குரங்கணில்முட்டம் குடைவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரங்கணில்முட்டம் குடைவரை என்பது திருவண்ணாமலை மாவட்டத்தின், செய்யாறு வட்டத்தில் உள்ள குரங்கணில்முட்டம் என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரை ஆகும். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் வழியில் மாமண்டூருக்குச் சற்றுத் தொலைவில் குரங்கணில்முட்டம் உள்ளது. இக்குடைவரை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது எனச் சொல்வதற்குப் பல்லவர் காலக் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் இங்கே கிடைக்கவில்லை. இது அமைந்துள்ள பகுதி இன்றும் பல்லவபுரம் என்று அழைக்கப்படுவதாலும், குடைவரை பல்லவருடைய கலைப்பாணியில் அமைந்துள்ளதாலும் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. எனினும் இக்குடைவரையில் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவன் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன. இவற்றிலிருந்து இது திருமாலுக்கு உரிய கோயில் எனக் கருதப்படுகிறது. அத்துடன் இப்பகுதி அக்காலத்திலும் பல்லவபுரம் என்று அழைக்கப்பட்டதற்கான சான்றுகளைக் கல்வெட்டுக்கள் தருகின்றன.[1]

இக்குடைவரை மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும் சுவர்களை அண்டி இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. பின்புறச் சுவரிலும் அரைத்தூண்கள் உள்ளன. பின்புறச் சுவரில் மூன்று கருவறைக் குடைவுகளும், பக்கச் சுவர்களில் பக்கத்துக்கு இரண்டாக நான்கு கருவறைக் குடைவுகளும் காணப்படுகின்றன. எனினும், பக்கச் சுவர்களில் காணப்படும் கருவறைகள் முற்றுப்பெறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 32