சாதிய ஒடுக்குமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறை அகும். தெற்காசியாவில் சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவிர வன்முறையான ஒடுக்குமுறைகள், சமூக நிறுவனக் கட்டமைப்புகளின் ஊடாக நடைபெறும் ஒடுக்குமுறைகள், நுண் ஒடுக்குமுறைகள் என்று பல வகைகளில் அமைகின்றன.

வன்முறையும் பாகுபாடும்[தொகு]

சாதியத்தால் உந்தப்பட்ட வன்முறைகள் மிகுந்து நிகழ்கின்றன. பெரும்பாலான தாக்குதல்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது உயர்ந்த சாதியினரால் நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கு இரண்டு தலித்துக்கள் தாக்கப்படுகின்றனர்..[1] ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், இரு தலித்துக்கள் கொல்லப்படுகின்றனர், இரு தலித் வீடுகள் கொழுத்தப்படுகின்றன.[1] இந்த விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு நடந்த மோதல்களால் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அதிகமாக மக்கள் பாதிக்கப்படுவதால் தமிழக்கத்திலேயே முதன் முறையாக பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.[2]

சமூக ஒடுக்குமுறை, உறவு மறுப்பு[தொகு]

சாதியம் படிநிலை அடுக்கமைவைக் கொண்டது. ஆகையால் சாதியத் துருவத்தில் மேல் நிலையில் கருதப்படுவர்கள் கூடிய சமூக நிலையைக் (Social status) கொண்டவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் குறைந்த சமூக நிலையைக் கொண்டவர்களாகவும் கருதப்படுகின்றார்கள். இந்த நிலை வேறுபாட்டை நிலைநாட்டு வண்ணம் பல்வேறு சமூக மரபுகளும் சடங்குகளும் உள்ளன.

ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு பிராமணருடன் உடலுறவு கொண்டால் மரண தண்டனை உட்பட்ட கடும் தண்டனை அண்மைக் காலம் வரை மரபாக இருந்தது.[3] இன்றும் வெவ்வேறு சாதியினர் திருமணம் செய்து கொள்ளல் பல இடங்களில் வன்முறையால் தடுக்கப்படுகிறது.

பொருளாதார ஒடுக்குமுறை[தொகு]

சாதிய ஒழுங்குமுறையில் பிறப்பால் ஒரு சாதியில் பிறந்த ஒருவர் வேறு ஒரு தொழிலுக்கு இலகுவாக மாற முடியாது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பொருளாதார வளங்கள் குறைவான கழிவு அகற்றல், தூய்மை ஆக்கல், கூலி வேலை போன்ற தொழில்களே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் சாதியக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பொருளாதார அசைவு (Economic mobility) மிகவும் குறைவானதாகும். இந்தியாவின் கொத்தடிமைகளிலும், சிறுவர் தொழிலாளர்களிலும் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர்.[4] நெடுங்காலமாக ஒடுக்குமுறைக்கு உட்பட்டதால் நிதி வளங்கள் இல்லாமல் தொழில் முனைவிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பின்தங்கி உள்ளார்கள்.

கல்வியில் ஒடுக்குமுறை[தொகு]

கல்வி தொடர்பான பல்வேறு செயற்பாடுகள் நெடுங்காலமாக பிராமணர் முதற்கொண்ட மேற்சாதியினர்களால் கட்டுப்படுத்தப்பட்டதால் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டனர். கல்வி வளங்களும், கல்வியின் தரமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஓப்பீட்டளவில் மிக குறைவாகவே கிடைக்கின்றன..[3]

அரசியல் ஒடுக்குமுறை[தொகு]

தெற்காசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் உயர் அதிகார நடுவங்கள் பெரும்பாலனவை தொடர்ந்து உயர்ந்த சாதியினராலேயே பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறன.[5] எனினும் மக்களாட்சி, இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் ஆகியன இந்த ஆதிக்கத்தை குறைத்துள்ளன.

சட்டம் , நீதிமன்ற தீர்ப்புகளில் பாகுபாடு[தொகு]

 • ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப் பரம்பரைச் சட்டம் மூலம் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தச் சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள் காலையிலும் மாலையிலும் காவல்நிலையம் வந்து கைநாட்டு வைத்துவிட்டுப் போக வேண்டும், ஆணையிடப்படும்போது காவல்நிலைய வாசலிலேயே இரவைக் கழிக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.[6]
 • கீழ வெண்மணியில் 44 தலித் விவசாயத் தொழிலாளிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மரியாதைக்குரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற விளக்கத்தின் பேரில்தான், நிலவுடைமையாளர்களையும் அவர்களதுஅடியாட்களையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.[7][8]
 • 2010இல் காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் நடந்த கொலை, திருட்டு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், அந்தச் சாதியினர் பரம்பரையாகவே குற்றச் செயல்களில் ஈடுபடு கிறவர்கள்தான் என்று அந்த நீதிபதி கருதிய தால், அவர்களுக்கு ஆயுள்சிறைத்தண்டனை விதித்து 2015இல் தீர்ப்பளித்தார்.[9]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 India's "Untouchables" Face Violence, Discrimination
 2. தமிழகத்தில் முதன்முதலாக திருவைகுண்டம் செல்லும் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, பாதுகாப்புக்கு போலீஸ்: ஜாதி மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்
 3. 3.0 3.1 Education of Ex-Untouchables (Dalits): Plight of Human Rights Education in Indian Schools
 4. ECONOMIC, SOCIAL AND CULTURAL RIGHTS FOR DALITS IN INDIA: CASE STUDY ON PRIMARY EDUCATION IN GUJARAT
 5. POLITICAL PARTICIPATION OF DALITS IN NAWANSHEHAR AND PATIALA
 6. Bates, Crispin (1995). "Race, Caste and Tribe in Central India: the early origins of Indian anthropometry". In Robb, Peter (ed.). The Concept of Race in South Asia. Delhi: Oxford University Press. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563767-0. பார்க்கப்பட்ட நாள் 1 December 2011.
 7. Sivaraman, M (May 1973). "Gentlemen Killers of Kilvenmani". Economic and Political Weekly 8 (21): 926-928. https://www.jstor.org/stable/4362661?. 
 8. "The Din of Silence - Reconstructing the Keezhvenmani Dalit Massacre of 1968". பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 9. "சாதி: குற்றத்திலா? தீர்ப்பிலா?". தீக்கதிர். 24 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதிய_ஒடுக்குமுறை&oldid=3929685" இலிருந்து மீள்விக்கப்பட்டது