உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசியக் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குயில் (ஆசியக் குயில்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குயில்
Indian female Cuckoo - Indian Dotted koel
பெண் (nominate race)
ஆண் (nominate race)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. scolopaceus
இருசொற் பெயரீடு
Eudynamys scolopaceus
(லின்னேயசு, 1758)
வேறு பெயர்கள்

Cuculus scolopaceus
Eudynamis honorata
Eudynamys scolopacea

ஆசியக் குயில் (Eudynamys scolopacea)[1][2] இது சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும்.[3][4]. இது காளகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது[5].

விளக்கம்

[தொகு]

பொதுவாக காக்கை அளவுள்ள இப்பறவை காக்கையை விட மெலிந்து சற்று நீண்ட வாலுடன் காட்சியளிக்கும். இப்பறவை சுமார் 43 செ. மீ. நீளம் கொண்டது. கால்கள் ஈய நிறத்திலும் இருக்கும். ஆண் குயில் உடல் முழுவதும் பளபளப்பான கருமை நிறமுடையது. அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும். பெண் குயிலின் உடலின் மேற்பகுதி ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும் அதில் வெண் புள்ளிகளும் பட்டைகளும் நிறைந்தும் இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும். மோவாய், தொண்டை, முன் கழுத்து ஆகியவற்றில் கரும்புள்ளிகள் காணப்படும். மார்பிலும் வயிற்றிலும் கரும்பட்டைகள் காணப்படும். முதிர்ச்சியடையாத பெண் குயில் குஞ்சு சற்றுப் புகைக் கருப்புத் தோய்ந்து காணப்படும்.

குயிலில் ஆண் பெண் வேறுபாடு அறியாத மக்கள் ஆணைக் கருங்குயில் என்றும் பெண்ணை வரிக்குயில் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைப்பர்.[6] இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் scolopacea வகை தென்னிந்தியாவிலும் சிறிலங்காவிலும் காணப்படுகின்றன.

குணநலன்கள்

[தொகு]
  • தனியாகவோ இணையுடனோ மரங்கள் நிறைந்த தோட்டம், தோப்புகளில் இவற்றைக் காணலாம்.
  • குயில் ஓர் அடையுருவி ('brood parasite').
  • இது மரத்தில் வாழும் பறழ்பறவை -- அதாவது தரையில் காணப்படாது.
  • பழங்களும் சிறு கனிகளும் நிறைந்துள்ள தோட்டம், தோப்பு ஆகிய இடங்களே குயில்களின் வருகைக்குகந்தவை.

ஆண் குயிலின் கூவல்

[தொகு]
  • (பெண்களின்) இனிமையான குரல் வளத்திற்கு உவமையாக குயிலின் கூவலைக் கூறுதல் வழக்கத்தில் இருந்தாலும், உண்மையில் இனிமையான குவூ குவூ சத்தத்தை எழுப்புவது ஆண்குயிலே.
  • தாழ்ந்த ஒலியுடன் இனிமையாகத் துவங்கும் குவூ கூப்பாடு படிப்படியாக சத்தம் அதிகரித்து, ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென நின்று விடும்; பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும்.
  • ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் - கிக் - கிக் என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.

உணவு

[தொகு]

பெரும்பாலும் பழங்கள், நெல்லி போன்ற சிறு கனிகள்; சமயங்களில் கம்பளிப்புழுக்களும் பூச்சிகளும்.

கூடு கட்டாத குயில் -- அண்டிப்பிழைக்கும் குயில்

[தொகு]

மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். குயிலின் முட்டையினையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சு போலத் தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. David, N & Gosselin, M (2002). "The grammatical gender of avian genera". Bull B.O.C. 122: 257–282. 
  2. Penard, TE (1919). "The name of the black cuckoo" (PDF). Auk 36 (4): 569–570. doi:10.2307/4073368. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v036n04/p0569-p0570.pdf. 
  3. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (ed.). CRC Press (1992), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-4258-5.
  4. Asian Koel. oiseaux-birds.com
  5. "காளகண்டம்". பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 248–249.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eudynamys scolopaceus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_குயில்&oldid=3789995" இலிருந்து மீள்விக்கப்பட்டது