குட்டுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டநாடு

ஒருவரை ஊரின் பெயரால் பெயரிட்டு அழைப்பது போல, மன்னனை நாட்டின் பெயரால் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் இருந்துவந்தது.

குட்ட நாட்டில் இளவரசு பட்டம் கட்டப்பட்டு ஆட்சியைத் தொடங்கியவன் குட்டுவன். குடநாட்டில் தொடங்கியவன் குடவர் கோமான். பொறைநாட்டில் தொடங்கியவன் பொறையன். மாந்தை நகரில் தொடங்கியவன் மாந்தரன்.

குட்டுவன் என்னும் பெயர் சேர மன்னனைக் குறிக்கும். சேரல், குட்டுவன், கோதை, பொறை, பொறையன் போன்றவை சேர மன்னனைக் குறிக்கும் பெயர்கள்.

குட்டுவன், குட்டுவன் இரும்பொறை, குட்டுவன் கோதை, நம்பி குட்டுவன், குட்டுவன் கீரனார் குட்டுவன் கண்ணனார், குட்டுவன் சேரல், கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் முதலான பெயர்களில் குட்டுவன் என்னும் பெயர் இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம்.

அன்றியும் பொதுப்படக் குட்டுவன் என்று சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் பதிற்றுப்பத்து நூலில் வருவன பல்யானைச் செல்கெழு குட்டுவனையும், கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனையும் குறிப்பனவாக உள்ளன. இவற்றைத் தனியே தொகுத்துக் காட்டிய பின்னர், யாரோடும் சேர்த்துப் பார்க்க முடியாத குட்டுவன் மன்னர்களை இங்கு வகைப்படுத்திக் காணலாம்.

பல்யானைச் செல்கெழு குட்டுவன்[தொகு]

பல்யானைச் செல்கெழு குட்டுவன் பொலந்தார்க் குட்டுவன் என்று போற்றப்படுகிறான்.[1]

கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்[தொகு]

யானையுலா வரும் இந்தச் சேரன் அடுபோர்க் குட்டுவன் என்றும், [2] பொலந்தார்க் குட்டுவன் என்றும் [3] போற்றப்படுகிறான். இவன் பௌவம் கலங்க வேலிட்டுப் படுகடல் ஓட்டியவன். [4] இவனை அட்டு ஆன்று ஆனான் என்கிறார் புலவர். [5] இவன் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து தாக்கிய மோகூர்ப் போரில் வென்று பாண்டியனின் காவல்மரம் வேம்பை வெட்டினான். [6] இந்தக் குட்டுவனின் முசிறித் துறைமுகத்தில் செல்வம் கொழித்திருந்தது. [7] வஞ்சி அரசன் குட்டுவன் வடபுல இமயத்து வாங்கு(வளைந்த) வில் பொறித்தான் [8] தகடூரைத் தாக்கிய விறல்போர்க் குட்டுவன் அங்குத் தன்னை எதிர்ப்பவர் இல்லாதது கண்டு தலைநகர் மீண்டு பௌவம் நீங்க ஓட்டினான். [9]

  • தொண்டி அரசன் குட்டுவன்
குட்டுவன் தொண்டித் துறைமுத்தின் அரசன். இந்தத் தொண்டி அரசன் விறற்போர்க் குட்டுவன் யானையில் உலா வருவான். [10]
  • மாந்தை அரசன் குட்டுவன்
மாந்தை அரசன் குட்டுவன் பகைவர் பலரை வென்று ஆரவாரம் செய்ததைக் கண்டு குருகுகள்கூட நடுங்கின. [11] [12] குட்டுவனின் மரந்தை நகரம் போலத் தலைவி அழகுள்ளவள். [13]
  • வஞ்சிநகர வள்ளல் சோழிய ஏனாதித் திருக்குட்டுவன்
சோழிய ஏனாதி திருக்குட்டுவன் தன் வஞ்சிநகரைப் பாடிய புலவருக்கு யானைகளைப் பரிசாக நல்கினான். [14]
  • சேரநாட்டுக் கழுமல அரசன் வள்ளல் குட்டுவன்
சேரநாட்டுக் கழுமல அரசன் நற்றேர்க் குட்டுவன். குதிரை பூட்டிய தேரில் உலாவரும் இவன் சிறந்த வள்ளல். [15]
  • குடநாட்டு அரசன் குட்டுவன்
மழவர் களவு உழவு செய்து வாழும் ஒடுங்காட்டுக்கு அப்பால் சென்றால் குட்டுவனின் குடநாட்டை அடையலாம். [16]
  • அகப்பா அரசன் குட்டுவன்
குட்டுவனின் அகப்பா நகரைச் செம்பியன் பட்டப்பகலில் தீக்கு இரையாக்கினான். [17]
  • குடவரைக் குட்டுவன்
குட்டுவனின் குடவரைச் சுனையில் பூத்த குவளைப் பூவில் மொய்த வண்டு தலைவியின் கூந்தலிலும் மொய்க்கும். [18]

குட்டுவன்[தொகு]

  • குடநாட்டை ஆண்ட குட்டுவன் மழவர் தன் நாட்டில் களவு செய்யாதவாறு காப்பாற்றினான். [19]
  • கழுமலத்தை ஆண்டவன் 'நல்தேர்க் குட்டுவன்' [20]
  • தொண்டி அரசன் 'விறல் போர் குட்டுவன்' [21] [22]
  • மரந்தை அரசன் குட்டுவன் [23] [24]
  • குட்டுவனின் அகப்பாக் கோட்டையைச் செம்பியன் தகர்த்தான் [25]
  • குடவரை குட்டுவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. [26]
  • பல்யானைச் செல்கெழு குட்டுவன் 'பெரும்பல் குட்டுவன்' எனப் போற்றப்படுகிறான். [27]
  • மறப்போர்க் குட்டுவன் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் கட்டூரைத் தாக்கியபோது எதிர்ப்பார் யாரும் இல்லாததால் சினங்கொண்டு கடலை முற்றுகையிட்டு வேல் வீசிக் கடல்பிக்கோட்டினான். [28] [29]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாலைக் கௌதமனார் – பதிற்றுப்பத்து 23
  2. பரணர் – பதிற்றுப்பத்து 42
  3. பரணர் – பதிற்றுப்பத்து 43
  4. பரணர் – பதிற்றுப்பத்து 46
  5. பரணர் – பதிற்றுப்பத்து 47
  6. பரணர் – பதிற்றுப்பத்து 49
  7. பரணர் – புறம் 343
  8. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் – சிறுபாணாற்றுப்படை 49
  9. பரணர் – அகம் 212
  10. நக்கீரர் – அகம் 290
  11. அம்மூவனார் – நற்றிணை 395
  12. கொல்லிக்கண்ணன் – குறுந்தொகை 34
  13. பரணர் – அகம் 376
  14. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் – புறம் 394
  15. சாகலாசனார் – அகம் 270
  16. மாமூலனார் – அகம் 91
  17. மாமூலனார் – நற்றிணை 14
  18. முடத்திருமாறன் – நற்றிணை 105
  19. அகம் 91
  20. அகம் 270
  21. அகம் 290
  22. ஐங்குறுநூறு 178
  23. அகம் 376
  24. நற்றிணை 395
  25. நற்றிணை 14
  26. நற்றிணை 105
  27. பதிற்றுப்பத்து 29
  28. விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, படைநிலா இயங்கும் கடல்மருள் தானை, மட்டு அவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர்மாண் எஃகம் - அகம் 212
  29. கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு ... படுகடல் ஓட்டிய ... குட்டுவன் - பதிற்றுப்பத்து 46
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டுவன்&oldid=2564883" இலிருந்து மீள்விக்கப்பட்டது