சுகோத்கா மூவலந்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூரக்கிழக்கு சைபீரியாவில் சுக்ச்சி மூவலந்தீவின் இருப்பிடம்.
ரஷ்யாவின் சுக்ச்சி தீபகற்பத்தின் அமெரிக்காவின் சீவர்ட் மூவலந்தீவிற்கு அருகில் இருப்பதைக் காட்டும் வரைபடம்
சுக்ச்சி தீபகற்பம். அமெரிக்க இராணுவ வரைபடம் 1947

சுகோத்கா மூவலந்தீவு அல்லது சுக்ச்சி அல்லது சுகோத்ஸ்கி தீபகற்பம் (Chukotka Peninsula, Chukchi Peninsula, Chukotski Peninsula, ரஷ்யன்: Чуко́тка, ரஷ்யன்: Чуко́тский полуо́стров) என்பது ரசியாவின் தூரக்கிழக்கில், ஆசியாவின் கிழக்குக்கோடியில் அமைந்துள்ள ஒரு மூவலந்தீவு. இதன் கிழக்கு முனை வெல்யேன் சிற்றூருக்கு அருகிலுள்ள தெஷ்னேவ் முனை என்ற இடத்தில் உள்ளது. சுகோத்கா மலைகள் மூவலந்தீவின் மைய மேற்குப்பகுதியில் அமைந்துள்ளன. வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலின் சுக்சி கடல், தெற்கே பசிபிக் பெருங்கடலின் பெரிங் கடல் மற்றும் கிழக்கே அலாஸ்காவிலிருந்து பிரிக்கும் பெரிங் நீரிணை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. சைபீரியாவில் உள்ள பழங்குடி மக்களுக்கும் சில ரஷ்ய குடியேற்றத்தார்களுக்கும் பாரம்பரியத் தாயகமாக உள்ள இந்த மூவலந்தீவு ரஷ்யாவின் சுகோத்கா தன்னாட்சி வட்டாரத்தின் ஒரு பகுதியாகும்.[1] மூவலந்தீவு, வடக்குக் கடல்வழிப் பாதை அல்லது வடகிழக்கு நீர்வழிப்பாதையில் அமைந்துள்ளது.

நிலவமைப்பு[தொகு]

மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஆசியாவின் ஒரே நிலப்பகுதி இதுவேயாகும். சுகோத்கா மூவலந்தீவின் பெரும்பகுதி 1000 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. தனித்தனியாக உயர்ந்துள்ள சிகரங்கள், வலுவாக பிரிக்கப்பட்ட உச்ச மேற்பரப்புகள் மற்றும் பாறைச்சரிவுகளுக்கு மேலே உயர்ந்து நிற்கின்றன. செவ்டாகன், எர்குவியேம், நுன்யிமொவாம் ஆகிய மலையாறுகளின் ஆழமான பள்ளத்தாக்குகளால் மலைத்தொடர்கள் குறுக்கிடப்படுகின்றன. சுக்ச்சி மூவலந்தீவின் மிக உயரமான இடம் பிரவிடேன்ஸ் விரிகுடாவில் சின்யாவின்ஸ்கி என்று அழைக்கப்படும் 1194 மீ உயரம் கொண்ட சிகரம் ஆகும். மலைகள் கடற்கரையை நோக்கிச் சரிந்து, செங்குத்தானப் பாறை முகடுகளை உருவாக்குகின்றன.

காலநிலை[தொகு]

காலநிலை கடுமையானது, கடற்கரைகளில் கடற்காலநிலையையும், உட்புறத்தில் கடுமையான கண்டக் காலநிலையையும் கொண்டுள்ளது. குளிர்காலம் 10 மாதங்கள் வரை நீடிக்கும். உறைந்த பாறைகளின் வெப்பநிலை, சராசரியாக, மலைத்தொடர்களின் அச்சுப் பகுதிகளில் −10 °C மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் −6 °C இருக்கும். பொதுவாக, இது பசிபிக் பெருங்கடலின் வெப்பமயமாதல் காரணமாக, பிரவிடேன்ஸ் விரிகுடாவிற்கருகில் உயர்கிறது.

நிலைபனி பரவலாகக் காணப்படுகின்றது. முழுமையாக (30-40 மீ வரை தடிமன் கொண்ட) பனிப்படிமங்களால் மூடப்படாத தாலிக்குகள் எனப்படும் பாறைகள் பெரிய ஆறுகளின் கீழ் பகுதிகளிலும், நிலத்தடி உறைபனி கரைவதால் அடியிலிருக்கும் பாறைகளின் சீரற்ற வீழ்ச்சியின் காரணமாக உருவாகும் மண் மிகப்பெரிய ஏரிகளின் கீழே மட்டுமே காணப்படுகின்றன. நிலைபனியின் தடிமன் கடலில் இருந்து தொலைவில் உள்ள சுக்ச்சி மூவலந்தீவின் உட்பகுதியின் பள்ளத்தாக்குகளில் 200–300 மீ வரையிலும் நிலப்பரப்பின் மிக உயர்ந்த பகுதிகளில் 500–700 மீ வரையும் அமைந்திருக்கும்.

தாவரங்கள்[தொகு]

சுகோத்கா மூவலந்தீவின் பகுதி முற்றிலும் தூந்திர மண்டலத்தில் அமைந்துள்ளது. எல்லா இடங்களிலும் காடுகள் இல்லை, எனினும் ஆர்க்டிக் வில்லோ, நாற்கிளை காசியோபியா, அவுரிநெல்லிகள், கிரான்பெர்ரி, பார்ட்ரிட்ஜ் புல் ஆகிய தாவரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன, அவற்றின் உயரம் 5 முதல் 20 செ.மீ வரை இருக்கும். ஒல்லியாக இருக்கும் பிர்ச், ஆல்பைன் பியர்பெர்ரி, லேப்லாண்ட் டயாபென்சியா ஆகியவை குறைவாகவே காணப்படுகின்றன.

விலங்கினங்கள்[தொகு]

ஆர்க்டிக் நரி மற்றும் ஆர்க்டிக் ஓநாய் பரவலாக உள்ளன, அதே போல் துருவ மான், வெள்ளை முயல், நீண்ட வால் கொண்ட தரை அணில் மற்றும் வடக்கு பைக்குகளும் காணப்படுகின்றன. மலைப்பகுதிகளில், பனி ஆடுகள் காணப்படுகின்றன.

சிஸ்டிக், மோட்டார், கில்லெமோட், ஹட்செட், பெரிங் கர்மரண்ட் மற்றும் குல் கூட்டுப்பறவை போன்ற ஏராளமான பறவைக்கூட்டங்கள் கடல்பாறைக் கரையில் காணப்படுகின்றன. தூந்திராவில், கிழக்கு சைபீரிய தூந்திர வாத்து, வெள்ளைநிற வாத்து, கிழக்கு சைபீரியக் கருப்பு வாத்துக்கள், மீன்கொத்திகள், ஃபிளிப்பர்கள், சாண்ட்ஹில் கொக்குகள், சாண்ட்பைப்பர், கடற்கிளி, ஸ்குவாஸ் மற்றும் பிற இனங்கள் உள்ளன. மலையில், வெள்ளை ஆந்தை, வெள்ளை பார்ட்ரிட்ஜ், அமெரிக்க மஞ்சள் வாக்டெயில் மற்றும் கிழக்கு சைபீரிய கர்லேவ் கூட்டுப்பறவை ஆகியவை காணப்படுகின்றன.[2]

தொழில்கள்[தொகு]

மூவலந்தீவில் மேற்கொள்ளப்படும் தொழில்களாவன: சுரங்கம் (தகரம், ஈயம், துத்தநாகம், தங்கம் மற்றும் நிலக்கரி), வேட்டையாடுதல் மற்றும் பொறிவைத்துப் பிடித்தல், துருவ மான் வளர்த்தல் மற்றும் மீன் பிடித்தல்.

ஜோசப் மார்ட்டின் பாவர் எழுதிய அஸ் ஃபார் அஸ் மை ஃபீட் வில் கேரி மீ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, கொர்னேலியஸ் ரோஸ்ட் சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சிறை முகாம் / ஈயச்சுரங்கத்தின் இருப்பிடம் இதுவென்று கூறப்பட்டது. இருப்பினும், அத்தகைய முகாமின் இருப்பு மறுக்கப்பட்டுவருகின்றது.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Chukchi Peninsula". Encyclopedia.com. Accessed September 2010.
  2. Черешнев, Игорь Александрович (2008) (in Russian). Пресноводные рыбы Чукотки. Магадан: СВНЦ ДВО РАН. http://ashipunov.info/shipunov/school/books/chereshnev2008_presn_ryby_chukotki.pdf. 
  3. Falsche Nachkriegserinnerungen - Der Schnee von gestern (செருமன் மொழி) Sueddeutsche Zeitung, published: 23 March 2010, accessed: 21 December 2011

மேலும் அறிந்துகொள்ள[தொகு]

  • Aĭnana, L., and Richard L. Bland. Umiak the traditional skin boat of the coast dwellers of the Chukchi Peninsula : compiled in the communities of Provideniya and Sireniki, Chukotka Autonomous Region, Russia 1997-2000. Anchorage: U.S. Dept. of the Interior, National Park Service, 2003.
  • Dinesman, Lev Georgievich. Secular dynamics of coastal zone ecosystems of the northeastern Chukchi Peninsula Chukotka : cultural layers and natural depositions from the last millennia. Tübingen [Germany]: Mo Vince, 1999. ISBN 3-934400-03-5
  • Dikov, Nikolaĭ Nikolaevich. Asia at the Juncture with America in Antiquity The Stone Age of the Chukchi Peninsula. St. Petersburg: "Nauka", 1993.
  • Frazier, Ian, Travels in Siberia, Farrar, Straus, and Giroux, 2010. Travelogue in Siberia.
  • Portenko, L. A., and Douglas Siegel-Causey. Birds of the Chukchi Peninsula and Wrangel Island = Ptitsy Chukotskogo Poluostrova I Ostrova Vrangelya. New Delhi: Published for the Smithsonian Institution and the National Science Foundation, Washington, D.C., by Amerind, 1981.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோத்கா_மூவலந்தீவு&oldid=3004308" இலிருந்து மீள்விக்கப்பட்டது