அர்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அர்ரா என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த பெயர் சில நேரங்களில் அரா என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இது போஜ்பூர் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமாகும். இது கங்கை மற்றும் சோன் நதிகளின் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. தனாபூரிலிருந்து 24 மைல் தொலைவிலும் பாட்னாவில் இருந்து 36 மைல் தொலைவிலும் உள்ளது.[2]

சொற்பிறப்பியல்[தொகு]

"அர்ரா" அல்லது "அரா" என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான 'அரண்யா' என்பதிலிருந்து உருவானது. அதாவது காடு என்பதாகும். நவீன அராவைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பழைய நாட்களில் பெரிதும் காடுகளாக இருந்தது என்று அது கூறுகிறது. புராணங்களின்படி இராமரின் குருவான விஸ்வாமித்திர முனிவரது ஆசிரமம் இந்த பிராந்தியத்தில் அமைந்திருந்ததாக கருதப்படுகின்றது.[3]

புவியியல்[தொகு]

அர்ரா கடல் மட்டத்திலிருந்து 192 மீ உயரத்தில் கங்கா மற்றும் சோன் நதியின் சங்கமத்தில் அர்ரா அமைந்துள்ளது.[4] நகரத்தில் பாயும் மற்ற சிறிய ஆறுகள் கங்கி நதி, பாட்கி ஆறு மற்றும் சோட்கி ஆறு என்பனவாகும்.

பிரித்தானிய ஆட்சியின் போது அர்ரா வங்காளத்தின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட்டது. நகரின் நிலம் வளமானதாகவும், மிகக் குறைந்த வனப்பகுதியுடன் சாகுபடிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் அரிசி, மா மற்றும் இலுப்பை என்பனவாகும்.

காலநிலை[தொகு]

காலநிலை ஒப்பீட்டளவில் அதிக வெப்பநிலை மற்றும் ஆண்டு முழுவதும் சமமாக கிடைக்கும் மழையால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த காலநிலைக் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையில் அடங்குகின்றது.[5]

நிர்வாகம்[தொகு]

தற்போது அர்ரா போஜ்பூர் மாவட்டத்தின் தலைமையகமாக உள்ளது. அர்ரா நகராட்சி நிறுவனம் 45 வார்டுகளில் நகரத்தை பிரிக்கிறது. மாவட்டத்தில் 36 காவல் நிலையங்கள் உள்ளன.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி அர்ரா மாநகராட்சியின் மொத்த மக்கட் தொகை 261,099 ஆகும். இதில் 139,319 ஆண்கள் மற்றும் 121,780 பெண்கள் அடங்கிகின்றனர். இது பாலின விகிதத்தை 874 ஆகக் கொண்டிருந்தது. 5 வயதுக்குக் குறைவானவர்கள் 34,419 வசிக்கின்றனர் மக்களின் கல்வியறிவு விகிதம் 83.41 சதவீதமாக இருந்தது.[6]

போஜ்புரி பிராந்திய மொழியாக பேசப்படுகிறது. இருப்பினும் இந்தி மொழி உத்தியோகப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கலாச்சாரம்[தொகு]

அர்ராவின் சொந்த மொழி போஜ்புரி மொழியாகும். போஜ்புரி திருவிழாக்கள் மற்றும் உணவு வகைகள் இங்கு பின்பற்றப்படுகின்றன. போஜ்புரி உணவு வகைகளில் லிட்டி- சொக்கா, மகுனி, தால் பித்தி, பித்தா, ஆலூ டம், மற்றும் முக்கிய சிற்றுண்டி மற்றும் இனிப்புகளான தேகுவா, புதுக்கியா, படால் கே மிதாய் மற்றும் அனர்சா ஆகியவை அடங்கும். சாதுஸ், அம்ஜோர், தாடி மற்றும் மாத்தே என்பன பானங்களாகும்.

சாத், தீபாவளி, டீஜ், ஜியுடியா, காய் தாத் ( கோவர்தன பூஜை ), ஜம்துதியா, ஈத், கிறிஸ்துமஸ் போன்றன இங்கு கொண்டாடப்படும் பண்டிகைகள் ஆகும்.

விளையாட்டு[தொகு]

துடுப்பாட்டம் மிகவும் பிரபலமான விளையாட்டு ஆகும். இருப்பினும் கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் தடகள போன்ற பிற விளையாட்டுகளும் விளையாடப்படுகின்றன.

வீர் குன்வர் சிங் ஸ்டேடியம் ரம்னா மைதானத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் , பல்வேறு துடுப்பாட்டம், கால்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகள் நடைப்பெறுகின்றன . ரம்னா மைதானம், மகாராஜா கல்லூரி மைதானம், விமான நிலைய மைதானம் மற்றும் ஜெயின் கல்லூரி மைதானம் ஆகியவை நகரத்தின் பிற மைதானங்கள் ஆகும்.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ரா&oldid=2868086" இருந்து மீள்விக்கப்பட்டது