பெரோஸ் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரோஸ் காந்தி (பெரோஸ் ஜகாங்கிர் காந்தி)
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 ஏப்ரல் 1952 – 4 ஏப்ரல் 1957
தொகுதிபிரதாப்கர் மாவட்டம் (மேற்கு)-ரே பரேலி மாவட்டம் (கிழக்கு)[1]
பதவியில்
5 மே 1957 – 8 செப்டம்பர் 1960
பின்னவர்பயிச் நாத் குரீல்
தொகுதிரே பரேலி[2]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பெரோசு ஜெகாங்கீர் காந்தி

(1912-09-12)12 செப்டம்பர் 1912
மும்பை, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு8 செப்டம்பர் 1960(1960-09-08) (அகவை 47)
புது தில்லி, தில்லி, இந்தியா
இளைப்பாறுமிடம்பார்சி மக்கள் நினைவிடம், அலகாபாத்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இந்திரா காந்தி
பிள்ளைகள்சஞ்சய் காந்தி,
ராஜீவ் காந்தி

பெரோஸ் காந்தி (Feroze Gandhi, 12 செப்டம்பர் 1912 – 8 செப்டம்பர் 1960) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பத்திரிகை எழுத்தாளராவார், மேலும் த நேசனல் ஹெரால்டு மற்றும் லக்னோவில் இருந்து வெளிவந்த 'த நவ்ஜிவன்' செய்திப் பத்திரிகைகளின் வெளியீட்டாளர்.[3]

இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். (1950—52), மேலும் இந்திய மக்களவையின் உறுப்பினராகவும் பிறகு இருந்தார். 1942 இல், இவர் இந்திரா நேருவைத் (இவர் பின்னர் இந்தியாவின் பிரதமரானார்) திருமணம் முடித்தார், மேலும் இவர்களுக்கு நேரு குடும்பத்தின் தொடர்ச்சியாக ராஜிவ் காந்தி (இவரும் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்தார்) மற்றும் சஞ்ஜய் காந்தி என்ற இருமகன்கள் பிறந்தனர்.[4]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஃபெரோஸ் ஜகாங்கிர் காந்தி தெற்கு குஜராத்தின் பரூச்சில் இருந்து பம்பாய்க்கு குடிபெயர்ந்த குஜராத் பார்சி குடும்பத்தில் பிறந்தார். கடல்சார் பொறியாளரான இவரது தந்தை ஃவேர்டோன் ஜஹான்கீர் மற்றும் தாயார் ரட்டிமை ஹட்டாக்கு பிறந்த 5 குழந்தைகளில் ஃபெரோஸ் இளையவராவார்.[3] இவரது தாத்தாவிற்கு சொந்தமான பரம்பரை வீடு கோட்பரிவாடில் என்னுமிடத்தில் இன்னும் இருக்கிறது. இவரது குடும்பம் மகாத்மா காந்திக்கு தொடர்புடையது அல்ல.[3]:p93

1920களின் முற்பகுதியில், இவரது தந்தை ஃவேர்டோன் ஜஹான்கிர் காந்தி இறந்தவுடன், இவரது தாயார் ரட்டிமை காந்தி இவரது திருமணம் ஆகாத அத்தையான டாக்டர் சிரின் கமிஸரியட் உடன் வாழ்வதற்கு அலகாபாத்திற்கு குடிபெயர்ந்தார், டாக்டர் சிரின் கமிஸரியட் நகரின் லேடி டுப்ஃபெரின் மருத்துவமனையில் நன்கு அறியப்பட்ட அறுவை மருத்துவர் ஆவார். இங்கு பெரோஸ் ஜகாங்கிர் காந்தி வித்யா மந்திர் உயர்பள்ளியில் கல்வி பயின்றார், மேலும் ஆங்கிலேயர்-பணியாற்றிய ஈவிங் கிறிஸ்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார்.[3] பிறகு, லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்ஸில் கல்வி பயின்றார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

ஃபெரோஸ் மற்றும் இந்திரா காந்தியின் சித்திரம்

மார்ச் 1930 இல், காங்கிரஸ் சுதந்திரப் போராளிகளின் இளைஞர் அணியான வானர் சேனா உருவாக்கப்பட்டது, அதற்குப்பின் ஃபெரோஸ் முதலில் கமலா நேரு மற்றும் இந்திராவை முதலில் தான் படித்த அலகாபாத்தின் ஈவிங் கிறிஸ்துவக் கல்லூரிக்கு வெளியே பெண் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியல் செய்யும் இடத்தில் சந்தித்தார், வெயில் தாளாமல் கமலா தளர்ந்திருந்த சமயம், அவருக்கு ஆதரவளிப்பதற்காக இளம்வயது ஃபெரோஸ் அவரது நண்பர்களுடன் விரைந்து ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் நடந்தது. அடுத்த நாள் இந்திய சுந்திர இயக்கத்தில் சேர்வதற்காக ஃபெரோஸ் அவரது படிப்பை கைவிட்டார். 1930 இல் அலகாபாத் மாவட்ட காங்கிரஸ் குழுவின் தலைவரான லால் பகதூர் சாஸ்திரியுடன் இவர் சிறையிலிடப்பட்டார், மேலும் பத்தொன்பது மாதங்களுக்கு பைசாபாத் சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு ஒன்றுபட்ட மாநிலத்தின் (ஐக்கிய மாகாணம்) விவசாயிகளுடன் வாடகை-இல்லை போராட்டத்தில் இணைந்தார். மேலும் நேருவுடன் நெருக்கமாக பணியாற்றிக்கொண்டிருக்கும் போது, 1932 மற்றும் 1933 இல் இருமுறை சிறையிலிடப்பட்டார்.[3]

மார்ச் 26, 1942 இல் அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவனில் ஃபெரோஸ் காந்தி மற்றும் இந்திரா காந்தியின் இந்து முறைத் திருமண விழா

நேருவின் குடும்பத்துடன் ஃபெரோஸ் நெருக்கமானார், குறிப்பாக இந்திராவின் தாயார் கமலா நேருவுடன் நெருக்கமானார். 1934 இல், போவல்லியில் உள்ள காசநோய் மருத்துவனையில் கமலா நேரு துன்புறும் போது அவருக்குத் துணையாக ஃபெரோஸ் இருந்தார், டிசம்பரில் (அல்மோரா சிறையில் இருந்து) இந்திரா மற்றும் நேரு இருவரும் அங்கு பார்க்கச் சென்றபோது, கமலாவின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடைக் கண்டு, நேரு மிகவும் ஆழமாக ஈர்க்கப்பட்டார். ஏப்ரல் 1935 இல், கமலாவின் நிலைமை மிகவும் மோசமடைந்து அவர் ஐரோப்பா செல்லும்வரை ஃபெரோஸ் அவருடன் இருந்தார், அங்கிருந்து அவர் திரும்பாத வகையில் 1936 இல் சுவிச்சர்லாந்தில் உள்ள லாஸ்னேயில் கமலா மரணமடைந்தார்.[3] தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இந்திரா மற்றும் ஃபெரோஸ் இங்கிலாந்தில் இருந்த போது, இருவரும் மேலும் நெருக்கமாகினர். மார்ச் 1942 இல், இந்து சமயசடங்குகளின் படி இருவரும் திருமணம் செய்தனர்.[5]

இந்திராவுடன் திருமணத்தை சவகர்லால் நேரு கடுமையாக எதிர்த்தார், மேலும் அவர் இந்த இளம் ஜோடிக்கு எதிராக அறிவுரை கூற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அணுகினார், ஆனால் அச்செயல் பலனளிக்கவில்லை. எனினும், ஆண்டுகள் கடந்த பிறகு, மாமனாரும் மருமகனும் அவர்களது வேறுபாடுகளை மாற்றிக்கொண்டனர், குறிப்பாக காந்தியின் கருத்தாய்வில் ஃபெரோஸ் மேற்கோள் கொண்டதால் இவர்களது வேறுபாடுகள் மறைந்தது. அவர்களது திருமணத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, 1942 இல் இந்த ஜோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், அலகாபாத்தின் நெய்னி மத்திய சிறையில் ஒரு ஆண்டிற்கு ஃபெரோஸ் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளின் சாதகமான குடும்ப வாழ்க்கையில், இந்த ஜோடிக்கு ராஜீவ் காந்தி மற்றும் சஞ்ஜய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் முறையே, 1944 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் பிறந்தனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் பிரதமராக ஜவகர்லால் நேரு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபெரோஸும், இந்திராவும் அலகாபாத்தில் அவர்களது இரு இளம் குழந்தைகளுடன் நிரந்தரமாகத் தங்கினர், மேலும் ஃபெரோஸ் அவரது மாமனார் நிறுவிய செய்திப்பத்திரிகையான த நேசனல் ஹெரால்டின் நிர்வாக இயக்குனராக பதவியேற்றார். இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டடின் முதல் தலைமை நிர்வாகியாகவும் ஃபெரோஸ் பொறுப்பேற்றார்.

மேலும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பிறகு (1950—52), 1952 இல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் ஃபெரோஸ் காந்தி போட்டியிட்டார். இந்திரா டெல்லியில் இருந்து வந்து அவரது பிரச்சாரத்தில் பங்கேற்றார். ஃபெரோஸ் அந்தத் தேர்தலில் வென்றார். விரைவில் ஃபெரோஸ் அவரது சொந்த வழியில் ஒரு முனைப்பான ஆற்றலாக மாறி, அவரது மாமனாரின் அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கினார், மேலும் ஊழலுக்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்கத் தொடங்கினார்.[6]

சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளில் பல தொழில் அதிபர்கள் அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக மாறினர், மேலும் அதில் சிலர் அப்போது பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கினர். டிசம்பர் 1955[7] இல் ஒரு வழக்கு ஃபெரோஸால் வெளிப்படுத்தப்பட்டது, ராம் கிருஷ்ணன் டால்மியா பொதுத்துறை வங்கி மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர், அவர் கைப்பற்றியுள்ள பென்னட் அண்ட் கோல்மனுக்கு முறைகேடாக நிதியுதவி செய்ய இந்த நிறுவனங்களை பயன்படுத்துவதாக ஃபெரோஸ் கூறினார்.

1957 இல், இவர் ரேபரேலியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 இல் நாடாளுமன்றத்தில், அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அரசின் வற்புறுத்தலால் முறைகேடாக ஹரிதாஸ் முந்திரா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக ஃபெரோஸ் குற்றச்சாட்டு எழுப்பினார். நேருவின் அரசாங்கத்துடைய களங்கமில்லாத உருவகத்திற்கு இது ஒரு பெரிய இக்கட்டாக அமைந்தது, மேலும் நிதி அமைச்சர் தி. த. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகுவதற்கும் இது காரணமாக அமைந்தது. இந்திராவுடன் குடும்ப வாழக்கையில் பிளவு ஏற்பட்டது பொதுமக்கள் பார்வைக்கு வந்த பிறகு, மேலும் கூடுதலாக இந்த விவகாரத்தில் ஊடகங்களும் ஆர்வம் காட்டின.

ஃபெரோஸ் பல்வேறு தேசியமயமாக்கத்திற்கான நடவடிக்கைகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து தொடங்கினார். ஒரு சமயத்தில், ஜப்பானின் ரயில்வே எஞ்ஜினுக்கு அரசிடம் ஏறத்தாள இரட்டிப்பு விலைக்கு கட்டணம் வசூலிப்பதால் டெல்கோவை (டாட்டா மோட்டார்ஸ்) தேசியமயமாக்க வேண்டும் என ஃபெரோஸ் அறிவுறுத்தினார். டாட்டாவும் பார்சியாக இருந்ததால், இது பார்சி சமூகத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பிற பிரச்சனைகளின் மூலமாகவும் இவர் தொடர்ந்து அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார், தன் செயல்கள் மூலம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் நன்கு மதிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ஃபெரோஸ் விளங்கினார்.

இறப்பு[தொகு]

1958இல் பெரோசுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பிரதமரின் அலுவல் குடியிருப்பான தீன் முர்தி இல்லத்தில் நேருவுடன் தங்கியிருந்த இந்திரா, நேருவிடம் இருந்து விலகி பூட்டானுக்கு விரைந்து சென்று, ஃபெரோஸ் குணமாவதற்காக காஷ்மீருக்கு அழைத்துச்சென்றார். அங்கு தங்கள் மகன்களுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர்.[8] எனினும் இரண்டாவது மாரடைப்பால் 1960 இல், தில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையாக தற்போது இருக்கும் வில்லிங்டன் மருத்துவமனையில் ஃபெரோஸ் மரணமடைந்தார். பிறகு அவரது உடல் எரிக்கப்பட்டு சாம்பல் அலகாபாத்தில் உள்ள பார்சி இடுகாட்டில் புதைக்கப்பட்டது. ஃபெரோஸின் மூத்த சகோதரரான ஃபரூதினின் மகன் உருஸ்தம் காந்தியின் குடும்பம் அந்நகரத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.[9] அவரது ரேபரேலி மக்களவை தொகுதி, தற்போது ஃபெரோஸின் மருமகளும், ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தியிடம் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Biographical Sketch of First Lok Sabha". Parliament of India. Archived from the original on 26 January 2009. பார்க்கப்பட்ட நாள் 16 April 2009.
  2. "Biographical Sketch of Second Lok Sabha". Parliament of India. Archived from the original on 18 May 2006. பார்க்கப்பட்ட நாள் 16 April 2009.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Frank, Katherine (2002). Indira: the life of Indira Nehru Gandhi. Houghton Mifflin Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-395-73097-X. https://archive.org/details/indiralifeofindi00fran. 
  4. மறக்கப்பட்ட நாட்டுப்பற்றாளர்: ஃபெரோஸ் காந்தி சிறு வயதிலேயே அரசியலில் முத்திரை பதித்தவர்.. பரணிடப்பட்டது 2010-08-26 at the வந்தவழி இயந்திரம் த ஹிந்து, அக்டோபர் 20, 2002.
  5. "Mrs. Gandhi Not Hindu, Daughter-in-Law Says". New York Times. May 2, 1984. பார்க்கப்பட்ட நாள் 2009-03-29.
  6. இரா.செழியன். "பெரோஸ் காந்தி முதல் வதேரா வரை..." பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2014.
  7. Shashi Bhushan, M.P. (1977). Feroze Gandhi: A political Biography. Progressive People's Sector Publications, New Delhi,. ப.166, 179. இந்த மேற்கோள்களை ப் பார்க்க
  8. "Indira Gandhi's courage was an inspiration". Samay Live. 7 Nov 2009. http://www.samaylive.com/news/indira-gandhis-courage-was-an-inspiration/666400.html. 
  9. Kapoor, Comi (10 February 1998). "Dynasty keeps away from Feroze Gandhi's neglected tombstone". The Indian Express இம் மூலத்தில் இருந்து 16 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100516145658/http://www.indianexpress.com/old/ie/daily/19980210/04150074.html. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரோஸ்_காந்தி&oldid=3806925" இலிருந்து மீள்விக்கப்பட்டது