துணைவினை
துணைவினை (Auxillary verb) என்பது, இன்னொரு வினையுடன் சேர்ந்து வருகின்ற நிலையில், தன் பொருளை இழந்து சேர்ந்துவரும் வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் ஆகும். இவ்வாறான பொருள் இலக்கணப் பொருள் எனப்படும். துணைவினையோடு சேர்ந்துவரும் வினை தலைமை வினை எனவும், இரண்டினதும் சேர்க்கையால் உருவாகும் வினை கூட்டுவினை எனவும் பெயர் பெறும்.[1] உலகின் பல மொழிகளில் துணைவினைகள் ஒரு இலக்கணக் கூறாகக் காணப்படுகின்றன.
தமிழில் துணைவினைகள்
[தொகு]தமிழில் இரு என்பது தனியே வரும்போது இருத்தல் பொருளைத் தருவது. அதே வேளை போ, வா, செய், படு போன்ற வினைகளுடன் சேர்ந்து, போயிருந்தான், வந்திருந்தான், செய்திருந்தான், படுத்திருந்தான் போன்றவாறு வரும்போது இரு தனது வழமையான பொருளை இழந்து. போ, வா, செய், படு போன்ற வினைகளால் குறிக்கப்படும் செயற்பாடுகளின் தன்மையைத் தெளிவாகக் குறிக்கப் பயன்படுவதைக் காணலாம்.
தமிழில் துணைவினை, தலைமை வினைக்குப் பின்னர் வருகின்றது. தலைமை வினைகள் எப்போதும், போய், வந்து, செய்து, படுத்து போன்ற வினையெச்ச வடிவிலேயே அமைகின்றன. துணைவினை, படுத்திரு, செய்துவிடு என்பவற்றில் வருவதுபோல் ஏவல்வினையாக அல்லது போயிருந்தான், வந்துவிட்டான் என்பவற்றில் உள்ளதுபோல் போல் முற்றுவினை வடிவத்தில் அமைகின்றது.
தமிழில் வினைகளுக்குப் புதிய பொருள்களைக் கொடுப்பதற்குத் துணைவினைகள் உதவுகின்றன. கீழே அட்டவணையில் தந்துள்ளவை சில எடுத்துக்காட்டுகள்.[2]
துணைவினை | எடுத்துக்காட்டு | பொருள் |
---|---|---|
அருள் | பொறுத்தருள்க | செயல் புரிபவருக்கு உயர்வு கொடுத்தல் |
கொள் | எடுத்துக்கொள் | வினையைத் தற்சுட்டாக்குதல் |
போ | வரப்போகிறான் | நிகழவிருப்பதைக் குறிப்பது |
வா | செய்துவருகிறேன் | வழக்கமாக நிகழ்வதைக் காட்டுவது |
விடு | போய்விட்டான் | செயல் முடிந்த நிலையைக் காட்டுவது |
தமிழ்மொழி வரலாற்றில் துணைவினைகள்
[தொகு]சங்ககாலத்திலும் துணைவினைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. எனினும், இவை அரிதாகவே காணப்படுகின்றன. விடு, கொள், இரு, படு, செய், பண்ணு, வேண்டு, வேண்டா, ஈ, அருள் போன்ற துணைவினைகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இடைக்காலத்தில் மாட்டு, ஒழி, வை, ஆக்கு, கூடு போன்ற துணைவினைகள் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்ததைக் காண முடிகிறது. தற்காலத்தில் தமிழ் மொழி பல்வேறு வடிவங்களில் பயன்பட்டு வருவதாலும், புதிய கருத்தாக்கங்களை வெளிப்படுத்துவதற்கான சொற்தேவைகள் அதிகரித்ததனாலும், ஏராளமான புதிய துணைவினைகள் உருவாகிப் பயன்பட்டு வருகின்றன.