சாரதாம்பாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரதாம்பாள்
தந்தை மற்றும் 3 வயது மகள் கொழும்பில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் பங்குபற்றினர்.
பிறப்பு1970
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு(1999-12-28)28 திசம்பர் 1999
புங்குடுதீவு, இலங்கை
சமயம்இந்து
பெற்றோர்சந்திரசேகர சர்மா

சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (Sarathambal Saravanbavananthakurukkal, 1970 - திசம்பர் 28, 1999) என்பவர் 1999, திசம்பர் 28 ஆம் நாள் பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் சரவணபவானந்தக் குருக்கள் என்பவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளின் தாயுமான 29 வயது சாரதாம்பாளின் இறந்த உடல் சருகுகளுக்கும் இலைகளுக்கும் கீழ் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கிடந்ததை ஊர்மக்கள் கண்டுபிடித்தனர். இந்நிகழ்வு இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாக உலகளாவிய அளவில் பேசப்பட்டது[1][2][3].

நிகழ்வு[தொகு]

ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (AHRC) அறிக்கையின் படி[4], உள்ளூர் இந்துக் கோயில் குருக்களின் மகளான 29 வயது சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் இலங்கைக் கடற்படையினர் எனச் சந்தேகிக்கப்படுவோரால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் புங்குடுதீவு என்ற இடத்தில் அவரது வீட்டில் இருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டார்[1][5].

பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையின் படி, சாரதாம்பாளின் வீடு கடற்படைத் தளத்தில் இருந்து 500 மீ தூரத்தில் அமைந்திருந்தது. அவரது தந்தையும், சகோதரரும் கறுப்பு உடையில் வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் வீட்டினுள் வைத்து கட்டப்பட்டுள்ளனர். சாரதாம்பாளின் இறந்த உடல் வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள தரிசு நிலமொன்றில் அடுத்த நாள் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டது[1].

புங்குடுதீவிலும், யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை அடுத்து[6] சாரதாம்பாளின் உடல் மருத்துவ ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. உடலைப் பரிசோதித்த அரசு மருத்துவ அதிகாரி, பெண்ணின் உள்ளாடை அவரது வாயினுள் அடைக்கப்பட்டதில் மூச்சுத் திணறி இறப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இறப்புக்கு முன்னர் அவர் பலவந்தமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரது அறிக்கை தெரிவித்தது[1].

சாரதாம்பாளின் இறுதி நிகழ்வுக்கு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் சென்று உரை நிகழ்த்தினர்[7].

அரசு விசாரணை[தொகு]

அன்று அரசுத்தலைவராக இருந்த சந்திரிக்கா குமாரதுங்க 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கவனிக்கும் ஐநா சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு இலங்கை அரசிடம் இருந்து பெருமளவு ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்[1]. திசம்பர் 1999 பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சிறிதளவு முயற்சியே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்[8].

தமது வீட்டுக்கு வந்திருந்த கடற்படையினரின் ஆளடையாளத்தை வெளியிடக் கூடாதென சாரதாம்பாளின் தந்தையும் சகோதரரும் எச்சரிக்கப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவித்துள்ளது. இலங்கைக் காவல்துறையின் புலன்விசாரணைத் திணைக்களத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,

"சகோதரர் தமது வீட்டுக்கு வந்திருந்த நால்வரின் ஆளடையாளத்தை நிரூபிக்கத் தவறி விட்டார்".[1]

எனக் கூறியுள்ளர்.

குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை அதிகாரிகள் வேறு இடங்களுக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை தனது அறிக்கையில் தெரிவித்தது[1].

சாரதாம்பாளின் பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கில் சாட்சியங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாதமையால், வழக்கைத் தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மே 2001 இல் விசாரணைக் குழுவுக்குத் தெரிவித்தது[9].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "SRI LANKA: Rape in custody 2002". Amnesty.org. 2007-02-22. https://web.archive.org/web/20030605051322/http://web.amnesty.org/library/index/engasa370012002 from the original on 2003-06-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24. {{cite web}}: |archiveurl= missing title (help)
  2. "UN press release on Sarathambal case". UNHCR.org. 2007-03-28.
  3. "Sarathambal murder". Sri Lanka Monitor.org. 2007-03-27. Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
  4. "UN report". HRI.ca. 2007-03-27. Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
  5. "SRI LANKA: Systematic Detention,Torture, Rape and Murder as Weapon of War". AHRC.org. 2007-03-27.
  6. "Violence against women" (PDF). Humiliation Studies.org. 2007-03-28.
  7. "Sarathambal funeral held". Tamilnet.com. 2007-03-27.
  8. "Sri Lanka country report". Human Rights Watch. 2000. பார்க்கப்பட்ட நாள் 2007-03-27.
  9. "Evidence". Sri Lanka monitor. May 2001. Archived from the original on 2005-05-19. பார்க்கப்பட்ட நாள் 2007-03-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதாம்பாள்&oldid=3575236" இலிருந்து மீள்விக்கப்பட்டது