஷிபாரூடர் உருவங்களும், இலிங்கத்தினைச் சுமந்து நிற்கும் காளையின் உருவங்களும் காணப்படுகின்றன. முருகனது ஊர்தியான மயிலும் ஆயுதமான வேலும், ஆறுமுகனாக மயில்மீது அமர்ந்த கோலமும் சில காசுகளில் காணப்படுகின்றன. இன்னும் சில காசுகளில் அமர்ந்த நிலையிலுள்ள இராஜஇராஜேஸ்வரி அம்மன், கணபதி, அனுமன், கருடன் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை தவிர மலர்ச்செடி, யானை, அன்னம் முதலிய உருவங்களும் சேது மன்னர்களது காசுளில் இடம்பெற்றுள்ளன.

மன்னர்களும் அவர்களது காசுகளும்[தொகு]

சேதுபதிகள் ஒருபுறம் தெலுங்கில் “ஸ்ரீராமஜயம்” என்றும் மறுபுறம் “சேதுபதி” என்றும் எழுதப்பட்டக் காசுகளையும் வெளியிட்டுள்ளனர். தளவாய் சேதுபதியும் ஸ்ரீ உடையதேவர் என்ற முத்துவிஜயரகுநாத சேதுபதியும் தங்களது பெயர் பொறித்த காசுகளை வெளியிட்டுள்ளனர். தளவாய் சேதுபதியின் (கி.பி. 1635-1645) காசில் ஒருபுறம் “ராசராசதளவாய்” என்ற அவரது பெயரும் மறுபுறம் நிற்கும் மயிலின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் காசில் ஒருபுறம் “ஸ்ரீ உடையதேவர்” என்ற அவரது பெயரும் மறுபுறம் ரிஷபவாகனர் அல்லது ரிஷிபாரூடர் அல்லது இலிங்கத்தினைச் சுமந்து நிற்கும் காளையின் உருவமும் காணப்படுகின்றன. சேதுபதி காசுகளை அச்சிட்டு வெளியிடக்கூடிய நாணய சாலைகள் இராமநாதபுரம், இராமேஸ்வரம் முதலிய இடங்களில் இருந்துள்ளன. சேது நாட்டில் புழக்கத்தில் இருந்த பல காசுகளின் பெயர்களை சேது மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளில் இருந்து அறிய முடிகிறது. இவை பொதுவாகப் பொன், பணம் என்று அழைக்கப்பட்டன. வீர்ராயன் பொன், வீர்ராயன் பணம், சுழிமின்னல் பொன், சுழிப்பணம், மின்னல் பணம், மதுரைப் பொன் என்றும் இவை குறிப்பிடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராமநாதபுரம் அரண்மணை, அருங்காட்சியகக் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதுபதி_காசுகள்&oldid=3878043" இலிருந்து மீள்விக்கப்பட்டது