சுழல் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுழல் காற்று

சுழல் காற்று (Tornado) என்பது மின்னலையும், இடியையும் தோற்றுவிக்கக்கூடிய முகிலொன்றின் உட்பகுதியிலிருந்து தொடங்கி நிலமட்டம் வரை நீட்சியடைந்த, கூடிய வேகத்துடன் சுழல்கின்ற வளிநிரல் ஆகும். இச்சுழல் காற்று சிறிய அளவிலான சூறாவளியாகும். இதை சூறாவளி என்றும் கூறுவர்.[1] கடும் இடி, மின்னல், புயல்கள் ஏற்படும் போதே டொர்னாடோக்கள் உருவாகின்றன. இவை சூறாவளியிலும் பார்க்க பயங்கரமானவை. இவை குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடியன. மிகப்பெறும் சுழல்காற்று கி. பி. 1999 ஆம் ஆண்டு வீசிய பிரிட்சு கிரேக்கு சுழல் காற்று ஆகும். இது மணிக்கு முந்நூறு மைல்கள் வேகத்தில் அடித்தது. இதன் அகலமே இரண்டு மைல்கள் இருந்ததுடன் நூறு கிலோமீட்டர்களுக்கு மேல் நகர்ந்து சென்று பெருத்த சேதத்தை விளைவித்தது [2][3][4]

வேகம்[தொகு]

சுழல் காற்றொன்றின் விட்டம் பல மீட்டர்கள் முதல் 2 கிலோமீட்டர்கள் வரையாக இருக்கக்கூடும். சராசரி சுழல் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரை வேறுபடலாம். இவ்வாறு சுழல்கின்ற வளி நிரலின் நடுப்பகுதியில் வளிமண்டல அமுக்கம் மிகக் குறைவாகக் காணப்படும். எனவே இவ்வகைச் சுழல் காற்று தரையிலுள்ள பொருட்களை உறிஞ்சி மேலே இழுத்தெடுக்கின்றது.

புவியின் வடவரைக் கோளத்தில் உருவாகும் சுழல் காற்றுக்கள் தம் தாழமுக்க மையத்தைச் சுற்றி இடஞ்சுழியாகச் சுழற்சியடைகின்றன. அதேவேளை, புவியின் தென்அரைக் கோளத்தில் உருவாகும் சுழல்காற்றுக்கள் வலஞ்சுழியாகச் சுழல்கின்றன. சுழல் காற்றொன்று இடம்பெயராமல் ஒரேயிடத்தில் சுழன்று வீசலாம். அல்லது வலிமையாகச் சுழற்சியடைகின்றவாறே முன்னோக்கி நகரலாம். இந்த நகர்வு வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இருக்கக்கூடும்.

நகர்தல்[தொகு]

சாதாரண புயல் காற்றைப் போலன்றி தான் நகரும் குறுகிய பாதை நெடுகே மட்டுமே சுழல் காற்று அழிவை ஏற்படுத்துகிறது. சுழல்காற்றின் விட்டத்துக்கு ஏற்பவே இவ்வழிவுப் பாதையின் அகலம் அமைந்திருக்கும். இரு புறத்திலும் உள்ள வீடுகள் எவ்வித பாதிப்பும் அடையாத நிலையில் நடுவிலுள்ள வீடு மாத்திரம் சுழல்காற்றினால் சிதைந்துபோன நிகழ்வுகள் சகஜமாக இடம்பெற்றுள்ளன.

மிகத் தாழ்ந்த அமுக்கங்களில், ஒடுங்கிய நீராவியினால் ஆக்கப்பட்ட நிரலொன்று உருவாகும் சந்தர்ப்பங்களில் சுழல்காற்று கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக இருக்கும். மழை மேகம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் அவ்வேளைகளில் தோற்றமளிக்கும். சுழல்காற்று பெருமளவு புழுதியைக் கிளப்பிச் செல்லும் சந்தர்ப்பங்களிலும் கண்ணுக்குப் புலப்படக் கூடியதாக மாறும்.

முதிர்ந்த சுழல் காற்றொன்று ஒரு தூண் போல நேராகவோ அல்லது சாய்வாகவோ காணப்படலாம். சிலவேளைகளில் முகில் முழுவதும் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது போல அது பரந்ததாகத் தோன்றலாம். இன்னுஞ் சில சந்தர்ப்பங்களில் யானையின் அசைகின்ற தும்பிக்கை போல அது தென்படக்கூடம். வன்மையான சுழல் காற்றொன்றின் போது பிரதான சுழலைச் சுற்றிவரப் பல சிறு சுழல்கள் காணப்படும்.

சுழல் காற்றுக்கள் தோன்றும் நாடுகள்[தொகு]

சுழல் காற்று

இச்சுழல் காற்றுகள் அண்டார்டிகா கண்டம் தவிர்த்து அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளிலும் வீசுகின்றன. உலகிலே ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையான சுழல் காற்றுக்கள் தோன்றும் நாடு ஐக்கிய அமெரிக்காவாகும். இங்கு உள்ள இராக்கி மலைத்தொடர் பகுதியிலும் ஆப்பலேச்சிய மலைத்தொடர் பகுதிலும் சுழல்காற்று அடிக்கடி வீசுவதால் இதை சுழல்காற்று பகுதி என்றே அழைக்கின்றனர்.(Tornado Alley)[5]

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கின்றது. இவை தவிர சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, வங்காளதேசம் உட்படப் பல நாடுகள் சுழல் காற்றுத் தாக்குதலுக்கு உட்படுகின்றன.

பூஜிற்றா அளவுத்திட்டம்[தொகு]

சுழல் காற்றுக்களின் வேகங்களை நேரடியாக அளப்பது சிரமமான காரியமாகும். அது ஆபத்தானதும்கூடää அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த வளிமண்டலவியற் பேராசிரியரான டெட்சுயா ஃவுஜித்தா என்பவர் சுழல் காற்றுக்களை வகைப்படுத்துவதற்கான அளவுத்திட்டமொன்றை 1971ம் ஆண்டு அறிமுக்கப்படுத்தினார். சுழல் காற்றினால் கட்டடங்களுக்கும் மனிதனால் நிர்மாணிக்கப்பட்ட ஏனைய அமைப்புகளுக்கும் ஏற்படும் சேதத்தை அடிப்படையாக வைத்தே இந்த பூஜிற்றா அளவுத்திட்டம் (F-Scale) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அளவுத்திட்டத்தின்படி F0, F1, F2, F3, F4, F5 என ஆறு வகைகளாகச் சுழல் காற்றுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றுள்

  • F0, F1 நலிவான சுழல்காற்றுக்கள்,
  • F2, F3 வலிமையானவை.
  • F4, F5 பயங்கரமானவை.

F5 வகை சுழல்காற்று வீடுகளை அத்திவாரத்தோடு பிடுங்கி எறியக்கூடியதாக இருக்கும்.

F4, F5 வகைச் சுழல்காற்றுக்கள் தாம் செல்லும் பாதை நெடுகே பேரழிவை ஏற்படுத்த வல்லவை. இவற்றினால் வீடுகளும், பெருமரங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு வீசப்படுகின்றன. பஸ்வண்டிகள், ரெயில் வண்டிகள் போன்ற பெரிய வாகனங்கள் கூட நிலத்திலிருந்து தூக்கி எறியப்படுகின்றன. வீட்டுக் கூரைகள் பல கிலோமீட்டர் துரத்துக்குத் தூக்கிச் செல்லப்படுகின்றன. இவ்வாறு தூக்கி எறியப்படும் பொருட்கள் காரணமாக மேலும் சேதங்கள் ஏற்படுகின்றன. வன்சுழல் காற்றினால் தூக்கி எறியப்படும் வேகம் காரணமாக மென்மையான பொருட்கள் கூட பேரழிவை ஏற்படுத்தலாம்.

சுழல்காற்றுக்கள் உருவாதல்[தொகு]

சுழல்காற்றுக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றி இது வரை தெளிவாக அறியப்படவில்லை. இடி முகிலை நோக்கி மேலே எழும்பும் வெப்பமான காற்றுக்கும், முகிலிலிருந்து கீழ்நோக்கி இறங்கும் குளிரான காற்றுக்கும் இடையில் ஏற்படும் சிக்கலான இடைத்தாக்கங்களே சுழல்காற்றுக்குக் காரணமாக அமைவதாக வானிலையியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

நீரில் சுழல்[தொகு]

நீரில் சுழல்

கடலின் மீது சுழல்காற்று ஏற்படும்போது கடல் நீர் முகிலை நோக்கித் தாரையாக உறிஞ்சி இழுக்கப்படும். இத்தோற்றப்பாடு Water sprout என அழைக்கப்படுகின்றது. கடல்நீரோடு மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் இவ்வாறு முகிலை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதுண்டு. சில இடங்களில் மழை பெய்யும் போது வானிலிருந்து மீன்கள் விழுவதற்கு இவ்வகைச் சுழல்காற்றே காரணம் என நம்பப்படுகின்றது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "merriam-webster.com". merriam-webster.com. பார்த்த நாள் 2012-09-03.
  2. Wurman, Joshua (2008-08-29). "Doppler On Wheels". Center for Severe Weather Research. பார்த்த நாள் 2009-12-13.
  3. "Hallam Nebraska Tornado". National Weather Service. National Oceanic and Atmospheric Administration (2005-10-02). பார்த்த நாள் 2009-11-15.
  4. Roger Edwards (2006-04-04). "The Online Tornado FAQ". Storm Prediction Center. National Oceanic and Atmospheric Administration. பார்த்த நாள் 2006-09-08.
  5. Sid Perkins (2002-05-11). "Tornado Alley, USA" 296–298. Science News. மூல முகவரியிலிருந்து 2006-08-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-09-20.

உசாத்துணை[தொகு]

அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்_காற்று&oldid=1829165" இருந்து மீள்விக்கப்பட்டது