குன்வர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்வர் சிங்
இந்தியப் பேரரசின் வரலாறு என்ற நூலில் குன்வர் சிங்கின் உருவப்படம் அண். 1858[1]
ஜகதீசுபூரின் மகாராஜா
முன்னையவர்சப்சாதா சிங்
பின்னையவர்பாபு அமர் சிங்
பிறப்பு(1777-11-13)13 நவம்பர் 1777
ஜகதீசுபூர், போஜ்பூர், பீகார்
இறப்பு26 ஏப்ரல் 1858(1858-04-26) (அகவை 80)
ஜகதீசுபூர், போஜ்பூர், பீகார்
அரசமரபுஉஜ்ஜைனியா பார்மர் ராஜ்புத்திரர்
தந்தைராஜா சாகாப்சாதா சிங்
தாய்ராணி பஞ்சரதன் குன்வாரி தேவி சிங்

பாபு குன்வர் சிங் (Kunwar Singh) மற்றும் குயர் சிங் அல்லது குவர் சிங் என்றும் அழைக்கப்படும் (1777 நவம்பர் 13– 1858 ஏப்ரல் 26) இவர் 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கிளர்ச்சியின் போது ஒரு தலைவராக இருந்தார். தற்போது இந்தியாவின் பீகாரில், போஜ்பூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஜகதீசுபூரின் பார்மர் ராஜபுத்திர உஜ்ஜைனியா குலத்தைச் சேர்ந்த மகாராஜா ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். தனது 80 வயதில், பிரிட்டிசு கிழக்கிந்திய கம்பெனியின் கட்டளையின் கீழ் துருப்புக்களுக்கு எதிராக ஆயுதமேந்திய படையினரை வழிநடத்தினார். பீகாரில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தின் தலைமை அமைப்பாளராகவும் இருந்தார். இவர் வீர குன்வர் சிங் என்று பிரபலமாக அறியப்படுகிறார். [2]

குன்வர் சிங்
குன்வர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குன்வர் சிங் 1777 நவம்பர் 13 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் சாகாபாத் (இப்போது போஜ்பூர் ) மாவட்டத்தின் ஜகதீசுபூரில் மகாராஜா சகாப்சாதா சிங் மற்றும் மகாராணி பஞ்சரதன் தேவி ஆகியோருக்கு பிறந்தார். இவர் உஜ்ஜைனியா ராஜ்புத்திர குலத்தைச் சேர்ந்தவர். [3] ஒரு பிரிட்டிசு நீதித்துறை அதிகாரி குன்வர் சிங் பற்றிய விளக்கத்தை அளித்து அவரை "ஆறு அடி உயரமுள்ள ஒரு உயரமான மனிதர்" என்று வர்ணித்துள்ளார். [4] இவர் நீளமான மூக்குடன் ஒரு பரந்த முகம் கொண்டவர் என்றும் விவரித்துள்ளார். இவரது பொழுதுபோக்கைப் பொறுத்தவரை, பிரிட்டிசு அதிகாரிகள் இவரை குதிரை சவாரி செய்வதில் மிகவும் ஆர்வமுள்ள வேட்டைக்காரர் என்று வர்ணித்துள்ளனர்.

1826 இல் இவரது தந்தை இறந்த பிறகு, குன்வர் சிங் ஜகதீசுபூரின் ஆட்சியாளர் ஆனார். இவரது சகோதரர்களும் சில கிராமங்களை மரபுரிமையாகப் பெற்றனர். இருப்பினும் அவற்றின் சரியான ஒதுக்கீடு குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை இறுதியில் தீர்க்கப்பட்டது மற்றும் சகோதரர்கள் நல்லுறவைக் கொண்டிருந்தனர். [5]

இவர் கயா மாவட்டத்தில் உள்ள தியோ-முங்கா பகுதியைச் சேர்ந்த ஜமீந்தாரான ராஜா பதே நாராயண் சிங்கின் மகளை மணந்தார். இவர் ராஜபுத்திரர்களின் சிசோடியா குலத்தைச் சேர்ந்தவராவார். [6]

1857 கிளர்ச்சியில் பங்கு[தொகு]

குன்வர் சிங்கின் உருவப்படம், யானைத் தந்தத்தின் மீது வரைந்த ஓவியம். 1857 [7]

1857 ஆம் ஆண்டு பீகாரில் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சிக்கு சிங் தலைமை தாங்கினார். அப்போது இவருக்கு கிட்டத்தட்ட எண்பது வயதாக இருந்தது. மேலும் அவர் ஆயுதமேந்தும்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இவருக்கு இவரது சகோதரர் பாபு அமர் சிங் மற்றும் இவரது தளபதி அரே கிருட்டிணா சிங் இருவரும் உதவி செய்தனர் . இவர்களின் உதவியினாலேயே குன்வர் சிங் ஆரம்ப இராணுவ வெற்றியை பெற்றார் என்று சிலர் வாதிடுகின்றனர். [8] இவர் நன்கு சண்டையிட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம் பிரிட்டிசு படைகளைத் துன்புறுத்தினார். கடைசி வரை வெல்லமுடியாதவராக இருந்தார். இவர் கெரில்லா போர்க்கலையில் நிபுணராக இருந்தார். இவரது தந்திரோபாயங்கள் ஆங்கிலேயர்களை குழப்பத்தில் ஆழ்த்தின. [9]

சூலை 25 அன்று தனாபூரில் கிளர்ச்சி செய்த படையினரின் தலைமைய சிங் ஏற்றுக்கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு இவர் மாவட்ட தலைமையகமான அர்ராவை ஆக்கிரமித்தார். தளபதி வின்சென்ட் ஐரே ஆகத்து 3 ஆம் தேதி நகரத்தை விடுவித்து, சிங்கின் படையைத் தோற்கடித்து, ஜகதீசுபூரை அழித்தார். கிளர்ச்சியின் போது, இவரது இராணுவம் கங்கை நதியைக் கடக்க வேண்டியிருந்தது. தக்ளசின் இராணுவம் இவரது படகை சுட்டதில் இவரது சிங்கின் இடது மணிக்கட்டை சிதறடித்தது. தனது கை பயனற்றதாகிவிட்டதாலும், குண்டு காயம் காரணமாக தொற்றுநோய்க்கான கூடுதல் ஆபத்து இருப்பதாகவும் சிங் உணர்ந்து, தனது இடது கையை வெட்டி கங்கையில் வீசினார். [9]  

சிங் தனது மூதாதையர் கிராமத்தை விட்டு வெளியேறி 1857 திசம்பரில் இலக்னோவை அடைந்தார், அங்கு இவர் மற்ற கிளர்ச்சி தலைவர்களை சந்தித்தார். மார்ச் 1858 இல் இவர் ஆசம்கரை ஆக்கிரமித்து, இப்பகுதியைக் கைப்பற்றுவதற்கான ஆரம்ப பிரிட்டிசாரின் முயற்சிகளைத் தடுத்தார். இருப்பினும், இவர் விரைவில் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. தக்ளசல் துரத்தப்பட்ட இவர் , பீகார் அர்ராவை நோக்கி பின்வாங்கினார். ஏப்ரல் 23 அன்று, தளபதி லெ கிராண்ட் (இந்தியில் லெ கார்ட்) தலைமையிலான படைக்கு எதிராக ஜகதீசுபூர் அருகே நடந்த சண்டையில் சிங் வெற்றி பெற்றார். 1858 ஏப்ரல் 26, அன்று இவர் தனது கிராமத்தில் இறந்தார். இவரது சகோதரர் இரண்டாம் அமர் சிங் போராட்டத்தைத் தொடர்ந்தார். மேலும் சில மாதங்கள் சாகாபாத் மாவட்டத்தில் ஒரு இணையான அரசாங்கத்தை நடத்தினார். 1859 அக்டோபரில், அமர் சிங் நேபாளத்தில் கிளர்ச்சித் தலைவர்களுடன் சேர்ந்தார். [10]

மரபு[தொகு]

இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு இவர் அளித்த பங்களிப்பை கௌரவிப்பதற்காக, இந்திய அரசு 1966 ஏப்ரல் 23 அன்று ஒரு நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. [11] . பீகார் அரசு 1992 இல் அர்ராவில் வீர குன்வர் சிங் பல்கலைக்கழகத்தை நிறுவியது. [12]

2017 ஆம் ஆண்டில், வடக்கு மற்றும் தெற்கு பீகாரை இணைக்கும் அர்ரா-சாப்ரா பாலம் என்றும் அழைக்கப்படும் பாலத்திற்கு வீர குன்வர் சிங் பெயரிட்டு திறந்து வைக்கப்பட்டது. [13] 2018 ஆம் ஆண்டில், குன்வர் சிங் இறந்த 160 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, பீகார் அரசு இவரின் சிலையை ஆர்டிங்கே பூங்காவில் மீண்டும் நிறுவியது. இந்த பூங்கா அதிகாரப்பூர்வமாக 'வீர குன்வர் சிங் ஆசாதி பார்க்' என்றும் பெயர் மாற்றப்பட்டது.

பிரிட்டிசு ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒரு நாயகனாக பல போஜ்புரி நாட்டுப்புற பாடல்களில் இவர் குறிப்பிடப்படுகிறார். ஒரு குறிப்பிட்ட நாட்டுப்புற பாடல் கூறுகிறது: [14]

1970களில், நக்சலைட் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதற்காக பீகாரில் ராஜ்புத்திர இளைஞர்களால் ' குயர் சேனா ' (குன்வாரின் இராணுவம்) என்று அழைக்கப்படும் ஒரு தனியார் நில உரிமையாளர் போராளிக்குழு உருவாக்கப்பட்டது. இதற்கு குன்வர் சிங் பெயரிடப்பட்டது.

ஜகதீசு சந்திர மாத்தூர் எழுதிய விஜய் கி வேலா (வெற்றியின் தருணம்) என்ற நாடகம் குன்வர் சிங்கின் வாழ்க்கையின் பிற்பகுதியை அடிப்படையாகக் கொண்டது. சுபத்ரா குமாரி சவுஹான் எழுதிய " ஜான்சி கி ராணி " கவிதையிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.  

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. Martin, Robert Montgomery; Roberts, Emma (1858). The Indian empire : its history, topography, government, finance, commerce, and staple products : with a full account of the mutiny of the native troops ... Vol. 1. London ; New York : London Print. and Pub. Co.
 2. S. Purushottam Kumar (1983). "Kunwar Singh's Failure in 1857". Proceedings of the Indian History Congress 44: 360–369. 
 3. Dirk H.A. Kolff (2002). Naukar, Rajput, and Sepoy: The Ethnohistory of the Military Labour Market of Hindustan, 1450-1850. Cambridge University Press. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521523059.
 4. E. Jaiwant Paul. The Greased Cartridge: The Heroes and Villains of 1857-58. Roli Books Private Limited. pp. 90–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5194-010-4.
 5. E. Jaiwant Paul (1 August 2011). The Greased Cartridge: The Heroes and Villains of 1857-58. Roli Books Private Limited. pp. 90–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5194-010-4.
 6. Kalikinkar Datta, Biography of Kunwar Singh and Amar Singh, K.P. Jayaswal Research Institute, 1984, p.20
 7. "Nana Sahib, Rani of Jhansi, Koer Singh and Baji Bai of Gwalior, 1857, National Army Museum, London". collection.nam.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 October 2017.
 8. P. Kumar (1982). "HARE KRISHNA SINGH-THE PRIME-MOVER OF 1857 IN BIHAR". Proceedings of the Indian History Congress 43: 610–617. 
 9. 9.0 9.1 Sarala (1999). Indian Revolutionaries: A Comprehensive Study, 1957-1961, Volume 1. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87100-16-4.
 10. History of Bhojpur பரணிடப்பட்டது 14 சூன் 2012 at the வந்தவழி இயந்திரம். Bhojpur.bih.nic.in. Retrieved on 2011-10-12.
 11. Stamp at Indiapost. Indianpost.com (1966-04-23). Retrieved on 2011-10-12.
 12. Veer Kunwar Singh University பரணிடப்பட்டது 29 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம். Vksu-ara.org (1992-10-22). Retrieved on 2011-10-12.
 13. "Veer Kunwar Singh Setu". McElhanney. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
 14. Badri Narayan (1998). "Popular Culture and 1857: A Memory against Forgetting". Social Scientist 26 (1/4): 86–94. doi:10.2307/3517583. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்வர்_சிங்&oldid=2989060" இலிருந்து மீள்விக்கப்பட்டது