கிழக்கத்திய மெய்யியல்
கிழக்கத்திய மெய்யியல் (Eastern philosophy) என்பது ஆசியா கண்டத்தில் தோன்றி வளர்ந்த சீன மெய்யியல், ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், இந்திய மெய்யியல், கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.
இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய்யியலையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு.
வகைப்பாடு
[தொகு]ஆசியா கண்டத்தில் தோன்றி வளர்ந்த மெய்யியல்கள் "கிழக்கத்திய மெய்யியல்" என்றால் அவற்றுள் அரபி மெய்யியல் மற்றும் யூத மெய்யியலையும் சேர்த்துக் கருதுவது உண்டு. இக்கருத்து புவியியல் அடிப்படையை மட்டும் கொண்டிருப்பதில்லை. மாறாக, கருத்தளவிலும் விளக்கமுறையிலும் மேற்கத்திய மரபுக்கும் கிழக்கத்திய மரபுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன என்னும் அடிப்படையிலும் இவ்வாறு வகைப்படுத்தல் நிகழ்கிறது.
முழுமுதல் பரம்பொருளும் துணைநிலைக் கடவுளரும்
[தொகு]ஆபிரகாமிய சமய மரபு "கடவுள் ஒருவரே" என்னும் கொள்கையுடையது. அந்த மரபிலிருந்து எழுந்த சில மேற்கத்திய மெய்யியல்கள் கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையாக "ஒரு கடவுள் கொள்கை" (monotheism) என்னும் அணுகுமுறை கொண்டுள்ளன. இது கிறித்தவ மறையின் பின்புலமாக எழுந்த மேற்கத்திய மெய்யியல்களுக்குப் பொருந்தும்.
கிழக்கத்திய சமயங்கள் பிரபஞ்சத்தைப் படைத்து ஆள்பவர் ஒரே கடவுளே என்பது குறித்து அவ்வளவாகக் கவனம் செலுத்தவில்லை. அங்கு சமயம் சார்ந்த மெய்யியலுக்கும் சமயம்சாரா மெய்யியலுக்கும் இடையிலான வேறுபாடு அழுத்தம் பெறவில்லை. எனவே ஒரே மெய்யியல் போக்கில் சமயம் சார்ந்த கூறுகளும் சமயம்சாராக் கூறுகளும் காணப்படுவது உண்டு. இவ்விதத்தில், சிலர் புத்த மதத்தின் மெய்யியல் அடிப்படைகளை ஏற்றபோதிலும் அம்மதத்தின் வழிபாட்டில் கலந்துகொள்வதில்லை. வேறு சிலர் தாவோயிசக் கடவுளர்களை வழிபட்டாலும் அந்த வழிபாட்டின் இறையியல் அடிப்படைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்றும் சிலர் தாவோயிச சமயத்தை ஏற்றாலும் அதன் புராணக் கதைகளை ஏற்பதில்லை.
மேற்கூறிய கிழக்கத்திய இசைவுமுறை அண்மைக்கால மேற்கத்திய மெய்யிலில் காணப்படுவது அரிது. யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய சமயக் கொள்கைகளோடு அவற்றிற்குரிய மெய்யியல் அடிப்படைகள் இசைவாக இணைத்துக் கருதப்பட்டது பண்டைய மரபு ஆகும். ஆனால் அண்மைக் காலத்தில் மேற்கத்திய மெய்யியல் சமயக் கொள்கைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் விதத்தில் வளர்ந்து வந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, நீட்சே, கார்ல் மார்க்சு, வோல்ட்டேர் போன்றோரின் மெய்யியல் கொள்கைகளைக் கருதலாம்.
சமயங்கள் ஒப்பீடு
[தொகு]மேற்கத்திய மெய்யியலுக்கும் கிழக்கத்திய மெய்யியலுக்கும் இடையே நிலவும் ஒரு வேறுபாடு, அவை கடவுள்/கடவுளர் பிரபஞ்சத்தோடு எவ்வகையில் தொடர்புநிலை கொண்டுள்ளனர் என்பது பற்றி அளிக்கும் விளக்கம் ஆகும். மேற்கத்திய மரபில், பண்டைக்கால கிரேக்க சிந்தனைமுறையில் இயற்கையே கடவுளாகக் கருதப்பட்டது உண்டு; அனைத்துமே கடவுள் (pantheism) என்னும் கொள்கையும் ஏற்கப்பட்டது உண்டு.
ஆனால், ஆபிரகாமிய சமயங்களாகிய யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகியவற்றில் ஒரே கடவுள் நம்பிக்கை ஏற்கப்பட்டதால் கடவுள் அனைத்தையும் "கடந்து" நிற்பவர் என்னும் தத்துவம் மேலோங்கியது.
கடவுள் என்றொரு பரம்பொருள் வழியாகவே உலகத் தோற்றத்தை விளக்குவதற்குப் பதிலாக, பண்டைய கிரேக்க மெய்யியல் உலகத் தோற்றம் இயற்கை சக்திகளால் எழுந்ததே என்னும் கொள்கையைக் கொண்டிருந்தது. இம்முறையே பல கிழக்கத்திய மெய்யியல்களிலும் காணப்படுகிறது.
மேலும் கிழக்கத்திய மெய்யியல்கள் "பலகொள்கை இசைவு தத்துவம்" (Syncretism) என்னும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து, மரபுவழி சமயக் கொள்கைகளோடு மெய்யியல் கொள்கைகளையும் எளிதாக இணைத்துக்கொண்டன. எடுத்துக்காட்டாக, "யி சிங்" (I Ching), "யிங்-யாங்" (Ying and Yang), "வு சிங்" (Wu Ching), "ரென்" (Ren) போன்ற சமயக் கொள்கைகள், மரபுக்கொள்கைகளோடு இசைவுற இணைத்ததைக் குறிப்பிடலாம்.
மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய மெய்யில்களை இசைவுற இணைக்கும் முயற்சி
[தொகு]அண்மைக்காலத்தில் பல சிந்தனையாளர்கள் மேற்கத்திய மெய்யியலையும் கிழக்கத்திய மெய்யியலையும் இசைவுற இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆர்த்தர் ஷோப்பனவர் (Arthur Schopenhauer) உருவாக்கிய மெய்யியலில் இந்து சமயக் கருத்துகளை இணைத்தார். உபநிடதங்களில் அடங்கியுள்ள கருத்துகள் அவரது மெய்யியலில் இடம்பெறுகின்றன. என்றாலும், அவர் பயன்படுத்திய உபநிடத மொழிபெயர்ப்புகள் அவ்வளவு துல்லியமாக அமையவில்லை என்று கருதப்படுகிறது.
கியோட்டோ மெய்யியல் குழு மேற்கத்திய மெய்யியலாராகிய எட்மண்ட் ஹுஸ்ஸர்ல் (Edmund Husserl) என்பவரின் "தோற்றவியல்" என்னும் மெய்யியல் கருத்துப்போக்கையும் சென் பவுத்தத்தின் (Zen Buddhism) கருத்துகளையும் இணைக்கும் செயலில் ஈடுபட்டது.
வாட்சுஜி டெட்சூரோ (Watsuji Tetsuro) என்னும் சப்பானிய மெய்யியலார் கிழக்கத்திய மெய்யியலையும் மேற்கத்திய மெய்யியலாராகிய சோரன் கீர்க்ககார்டு (Søren Kierkegaard), நீட்சே, ஹைடகர் (Heidegger) போன்றோரின் சிந்தனைகளையும் இணைக்க முயற்சி செய்தார்.
ஹைடகரின் மெய்யியல் சிந்தனையில் கிழக்கத்திய மெய்யியல் பாங்குகள் உள்ளன என்று சிலர் கருதுகின்றனர். ஒரு சப்பானியருக்கும் ஆய்வாளருக்கும் இடையே நிகழும் உரையாடல் ஹைடகரின் எழுத்துகளில் உள்ளது. மேலும், ஹைடகர் தம் சீன மாணவராகிய பவுல் சாயோ என்பவரோடு சேர்ந்து தாவோயிச மூல நூலாகிய "தாவோ தே சிங்" (Tao Te Ching) என்னும் ஆதார ஏட்டை செருமானிய மொழியில் பெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். இவ்வாறு, ஹைடகர் தம் மெய்யியல் சிந்தனையில் "கிழக்கு" நோக்கித் திரும்பினார் என்றொரு கருத்து உள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் இந்து மரபைச் சார்ந்த அரவிந்த கோஷ் (1872–1950) என்னும் சிந்தனையாளரின் படைப்புகளில் செருமானிய கருத்துநிலையியலின் (German Idealism) தாக்கம் உண்டு. அவர் உருவாக்கிய "முழுமை யோகம்" (Integral Yoga) என்னும் ஆன்மிகக் கோட்பாடு கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய மெய்யியல்களின் இசைவு ஆக்கமாகக் கருதப்படுகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டவரான கார்ல் யுங் (Carl Jung) என்னும் உளவியலார் சீன மெய்யியல் கொள்கையாகிய "இ சிங்" (I Ching) என்பதைத் தம் சிந்தனையோடு இணைத்தார். ஒன்றுக்கொன்று எதிர்மறையான சக்திகள் தமக்குள் சமநிலை பெறுவதே இலட்சிய நிலை என்னும் அத்தத்துவத்தை யுங் தழுவிக்கொண்டார்.
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Jim Fieser: Intro to Eastern Philosophy பரணிடப்பட்டது 2008-03-28 at the வந்தவழி இயந்திரம்
- atmajyoti.org பரணிடப்பட்டது 2004-12-05 at the வந்தவழி இயந்திரம் Articles and commentaries on a wide range of topics related to practical Eastern Philosophy
- Kheper Website: Eastern Philosophy பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்