கை பாக்சு இரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்ட்சர் கோட்டையில் நடைபெற்றக் கொண்டாட்டங்கள், ஓவியர் பவுல் சாண்ட்பியின் கைவண்ணத்தில், c. 1776

கை பாக்சு இரவு (Guy Fawkes Night) அல்லது கை பாக்சு நாள், சொக்கப்பனை இரவு, வாணவேடிக்கை இரவு என்றெல்லாமும் அறியப்படும் இந்தக் கொண்டாட்டம், முதன்மையாகப் பெரிய பிரித்தானியாவில், ஆண்டுதோறும் நவம்பர் ஐந்தாம் நாள் அனுசரிக்கப்படுகின்றது[1]. இதன் வரலாறு 5 நவம்பர் 1605இல் வெடிமருந்துச் சதியில் பங்கேற்ற கை பாக்சு, பிரபுக்கள் அவையினடியில் சதியாளர்கள் வைத்திருந்த வெடிபொருளைக் காத்துக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதில் தொடங்குகின்றது. இந்தச் சதியிலிருந்து முதலாம் ஜேம்சு அரசர் உயிர் தப்பியதைக் கொண்டாடும் விதமாக இலண்டன் முழுவதும் மக்கள் சொக்கப்பனைகளை ஏற்றிக் மகிழ்ந்தனர் [2]. பின்னர் நவம்பர் ஐந்துக் கொண்டாட்டத்தை ஆண்டுவிழாவாக மாற்றிச் சட்டம் இயற்றப்பட்டது; இந்தச் சட்டத்தின்படி சதித்திட்ட முறியடிப்பிற்கான நன்றி நவிலலாக பொது விடுமுறையாக கட்டாயப்படுத்தப்பட்டது.

ஒருசில பத்தாண்டுகளில் இது இங்கிலாந்தின் அரசுவிழாக்களில் முதன்மை பெற்றது; இது ஆழமான சீர்திருத்தச்சபை சமயக் குறியீட்டைக் கொண்டிருந்ததால் கத்தோலிக்க எதிர்ப்பு உணர்வுகளைத் தெரிவிக்கும் விழாவாகவும் மாறியது. புனிதத் ந்தையாரின் சமய ஆட்சியால் விளையும் தீமைகள் எடுத்துரைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பரவலாக தாங்கள் வெறுக்கும் நபர்களின் கொடும்பாவிகளை எரிக்கத் தொடங்கினர். 1673இல் முடி சூடவிருந்த இளவரசர் இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு கத்தோலிக்கராக மாறியதை பொதுவில் அறியப்படுத்திய பிறகு அந்தாண்டு பாக்சின் கொடும்பாவியை கத்தோலிக்க திருத்தந்தையாக பாவித்து கொளுத்தினர். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கை பாக்சின் கொடும்பாவியுடன் பிச்சை எடுக்கும் அறிக்கைகள் வெளியாயின. மெதுவாக நவம்பர் 5 கை பாக்சு நாள் என அறியப்படலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் லெவிசு, கில்டுபோர்டு போன்ற நகரங்களில் இரு வகுப்பினரிடையே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1850களில் மாறிவந்த மனப்பாங்குகளால் கத்தோலிக்க எதிர்ப்பு பண்பு குறையத் தொடங்கியது. 1859இல் நவம்பர் ஐந்துக் கொண்டாட்டங்களைக் கட்டாயமாக்கியச் சட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கை பாக்சு நாள் அனைவரும் மகிழக்கூடிய சமூக்க் கொண்டாட்டமாக மாறியது; தற்போது இதன் துவக்கக்கால குவியத்தை இழந்துள்ளது. இன்றைய நாட்களில் கை பாக்சு இரவு ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய நிகழ்வுகளாக, சொக்கப்பனை மற்றும் ஆடம்பரமான வாணவேடிக்கைகளுடன் நடத்தப்படுகின்றன.

கை பாக்சு இரவுக் கொண்டாட்டங்களை குடியேற்றவாதிகள் தாங்கள் ஆட்சி செய்த வெளிநாட்டுக் குடியேற்றங்களிலும் கடைபிடிக்கத் துவங்கினர். வட அமெரிக்காவில் புனிதத் தந்தை நாள் என அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு இவை கைவிடப்பட்டன. இருப்பினும் மற்றொரு பழைய கொண்டாட்டமான, ஆலோவீன், பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சிலரின் கூற்றுப்படி வருங்காலங்களில் அலோவீன் கொண்டாட்டங்கள் நவம்பர் 5 கொண்டாட்டங்களை முற்றிலுமாக மறக்கடிக்கச் செய்யும்.

இங்கிலாந்தில் துவக்கமும் வரலாறும்[தொகு]

நவம்பர் 5, 2010இல் கொளுத்தப்பட்ட பாக்சின் கொடும்பாவி

1605இல் வெடிமருந்து சதித்திட்டம் தோல்வியடைந்ததைக் கொண்டாடவே கை பாக்சி இரவு நிகழ்வுற்றது; 1605இல் இங்கிலாந்து மாநில கத்தோலிக்கர்களின் குழுவொன்று சீர்திருத்தத் திருச்சபையைத் தழுவிய இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு அரசரைக் கொன்றுவிட்டு கத்தோலிக்கர் ஒருவருக்கு முடிசூட்டத் திட்டமிட்டிருந்தனர். இத்திட்டத்தின்படி பிரபுக்கள் அவைக்கு கீழே இருந்த அறையில் சேமிக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை கை பாக்சு பாதுகாத்துக் கொண்டிருந்தார். பெயரிடப்படாத கடிதம் ஒன்றால் எச்சரிக்கப்பட்ட மெய்க்காவல்படையினர் நவம்பர் 5, 1605இல் ஒவ்வொரு அறையாக சோதித்து வந்தபோது கை பாக்சு பிடிபட்டார். ஜேம்சின் அமைச்சரவை இந்த நிகழ்வை எவ்வித குழப்பமும் தீவிளைவும் இன்றி விழவெரி தீ மூட்டிக் கொண்டாட பொதுமக்களை அனுமதித்தது.[3] இதன் மூலம் 1605 கை பாக்சு இரவின் முதல் இரவாயிற்று.[4] தொடர்ந்த சனவரியில், சதியாளர்களுக்கு தண்டனை வழங்கும் முன்னரே நாடாளுமன்றம் ஐந்தாம் நவம்பர் நாளை இறைவனுக்கு நன்றி நவிலல் நாளாகக் கொண்டாட முறையான சட்டம் இயற்றியது. இந்தச் சட்ட வரைவை எட்வர்டு மொன்டேகு என்ற நாடாளுமன்றத்தின் சீர்திருத்தவாத உறுப்பினர் முன்வைத்து அரசரை இறையருளேக் காப்பாற்றியதால் அலுவல்முறையாக கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் நவம்பர் 5 நாளை நிரந்தரமாக நன்றி நவிலும் நாளாக அறிவிக்கவும் முன்மொழிந்தார். இச்சட்டம் கொள்கையளவில் நன்றி நவில தேவாலயங்களுக்கு வரவேண்டியதைக் கட்டாயமாக்கியது. [5] இங்கிலாந்து திருச்சபையின் பொது வழிபாட்டு நூலில் இந்த நாளிற்காக புதிய சமயச் சேவை சேர்க்ககப்பட்டது.[6]

துவக்க கால கொண்டாட்டங்களைக் குறித்து ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கார்லைசு, நார்விச், நாட்டிங்காம் போன்ற குடியேற்றப்பகுதிகளில் நகராட்சிகளே இசைக்குழுவுடனும் துப்பாக்கி வணக்கங்களுடனும் கோலாகலமாகக் கொண்டாடின. நவம்பர் 5, 1807இல் கேன்டர்பரி 106 முறை துப்பாக்கி வெடித்துக் கொண்டாடியது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு உணவும் பானங்களும் உள்ளூர் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டன. இசை, வெடிவேடிக்கைகள், அணிவகுப்புகளும் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்வை பொதுமக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதற்கும் பதிவுகள் இல்லை; சீர்திருத்த தூய்மையாளர்கள் நிறைந்த டோர்செஸ்டர் போன்ற இடங்களில் சமயச் சொற்பொழிவு ஆற்றப்பட்டது, தேவாலயங்களில் மணி அடிக்கப்பட்டன, சொக்கப்பனைகளும் வெடி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Guy Fawkes Day". Encyclopædia Britannica, Inc. {{cite web}}: Unknown parameter |accesdate= ignored (|access-date= suggested) (help)
  2. Fraser 2005, ப. 207
  3. Fraser 2005, ப. 207
  4. Fraser 2005, ப. 351–352
  5. Sharpe 2005, ப. 78–79
  6. Edward L. Bond, Spreading the gospel in colonial Virginia (Colonial Williamsburg Foundation, 2005), p. 93
  7. Sharpe 2005, ப. 87

Bibliography

"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_பாக்சு_இரவு&oldid=2524212" இலிருந்து மீள்விக்கப்பட்டது