உள்ளடக்கத்துக்குச் செல்

முத்துவிஜயரகுநாத சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயரகுநாத சேதுபதி

முத்துவிஜயரகுநாத சேதுபதி அல்லது திருவுடையாத் தேவர் (ஆட்சிக் காலம் 1713-1725) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார். இவர் முத்து வயிரவநாத சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவராவார். இவர் முத்துவயிரவநாத சேதுபதியின் தம்பி ஆவார்.

பதவி ஏற்பு

[தொகு]

திருவுடையாத் தேவர் என்னும் இயற்பெயரை உடைய இவர் கி.பி.1713ல் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் சேதுபதி மன்னரானார். இவர் இராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி திங்களில் நடைபெறும் விஜயதசமி (தசரா விழா) விழா அன்று முடிசூட்டிக் கொண்டதால் இவர் முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற பெயரை ஏற்றார். முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற பட்டப் பெயரானது இவருக்கு முன் ஆண்டவர்களான ரெகுநாத கிழவன் சேதுபதிக்கும், ரெகுநாத திருமலை சேதுபதிக்கும் இருந்ததுள்ளன.

நிவாகம்

[தொகு]

முத்துவிஜயரகுநாத சேதுபதி அன்றைய சேதுநாட்டை 72 இராணுவப் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு சேர்வைக்காரரை நியமித்தார். அந்தந்தப் பிரிவுகளுக்குள் அதில் அடங்கியுள்ள கிராமங்களின் வருவாய் கணக்குகளைப் பராமரிப்பதற்காக மதுரைச் சீமைகளிலிருந்து பட்டோலை பிடித்து எழுதும் வேளாண் குடிமக்களை வரவழைத்து அவர்களை நாட்டுக்கணக்கு என்ற பணியில் அமர்த்தினார். அடுத்ததாக அரசின் வலிமையை நிலைநிறுத்தி சேதுநாட்டைக் காப்பதற்காக மூன்று புதிய கோட்டைகளை முறையே ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய ஊர்களில் அமைத்தார். கமுதிக்கோட்டை புதுமையான முறையில் வட்டவடிவில் மூன்று சுற்று மதில்களுடன் அமைக்கப்பட்டது.

இறப்பு

[தொகு]

இரகுநாத கிழவன் சேதுபதியின் மகனாக இருந்தும் செம்பிநாட்டு மறவர் குல பெண்மணிக்குப் பிறக்காத காரணத்தால் சேதுபதி பட்டம் மறுக்கப்பட்ட பவானி சங்கரத் தேவர் புதுக்கோட்டை, தஞ்சை மன்னர்களது உதவியுடன் இராமநாதபுரம் கோட்டையைப் பிடிப்பதற்கு முற்பட்டார். இவரை சேதுநாட்டின் வடக்கு எல்லையில் சந்தித்துப் பொருதுவதற்காக சென்ற பொழுது முத்து விஜயரகுநாத சேதுபதி வழியில் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் திரும்பியதும் கி.பி.1725இல் மரணம் அடைந்தார்.[1] இவருக்குப் பின்னர் சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி என்பவர் மன்னராக பொறுப்பேற்றார். ஆனால் அவரைப் போரில் கொன்று பவானி சங்கர சேதுபதி மன்னரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/ii. முத்து விஜயரகுநாத சேதுபதி". நூல். சர்மிளா பதிப்பகம். pp. 53–55. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.