சுபத்ரா ஜோஷி
சுபத்ரா ஜோஷி | |
---|---|
![]() | |
2011 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் சுபத்ரா ஜோஷி | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சுபத்ரா தத்தா 23 மார்ச் 1919 சியால்கோட், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா[1] |
இறப்பு | 30 அக்டோபர் 2003 (aged 86) தில்லி, இந்தியா |
சுபத்ரா ஜோஷி(Subhadra Joshi) (என்கிற தத்தா; 23 மார்ச் 1919 - 30 அக்டோபர் 2003) ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். பின்னர் தில்லி பிரதேச காங்கிரசு குழுவில் தலைவராக இருந்தார்.[2] இவர் சியால்கோட்டின் (இப்போது பாக்கித்தான் ) நன்கு அறியப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.[3] இவரது தந்தை வி. என் தத்தா ஜெய்ப்பூர் மாநிலத்தில் ஒரு காவல்துறை அதிகாரியாஅக இருந்தார். மேலும் இவரது உறவினரான கிருஷ்ணன் கோபால் தத்தா பஞ்சாபில் தீவிர காங்கிரசுகாரர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]
இவர் ஜெய்ப்பூரில் உள்ள மகாராஜா பெண்கள் பள்ளியிலும், இலாகூரில் உள்ள லேடி மெக்லேகன் மேல்நிலைப்பள்ளியிலும், ஜலந்தரில் உள்ள கன்யா மகாவித்யாலயாவிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். இலாகூரில் உள்ள பார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1] கல்லூரி நாட்களிலேயே இவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு[தொகு]
மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், இலாகூரில் படிக்கும் போது வர்தாவில் உள்ள அவரது ஆசிரமத்திற்குச் சென்றார். ஒரு மாணவியாக இவர் 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். மேலும் அருணா அசஃப் அலியுடன் இணைந்து பணியாற்றினார்.[4] இந்த நேரத்தில், இவர் தில்லிக்கு இடம்பெயர்ந்தார். இவர் கைது செய்யப்பட்டு, இலாகூர் பெண்கள் மத்திய சிறையில் சில காலம் அடைத்து வைக்கப்பட்டார். பிறகு, இவர் தொழில்துறை தொழிலாளர்களிடையே வேலை செய்யத் தொடங்கினார்.
பிரிவினையால் ஏற்பட்ட வகுப்புவாத கலவரத்தின் போது, இவர் ஒரு அமைதிக்கான தன்னார்வ தொண்டு அமைப்பை உருவாக்க உதவினார். இந்த 'சாந்தி தளம்' என்ற அமைப்பு பிரச்சனையான காலங்களில் சக்திவாய்ந்த வகுப்புவாத எதிர்ப்பு சக்தியாக மாறியது. ஜோஷி கட்சி அழைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[5] பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் இவர் ஏற்பாடு செய்தார். அனிஸ் கித்வாய் "சுதந்திரத்தின் நிழலில்" என்ற புத்தகத்தில், தானும் சுபத்ரா ஜோஷியும் தில்லியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு விரைந்து சென்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.[5] இவர் இரபி அகமது கித்வாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.[6] சாகரி சாப்ராவுடனான ஒரு நேர்காணலில், ஜோஷி பிரிவினையின்போது வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பேண முயற்சிப்பதைப் பற்றி பேசினார்.[7]
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக[தொகு]
இவர் 1952-1977 வரை நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் - 1952 இல் கர்னால் (அரியானா), 1957 இல் அம்பாலா ( அரியானா ), 1962 இல் பல்ராம்பூர் ( உத்தரப் பிரதேசம் ) மற்றும் 1971 இல் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி.[8] 1962இல் பல்ராம்பூரில் அடல் பிகாரி வாச்பாயை தோற்கடித்த இவர் பிறகு, 1967 மக்களவைத் தேர்தலில் அதே இடத்திலிருந்து அவரிடம் தோற்றார். 1971இல் தில்லியில் உள்ள சாந்தினி சௌக்கில் இருந்து மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டார். ஆனால் இத்தொகுதியிலிருந்து 1977இல் சிக்கந்தர் பக்திடம் தோற்றார். பஞ்சாப் மாநிலத்தின் கர்னால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டபோது முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[9] 1987 இல் கொடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில், கர்னாலில் இருந்து தேர்தலில் நிற்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்யப்பட்டது என்பதை இவர் நினைவு கூர்ந்தார்.[10] 1962 தேர்தலில், பல்ராம்பூரினப்போதைய உறுப்பினராக இருந்த அடல் பிகாரி வாச்பாயை தோற்கடித்தார்.[7][11] சிறப்பு திருமணச் சட்டம், வங்கிகளின் தேசியமயமாக்கல், தனிப்பயார் துறைகளை ஒழித்தல் மற்றும் அலிகார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு இவர் முக்கிய பங்களிப்பை வழங்கினார். குற்றவியல் நடைமுறைச் சட்டம், (19 டிசம்பர் 1957 தேதியிட்ட மசோதா எண் 90 [12]) போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இது 1960இல் நிறைவேற்றப்பட்டது. மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட 15 தனிநபர் மசோதாக்களில் ஒன்றாகும். இவர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தியுடன் உறவு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தி அறக்கட்டளையால் வழங்கப்பட்ட ராஜீவ் காந்தி சத்பாவனா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]
இறப்பும் கெளரவமும்[தொகு]
சுபத்ரா ஜோஷி 30 அக்டோபர் 2003 அன்று தில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 86 வயதில் நீண்ட உடல்நலக்குறைவால் இறந்தார்.[2] இவருக்கு குழந்தைகள் இல்லை.[2] இவரது பிறந்த நாளான 23 மார்ச் 2011 அன்று அஞ்சல்துறை இவரது நினைவாக ஒரு முத்திரையை வெளியிட்டது.[13]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Subhadra Joshi (nee Datta) – A Brief Biographical Account. Commemoration Volume. p. 30. seculardemocracy.in
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Subhadra Joshi dead". தி இந்து. 31 October 2003. Archived from the original on 24 டிசம்பர் 2003. https://web.archive.org/web/20031224123409/http://www.hindu.com/2003/10/31/stories/2003103101701300.htm.
- ↑ Press Information Bureau English Releases. Pib.nic.in. Retrieved on 11 November 2018.
- ↑ Commemorative Postage Stamp on Freedom Fighter Subhadra Joshi released by Pratibha Patil. Jagranjosh.com (28 March 2011). Retrieved on 2018-11-11.
- ↑ 5.0 5.1 1906-1982., Qidvāʼī, Anis (2011). In freedom's shade. [Bangalore]: New India Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780143416098. இணையக் கணினி நூலக மையம்:713787016.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ 7.0 7.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ "NOT 'fair' Punjab". The Tribune. March 19, 2019. https://www.tribuneindia.com/news/punjab/not-fair-punjab/745368.html.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ K., Chopra, J. (1993). Women in the Indian parliament : (a critical study of their role). New Delhi: Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170995132. இணையக் கணினி நூலக மையம்:636124745.
- ↑ MB's Stamps of India: Subhadra Joshi. Mbstamps.blogspot.in (23 March 2011). Retrieved on 2018-11-11.