க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி தற்காலப் பொது எழுத்துத் தமிழுக்கான அகராதியாகும். 1985 அளவில் தொடங்கப்பட்டு சனவரி 1992 இல் முதற் பதிப்பு வெளியானது. அகராதிக் குழுத் தலைவராக முனைவர் இ. அண்ணாமலையும் முதன்மை ஆசிரியராக முனைவர் பா. ரா. சுப்பிரமணியனும் நிர்வாக ஆசிரியராக க்ரியா எஸ். ராமகிருஷ்ணனும் அகராதிக் குழுவில் முக்கிய பணியாற்றினர். இலங்கைத் தமிழுக்கே சிறப்பான சொற்களை கலாநிதி எம். ஏ. நுஃமான் தொகுத்துள்ளார்.
இரண்டாம் பதிப்பு
[தொகு]பல புதிய சொற்கள் கொண்ட, விரிவாக்கித் திருத்திய புதிய இரண்டாம் பதிப்பு, 2008 சூன் மாதத்தில் வெளியிடப்பட்டது.
- இரண்டாம் பதிப்பின் புள்ளிவிவரங்கள்
- சொற்கள் : 21 000 தலைச்சொற்கள், 1700 இலங்கை வழக்கு சொற்கள்
- எடுத்துக்காட்டு வாக்கியங்கள்/தொடர்கள்: 38 000
- படங்கள்: 372
மூன்றாம் பதிப்பு
[தொகு]இந்த அகராதி மேலும் விரிவாக்கபட்டு 2020 நவம்பரில் மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டது.[1]
- மூன்றாம் பதிப்பின் புள்ளி விவரங்கள்
- சொற்கள் : 23 800 தலைச்சொற்கள், 2632 இலங்கை வழக்கு சொற்கள்[1]
- எடுத்துக்காட்டு வாக்கியங்கள்/தொடர்கள்: 40 130[1]
- படங்கள்: 311[1]
தோற்றப் பின்னணி
[தொகு]இவ்வகராதியை உருவாக்கி வெளியிட்ட க்ரியா பதிப்பகம் 1974 இல் துவங்கப்பட்டது. இப்பதிப்பகம், தற்காலத் தமிழ் இலக்கியம், பிற மொழிகளிலிருந்தான மொழிபெயர்ப்பு நூல்கள், உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல்,தொழில்நுட்பம் போன்ற துறைகள் சார்ந்த நூல்கள் போன்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறது.[2] இதில் ஏற்பட்ட அநுபவங்களே தற்காலத் தமிழ் மொழிக்கான அகராதி ஒன்றின் தேவையை உணர்த்தின. இக்காலகட்டத்தில்தான் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பாத்திரப் படைப்புக்களும், அவர்களது மொழி வழக்குகளும் படைப்புக்களில் இடம்பெற்றுத் தமிழ்ப் படைப்புலகிலும், மொழியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. க்ரியா பதிப்பகத்தின் வெளியீட்டுக்காக வரும் படைப்புக்களில் இடம்பெற்ற இவ்வாறான பயன்பாடுகளுக்குப் பொருள் காணும் முயற்சியின்போது உருவானதுதான் தற்காலத் தமிழ் அகராதி என்ற எண்ணம். இச்சூழலில், தனி ஒரு மனிதரின் சிந்தையில் உருவான எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரோடு ஒத்த சிந்தனை கொண்ட பல்துறை சார்ந்த வல்லுனர்கள் குழு கூட்டாகச் செயல்பட்டதன் விளைவாகவே[3] "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி" வேலைகள் 1985ல் தொடங்கி இன்றுவரை நடைபெறுகின்றன.
முக்கியத்துவம்
[தொகு]தமிழ் அகராதி வரலாற்றிலே மொத்தம் 4000 பக்கங்களையும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சொற்களையும் கொண்டு, 1912 முதல் 1936 வரை பகுதி பகுதியாக வெளியாகிய சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிடத்தக்கது. எனினும் இது அன்றைய பொதுத் தமிழை, பேச்சுத் தமிழைத் தமிழாகக் கொள்ளாததினால், அவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. அத்துடன் இதன் கடைசித்தொகுதி வெளிவந்து பல பத்தாண்டுகள் கடந்தும் அது விரிவாக்கப்படவில்லை. ஆனாலும் இக்காலகட்டத்தில் தமிழ் மொழியில் பெரும் வளர்ச்சிகளும், மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. புதிய சொற்கள் தோன்றியும், பழைய சொற்கள் வழக்கிழந்தும் உள்ளன. பழைய சொற்களுக்குப் புதிய பொருள்கள் ஏற்பட்டுள்ளன. பேச்சுத் தமிழ்ச் சொற்களும், வட்டார வழக்குச் சொற்களும் எழுத்துத் தமிழில் பெருமளவில் புழங்கத் தொடங்கிவிட்டன.[4] இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு அகரமுதலி தேவைப்பட்ட ஒரு சூழலில் "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி" வெளியானதுடன், அதன் முதற்பதிப்பு வெளிவந்து 16 ஆண்டுகளிலேயே விரிவாக்கிய இரண்டாவது பதிப்பு வெளியானதும் தமிழ் அகரமுதலித் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அத்துடன், இந்த அகராதி, ஒரு சொல்லின் பொருளை மட்டும் தருவதோடு நில்லாமல், அதன் இலக்கண வகை, வினைச்சொல் பெயர்ச்சொல், துணைவினை, இடை வினை என்றவாறு பல்வேறு இலக்கணக் கூறுகளாக, பயன்பாட்டில் அதன் பொருள் வேறுபடுவது போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன.[5] அத்துடன், இலங்கை வழக்குச் சொற்களையும், சொற்பொருளையும் தனியாகச் சுட்டிக்காட்டிய அகராதிகள் இரண்டு மட்டுமே. அவற்றுள் "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி"யும் ஒன்று. இதில் பதிவு செய்யப்பட்டுள்ள 21,000 சொற்களுள், 1700க்கு மேற்பட்ட இலங்கை வழக்குச் சொற்கள் உள்ளன.[6] இலங்கை வழக்குச் சொற்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், இலங்கையில் தமிழ் கற்கும் வெளிநாட்டவரும், இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்கும் சிங்களவர்களும் இவ்வகராதியை விரும்பிப் பயன்படுத்துவதாக சுசீந்திரராஜா குறிப்பிடுகிறார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட 'க்ரியா' அகராதி: கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
- ↑ க்ரியாவின் வலைத்தளம்
- ↑ சாமிநாதன், வெங்கட்., 2008
- ↑ சாமிநாதன், வெங்கட்., 2008
- ↑ சாமிநாதன், வெங்கட்., 2008
- ↑ சுசீந்திரராஜா, சு., 2011. பக். 98.
- ↑ சுசீந்திரராஜா, சு., 2011. பக். 50, 51.
உசாத்துணைகள்
[தொகு]- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - இரண்டாம் பதிப்பு, க்ரியா பதிப்பகம், 2008 (மீள் அச்சு 2014).
- சுசீந்திரராஜா, சு., தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்-2, சேமமடு பதிப்பகம், 2011.
- சாமிநாதன், வெங்கட்., க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - ஒரு கலாச்சார நிகழ்வு, பதிவுகள் இணைய இதழ், 2008 இதழ் 105, 2008.