சாயமேற்றல் (உயிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு ஒளி நுணுக்குக்காட்டியின் மேடையில், சாயமேற்றல் மூலம் தயார் செய்யப்பட்ட மாதிரி வைக்கப்பட்டுள்ளது

சாயமேற்றல் (Staining) என்பது ஒரு மாதிரியை அல்லது உயிரணுக்களை அல்லது இழையங்களை ஆய்வு செய்வதற்காக நுணுக்குக்காட்டி ஊடாக அவதானிக்கும்போது, அங்கே உயிரணுக்கள் அல்லது இழையங்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி அவற்றை இலகுவாக அடையாளப்படுத்துவதற்காக, நுண்ணோக்கியியலில் பயன்படுத்தப்படும் ஒரு துணை தொழினுட்பம் ஆகும்.

உயிரியலிலும், மருத்துவத்திலும் பலவகையான நுணுக்குக்காட்டிகள் மூலம் பார்த்து, வெவ்வேறு உயிரியல் இழையங்களை, வேறுபடுத்தி சிறப்பித்துக் கண்டு கொள்வதற்காக நிறமூட்டிகள் / சாயங்கள் பயன்படுத்தப்படும். ஒரு மாதிரியில் ஒரு பகுதி இழையமோ (எடுத்துக்காட்டாக தசை நார்கள், இணைப்பிழையம் போன்றவற்றைக் அடையாளம் காண) அல்லது ஒரு உயிரணுத் தொகுதியோ எடுத்துக்காட்டாக: (குருதியில் வேறுபட்ட உயிரணுக்களை அடையாளப்படுத்த) அல்லது தனிக்கலங்களோ (நுண் உறுப்புக்களை அடையாளப்படுத்த) சாயமேற்றப்படலாம். உயிர்வேதியியலில் ஒரு பொருளில் உள்ள டி.என்.ஏ, புரதம், காபோவைதரேட்டு, லிப்பிட்டு போன்ற மூலக்கூறுகளை தரமறியவும், அளவிடவும் அக்குறிப்பிட்ட மூலக் கூறுகளுக்கான விசேடமான சாயங்கள் பயன்படுத்தி சாயமேற்றப்படலாம்.

சாயமேற்றலானது ஓட்ட குழியநுண் அளவியலில் (Flow cytometry) கலங்களை அடையாளப்படுத்தவும் உதவும். கூழ்ம மின்புல புரைநகர்ச்சியில் (gel electrophoresis), புரதங்கள், நியூக்கிளிக் அமிலங்களை கோடிட்டுக் காட்டவும் இந்த சாயமேற்றல் உதவும். நோய்த்தடுப்பு இழைய வேதி சாயமூட்டல் (immunohistochemical staining) மூலம் குறிப்பிட்ட சில புரதங்களின் அடிப்படையில் நோய்நிலைகளை அடையாளம் காண உதவும்.

சாயமேற்றலானது உயிரியலில் மட்டுமன்றி, வேறு துறைகளிலும் பொருட்களில் வேறுபாட்டை ஏற்படுத்திச் சிறப்பித்துக் காட்டப் பயன்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயமேற்றல்_(உயிரியல்)&oldid=3924212" இலிருந்து மீள்விக்கப்பட்டது