பாகுபாடு
பாகுபாடு (Discrimination) என்பது ஒரு தனிநபரை ஓர் குறிப்பிட்டக் குழு அல்லது வகைப்பாட்டில் அங்கமாக உள்ளதை (அல்லது அங்கமானவர் என்று எண்ணி) முன்னிட்டு முற்சார்புடன் நடத்துவதாகும். இது அந்தக் குழுக்களைத் தனிப்படுத்துவதும் தடை செய்வதுமான செயல்களை உள்ளடக்கும். ஒரு குழுவினை மட்டும் மற்ற குழுவினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளிலிருந்து தள்ளி வைப்பதும் கட்டுப்படுத்துவதும் ஆகும்.[1]
பாகுபாடுடைய சட்டங்கள் பல நாடுகளில் உள்ளன. இவை பெரும்பாலும் இனப்பாகுபாட்டினால், குறிப்பிட்ட மக்கள் வாழும் பகுதிகளில் வங்கிகள் இயங்குவதைக் கட்டுப்படுத்தும் "சிவப்பு கோடிடல்" போன்றவை ஆகும். இனப்பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், சமூக, பண்பாட்டு வழக்கங்களால் சில நாடுகளில் இனப்பாகுபாடு இருந்து வருகின்றது. உலக மனித உரிமைகள் சாற்றுரை அனைத்து மனிதர்களும் எவ்வகையான பாகுபாட்டிலிருந்தும், பாகுபாட்டைத் தூண்டுவதிலிருந்தும் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. இதற்கான ஒரு தீர்வாக சிலநாடுகளில் இனம்சார் ஒதுக்கீடு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன; ஆனால் இவை மீள்பாகுபாட்டை அறிமுகப்படுத்துவதாக குறை கூறப்படுகிறது.
ஒரு தனிநபரை பாகுபடுத்தக்கூடியக் காரணங்களாக உள்ளவை: இனம், பால், அரசியல், பாலினச் சேர்க்கை விருப்பு, பாலின அடையாளம், சமயம், காணப்படும் தோற்றம், முந்தைய குற்ற வரலாறு, அவரது வாழ்க்கை முறை, அவர்களது ஆடை விருப்புகள், அவர்களது அகவை அல்லது அவர்களது உடற்குறைகள், மாற்றிவரும் சமூக புதுமைகளை ஏற்றுக்கொள்பவர் அல்லது அதற்கு பொருத்தமாயிருப்பவர், குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவராக இருத்தல், குறிப்பிட்ட இடத்தை சேராதவர் அல்லது உள்ளூர்க்காரராக இல்லாதிருத்தல், சமூக வகுப்பு, சாதி மற்றும் இன்னபிறவாம்.
பாகுபடுத்தல் பல வடிவங்களில் செயற்படுத்தப்படலாம்: பணியில் அமர்த்துவது/நீக்குவது, அதே வேலைக்குப் பிறரை விட குறைந்த ஊதியம் அளித்தல், வீடு கொடுக்க மறுத்தல், கேலி செய்தல், துன்புறுத்துவது அல்லது மற்றவர்களைப் போலல்லாது வேறுபட்டு நடத்துதல் ஆகியன சிலவாகும்.
சில நாடுகளில் இனம், பாலினம் மற்றும் சமயம் காரணமாக பணி மற்றும் வீடு கொடுப்பதை கட்டுப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் பாகுபாடு காட்டுவது சட்டத்திற்குட்பட்டதும் அரசு கொள்கையாகவும் உள்ளது. குறிப்பாக தேசியச் சமயமாக ஒரு சமயத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் மற்ற சமயத்தினர் பாகுபடுத்தப்படுகின்றனர். பண்பாட்டின் கூறாக சாதிகள் நிறைந்துள்ள சமூகங்களிலும் நாடுகளிலும் சாதிப் பாகுபாடு பரவலாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Introduction to sociology. 7th ed. New York: W. W. Norton & Company Inc, 2009. page 334. Print.
வெளி இணைப்புகள்
[தொகு]- சட்ட வரையறுக்கள்
- ஆத்திரேலியா பரணிடப்பட்டது 2002-03-12 at the வந்தவழி இயந்திரம்
- கனடா பரணிடப்பட்டது 2006-12-12 at the வந்தவழி இயந்திரம்
- உருசியா
- அமெரிக்கா
- ஐக்கிய அமெரிக்காவில் பணிவாய்ப்பு பாகுபாட்டு சட்டங்கள்
- ஐரோப்பாவின் பாகுபாட்டுச் சட்டங்கள் பரணிடப்பட்டது 2008-02-14 at the வந்தவழி இயந்திரம்
- நடத்தை உயிரியலும் இனப்பாகுபாடும்
- இனப்பாகுபாட்டுக்கும் வெறுப்பிற்கும் எதிர் பரணிடப்பட்டது 2016-07-13 at the வந்தவழி இயந்திரம்
- அகவை பாகுபாடு
- Speciesism பரணிடப்பட்டது 2011-07-23 at the வந்தவழி இயந்திரம்