சிசெல் பெலிக்கொ
சிசெல் பெலிக்கொ | |
---|---|
பிறப்பு | 7 திசம்பர் 1952 வில்லிங்கென், பாடன்-வுயர்ட்டம்பெர்கு, மேற்கு செருமனி |
பணி | இடப்பெயர்வு மேலாளர் |
அறியப்படுவது | பாலியல் வன்முறைக்குள்ளானவர் |
வாழ்க்கைத் துணை | தொமினிக் பெலிக்கொ |
பிள்ளைகள் | 3 |
சிசெல் பெலிக்கொ (Gisèle Pelicot, பிரெஞ்சு மொழி: [ʒizɛl peliko] (ⓘ); பிறப்பு:திசம்பர் 7, 1952) என்பவர் ஒரு பிரஞ்சுப் பெண்மணி. இவர் "மாசான் பாலியல் வன்புணர்வு வழக்கின்" பாதிப்பாளியாவார். இவரது கணவரான டொமினிக் பெலிக்கொ, 2011 முதல் 2020 வரை சிசெல் பெலிக்கொவிற்கு மயக்கமருந்தளித்து, சுயநினைவற்ற நிலையில் இவரை வன்புணர்ந்தார். தான் மட்டுமல்லாது, ஒரு பிரஞ்சு வலைத்தளத்தின் மூலமாகத் தொடர்பு கொண்டு வரவழைக்கப்பட்ட 83 நபர்களும் (குறைந்தபட்சம்) சிசெல் பெலிக்கொவைத் தன்னினைவற்ற நிலையில் வன்புணரச் செய்தார். 2020 வரை, சிசெல் பெலிக்கொ இது குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. 2020 இல் வணிகவளாகமொன்றில், ஒரு பெண்மணியின் உள்ளாடைக்குள் காணொலி பதிவு செய்த குற்றத்திற்காகக் காவற்துறையினரால் டொமினிக் கைது செய்யப்பட்டப்போது, அவரது கணினியில் செசெல் பெலிக்கொ வன்புணரப்பட்ட காணொலிப் பதிவுகள் சிக்கின. இதன் பின்னரே சிசெல் பெலிக்கொவிற்கு இவ்விவரம் தெரியவந்தது.
வன்புணர்வு, வன்புணர்வு முயற்சி, பாலியல் தாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக டொமினிக், மேலும் 50 பேர்கள் மீது 2024 இல் விசாரணை நடந்தது. வெளியாருக்குத் தெரியாமல், தனிப்பட்டமுறையில், பாதிப்பாளியை அடையாளப்படுத்தாமல், விசாரணை நடத்தப் பாதிப்பாளிக்கு அளிக்கப்பட்ட உரிமையை, சிசெல் பெலிக்கொ மறுத்து விட்டார். வழக்கு வெளிப்படையாக நடக்க வேண்டுமென்று விரும்பினார். இவ்வழக்கின் விசாரணை, ஒட்டுமொத்த உலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தது. பாலியல் தாக்குதலுக்கு ஆளான அனைத்துப் பாதிப்பாளிகளின் சார்பாக முன்னின்ற சிசெல் பெலிக்கொவிற்கு, உலகம் முழுவதிலிருந்தும் ஆதரவு பெருகியது. பிபிசி, 2024 ஆம் ஆண்டின் சிறந்த 100 பெண்கள் பட்டியலிலும், பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 25 பெண்களின் பட்டியலிலும் இடம்பெற்றார்.
திசம்பர் 2024 இல், விசாரிக்கப்பட்ட 51 பேரில் டொமினிக் உள்ளிட்ட 50 பேருக்கு, சிசெல் பெலிக்கொவை வன்புணர்ந்தது, வன்புணர முயற்சித்தது, பாலியலாக தாக்கியது ஆகிய குற்றங்களுக்காகத் தண்டனையளிக்கப்பட்டது. சிசெல் பெலிக்கொவை வன்புணர்ந்த குற்றத்துக்குள்ளாகாத 51 ஆவது நபருக்கு, அவரது சொந்த மனைவியை வன்புணந்த குற்றத்திற்குத் தண்டனை கிடைத்தது. அதிகபட்சமாக டொமினிக்கிற்கு 20 ஆண்டுகளும் மற்றவர்களுக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
பின்னணி
[தொகு]சிசெல் பெலிக்கொ, மேற்கு செருமனியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வில்லிங்கென் என்ற ஊரில் திசம்பர் 7, 1952 இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு இராணுவ வீரர். இவரது ஐந்தாவது வயதில் பிரான்சுக்கு குடியேறினர்; இவரது தாய் புற்றுநோயால் இறந்தார். 1971 இல் தனது வருங்காலக் கணவரான டொமினிக் பெலிக்கொவைச் சந்தித்தார்.[1] ஏப்ரல் 1973 இல் இருவரும் திருமணம் செய்துகொண்டு பாரிசின் சுற்றுவட்டாரப்பகுதியில் வசித்து வந்தனர்.[2][3]திருமணமான துவக்க காலத்தில் இவர்களுக்கு டேவிட் என்ற மகனும் கரொலின் என்ற மகளும் பிறந்தனர்; பின்னர் 1986 இல் மற்றொரு குழந்தை (பிளோரியன்) பிறந்தது.[2]
சிசெல் பெலிக்கொ, பிரான்சு நாட்டின் மாநில மின்சார நிறுவனத்தின் நிர்வாகத்துறையில் பணியாற்றினார். டொமினிக் மின்பணியாளராக, மனைவணிக முகவராகப் பணியாற்றிதோடு, பல தொழில்களில் ஈடுபட்டுத் தோல்வியைச் சந்திந்தார்.[4][5] சிசெல் பெலிக்கொ தன் உடன்பணியாளருடன் மூன்றாண்டுகள் தொடர்பு கொண்டிருந்தார்.[6] டொமினிக்கிற்கு இதுகுறித்து தெரியவந்ததும், செசெல் பொலிக்கொவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் இருவரும் சமாதானம் ஆகி மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.[2] 2001 இல் பணச்சிக்கல் காரணமாக விவாகரத்து பெற்றனர்.எனினும், இருவரும் ஒன்றாக வசித்து, பின்னர் 2007 இல் மறுமணம் செய்து கொண்டனர்.[2] 2013 இல் பணி ஓய்வுக்குப்பின், தென்கிழக்கு பிரான்சிலுள்ள மாசான் நகருக்குக் குடிபெயர்ந்தனர்.[5] அங்கு சிசெல் பெலிக்கொ ஒரு பாடகர் குழுவில் சேர்ந்தார். கோடை விடுமுறையில் அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களுடன் இணைந்தனர்.[5]
பாலியல் முறைகேடும் கண்டுபிடிப்பும்
[தொகு]இருவரும் பாரிசுக்கருகில் வாழ்ந்து வந்தபோது, சிசெல் பொலிக்கொவிற்கு, பென்சொடயசெபின் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதை உட்கொண்டபின் அவருக்கு ஏற்பட்ட ஆழ்தூக்க நிலையை டொமினிக் சாதகமாக்கிக் கொண்டு, அந்த ஆழ்தூக்க நிலையிலேயே சிசெல் பெலிக்கொவை வன்புணரலானார். டொமினிக், தனது மருத்துவரிடமிருந்து பெற்றுவந்த தூக்க மாத்திரைகளையும் சிசெல் பெலிக்கொவின் உணவிலும் குடிபானங்களிலும் கலந்து கொடுத்து அவரை தன்நினைவிழக்க வைக்கத் தொடங்கினார்.[7][8]
இருவரும் மாசானுக்குக் குடிபெயர்ந்த பின்னர், சுயநினைவற்ற நிலையிலுள்ள சிசெலை வன்புணர்வதற்காக, டொமினிக் இணைய வழியில் வேறுவேறு நபர்களையும் வரவழைக்கத் தொடங்கினார். இந்த மருந்துகளின் தாக்கத்தால் சிசெலுக்கு நினைவிழப்புகள் ஏற்படத் துவங்கியது. தனக்கு ஆல்சைமர் நோய் அல்லது மூளையில் புற்றுநோய் வந்திருக்கக் கூடுமோ என்று ஐயுற்ற சிசெல், அவற்றுக்கான மருத்துவச் சோதனைகளை செய்துகொண்டார். ஆனால் அச்சோதனைகளின் முடிவுகள் அவருக்கு அத்தகைய நோய்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்தன. இதனால் சிசெலுக்கு சந்தேகம் தோன்ற, டொமினிக்கிடம் தனக்கு அவர் ஏதாவது மருந்துகளைக் கலந்து தந்துவிட்டாரா என்றும் கேட்டுவிட்டார். அவரது சந்தேகத்தை மறுத்த டொமினிக்கை நம்பியும்விட்டார். இதனால் மருந்தின் உதவியால் தன்னை சுயநினைவு இழக்கச்செய்து சொந்தக் கணவனாலும் பிற ஆண்களாலும் தான் வன்புணர்வு செய்யப்படும் கொடுமையை அறிந்துகொள்ளாமலேயே இருந்தார்.[7][8]
2020 இல் வணிகவளாகமொன்றில் ஒரு பெண்ணின் உள்ளாடைக்குள் திருட்டுத்தனமாக காணொலிப் பதிவுசெய்த குற்றத்துக்காக டொமினிக் பெலிக்கொ காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கணினியில் தன்னினைவற்ற சிசெலை அவரது கணவரும் 83 பிற ஆண்களும் வன்புணரும் காட்சிப்பதிவுகள் சிக்கின. நவம்பர் 2, 2020 அன்று காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்ட சிசெலிடம் இப்பதிவுகள் காட்டப்பட்டன. "50 ஆண்டுகளாகத் தான் கட்டமைத்த அனைத்தும் இடிந்துவிட்டது" என சிசெல் பெலிக்கொ கூறினார். டொமினிக் பொலிக்கொ கைதுசெய்யப்பட்டார். சிசெல் பெலிக்கொ தங்களது குடும்ப வீட்டைவிட்டு வெளியேறி டொமினிக்கிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்குப் பதிவுசெய்தார்; அதன் பின்னர் செப்டம்பர் 2024 இல் வழக்கு வன்புணர்வு விசாரணைக்கு வரும்வரை அவர் தனது முன்னாள் கணவரைச் சந்திக்கவேயில்லை. முறைகேடு வழக்கு விசாரணைக்கு வருமுன்னர், விவாகரத்து கிடைத்தது[7][8]
வழக்கு விசாரணை
[தொகு]டொமினிக் மீதும், கணினிப் பதிவுகளினால் அடையாளங்காணப்பட்ட 50 பேர் மீதும் செப்டம்பர் 2024 இல் வழக்கு விசாரணை தொடங்கியது. பாலியல் வன்புணர்வு பாதிப்பாளிகளுக்குத் தனிப்பட, வெளியாட்கள் அறியாவண்ணம், அடையாளம் தெரியப்படாத வகையில் விசாரணையை நடத்தவேண்டும் என்று கேட்கும் உரிமை உள்ளது. ஆனால் சிசெல் அதனை மறுத்து விட்டார். வழக்கின் விசாரணை அனைவரும் அறியும்வகையில்தான் நடத்தப்பட வேண்டுமென்றும், தன்னைப் போன்ற பாதிப்பாளிகள் வெளிவருவதற்கு இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமென்றும் கூறினார்.[9] வண்புணர்வு படப்பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டபோது பொதுமக்கள் இருக்கவேண்டாம் என்று நீதிபது கூறியதையும் சிசெல் மறுத்துவிட்டார்.[10] அவரை வன்புணர்ந்தவர்களச் சுட்டிக்காட்டி "அவமானம் அவர்களுக்கே" என்றார்[11] காணொலிப் பதிவுகளைக் குறித்து, "அதிர்ஷ்டவசமாக எனக்கு ஆதாரங்கள் உள்ளன; சான்றுகள் கிடப்பது அரிதானது; எனவே அனைத்து பாலியல் பாதிப்பாளிகளின் சார்பாக நான் இதனை நேர்கொள்ளத்தான் வேண்டும்" என்று கூறினார்.[12] சிசெலைத் தைரியசாலி என்றபோது அவர் சொன்னது: "இது தைரியமல்ல; சமுதாயத்தை மாற்றுவதற்கான மன உறுதியும் திடசிந்தையுமே ஆகும்."[13]
திசம்பர் 19, 2024 அன்று, டொமினிக்கிற்கு உச்சபட்ச சிறைத்தண்டனையான 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற 50 பேரில் 49 பேருக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை சிறத்தண்டனை வழங்கப்பட்டது. ஒருவருக்கு மட்டும் சிசெலை வன்புணர்ந்த ஆதாரம் கிடைக்கவில்லை; எனினும் அவர் தன் சொந்த மனைவியை டொமினிக்கின் உதவியுடன் மயக்கநிலைக்கு உள்ளாக்கி, வன்புணர்ந்த குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனையளிக்கப்பட்டது.[14][15]
தகவேற்பும் தாக்கமும்
[தொகு]தனது அடையாளத்தை மறைக்க மறுத்து, வழக்கு விசாரணையை வெளிப்படையாக நடத்த வற்புறுத்திய சிசெலின் தீர்மானமும் மன உறுதியும், அவர் காட்டிய கண்ணியமும், அவருக்குப் பெருமளவில் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தன. நாள்தோறும் நீதிமன்றத்திலிருந்து வெளிவரும்போது மக்கள் வெளியில் காத்திருந்து அவரைப் பாராட்டினர்; அவரது உருவப்படம் தெரு ஓவியங்களில் இடம்பெற்றது; நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள சுவர்களில், அவருக்கு ஆதரவான வாசகங்கள் காணப்பட்டன.[11] முதுபெண்களின் பாலியல் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய அமைப்பான, "ஆஸ்திரேலிய முதுபெண்கள் வலையமைப்பானது", பழங்குடிப் பெண்களால் செய்யப்பட்ட கழுத்துக்குட்டையொன்றை சிசெலுக்கு அனுப்பி வைத்தது; சிசெல் அதனை நீதிமன்றத்திற்கு வரும்போது அடிக்கடி அணிந்திருந்தார். அப்பரிசு தன்னை நெகிழவைக்கிறது என்றும், தங்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் உலகப் பெண்களை அது ஒருங்கிணைக்கிறது என்றும் தன் வழக்கறிஞர் மூலம் தெரிவித்தார். [16] சிசெலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதோடு, அவர் பெண்ணியத்தின் சின்னமாகவும் ஆனார்.[11][17]
பிபிசி, 2024 ஆம் ஆண்டின் சிறந்த 100 பெண்கள் பட்டியலிலும்,[18] பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 25 பெண்களின் பட்டியலிலும்[19] சிசெல் பொலிக்கொ இடம்பெற்றார்.
தீர்ப்பு வெளியானதும் சிசெலின் ஆதரவாளவர்கள் அவரது மன உறுதியையும் தைரியத்தையும் பாரட்டினர்; அவரது கணவருக்கு வழங்கப்பட்டத் தண்டனையைக் கொண்டாடினர்.[13] பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இம்மானுவேல் மாக்ரோன், சிசெலின் "கண்ணியத்துக்கும் தைரியத்துக்கும்" நன்றி தெரிவித்தார்;[20] எசுப்பானிய பிரதம மந்திரி, செருமானிய சான்சுலர் ஒலாஃப் சோல்த்சு ஆகிய வெளிநாட்டுத் தலைவர்களால் பாரட்டப்பெற்றார்; பன்னாட்டு செய்தி ஊடகங்கள், சிசெலுக்குத் தகவேற்புச் செய்தன.[21][22]
எசுப்பானிய சமத்துவத்துக்கான அமைச்சகம், ஆதூரியா பகுதியில் பாலியல் அடிப்படையில் பெண்களுக்கெதிரான வன்முறைப் பாதிப்பாளர்களுக்காக, ஒரு வரவேற்பு மையம் திறக்கப்படுமென்றும், அதற்கு சிசெல் பெலிக்கொவின் பெயரிடப்படுமென்றும் அறிவித்தது.[21]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Viols de Mazan : Gisèle Pelicot, nouveau symbole des victimes de violences et de la soumission chimique". actu.fr (in பிரெஞ்சு). 14 September 2024.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Procès des viols de Mazan : la "personnalité à double facette" de Dominique Pelicot, jugé pour avoir drogué et livré sa femme à des hommes". francetvinfo (in பிரெஞ்சு). 9 September 2024.
- ↑ Prange de Oliverira, Astrid (25 October 2024). "Missbrauchsprozess in Frankreich: Wer ist Gisèle Pelicot?". DW (in ஜெர்மன்).
- ↑ "Pelicot rape trial: It is Gisèle's name that will be remembered". The Guardian. 23 November 2024.
- ↑ 5.0 5.1 5.2 "Final phase for mass rape trial that has horrified France". BBC. 17 November 2024.
- ↑ "Inferiority complex, revenge? Gisèle Pelicot testifies on husband's possible motives for mass rape". France24. 25 October 2024.
- ↑ 7.0 7.1 7.2 "New name, no photos: Gisèle Pelicot removes all trace of her husband". BBC. 15 December 2024.
- ↑ 8.0 8.1 8.2 "'Not all men, but a lot of them': will Gisèle Pelicot rape trial finally change France's attitude to sexual abuse?". The Guardian. 21 September 2024.
- ↑ "France mass rape survivor Gisele Pelicot becomes a feminist hero". France24. 12 December 2024.
- ↑ "Pelicot rape trial: press and public allowed to see video evidence". France24. 4 October 2024.
- ↑ 11.0 11.1 11.2 "After Pelicot: how one woman's courage has pushed France to a turning point". The Guardian. 26 October 2024.
- ↑ "Gisèle Pelicot lifts her sunglasses and chooses to fight back". BBC. 9 December 2024.
- ↑ 13.0 13.1 Chrisafis, Angelique (20 December 2024). "Cheers, chants and hope for change: supporters thank Gisèle Pelicot for her bravery as rape trial ends". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 20 December 2024.
- ↑ "Ex-husband of Gisele Pelicot found guilty in France mass rape trial". France 24. பார்க்கப்பட்ட நாள் 19 December 2024.
- ↑ "Who are the men convicted in the Gisèle Pelicot rape trial". BBC. 19 December 2024.
- ↑ "Gisèle Pelicot 'honoured' to wear scarf from Australian women's group in court". The Guardian. 6 November 2024.
- ↑ "Gisèle Pelicot: How an ordinary woman shook attitudes to rape in France". BBC. 18 December 2024.
- ↑ "BBC 100 Women 2024: Who is on the list this year?". BBC.
- ↑ "The FT's 25 most influential women of 2024". Financial Times. 6 December 2024.
- ↑ Kirby, Paul (20 December 2024). "Macron thanks Gisèle Pelicot for courage and dignity in mass rape trial". BBC Home. பார்க்கப்பட்ட நாள் 20 December 2024.
- ↑ 21.0 21.1 "International leaders hail Gisele Pelicot's courage after court sends her rapists to jail". The Brussels Times. 20 December 2024. பார்க்கப்பட்ட நாள் 20 December 2024.
- ↑ Sullivan, Helen (20 December 2024). "'The world's bravest woman': what the papers say about the end of the Pelicot trial". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 20 December 2024.