காளியாபட்டி சிவன் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்
காளியாபட்டி சிவன் கோவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார் கோயில் வட்டம், காளியபட்டி கிராமத்தில் (அஞ்சல் குறியீட்டு எண் 622501) அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் சிவன் ஆவார். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பராமரிக்கப்படும் இக்கோவில் 9-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. விஜயாலய சோழன் காலத்தில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான சோழர் கோவில்களில் இதுவும் ஒன்று என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கருதுகிறார். இக்காலத்தில் கட்டப்பட்ட சிறந்த ஏகதள விமானங்களில் இதுவும் ஒன்று என்பதும் இவர் கருத்தாகும்.[1] [2]
அமைவிடம்
[தொகு]இவ்வூர் மலையடிப்பட்டியிலிருந்து 2.5 கி.மீ. தொலைவிலும், கிள்ளுக்கோட்டையிலிருந்து 10.0 கி.மீ. தொலைவிலும், குன்னாண்டார்கோயிலிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், கீரனூரிலிருந்து 19 கி.மீ . தொலைவிலும், குளத்தூரிலிருந்து 34 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இக்கோவில் கீரனூர் கிள்ளுக்கோட்டை தடத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 622501 ஆகும்.[3]
கோவில் அமைப்பு
[தொகு]அதிட்டானம் முதல் தூபி வரை கருங்கல்லால் கட்டப்பட்ட இந்தச் சோழர்பாணி கற்றளி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை மற்றும் அர்த்தமண்டபம் ஆகிய அங்கங்களைக் கொண்டிருந்த இக்கற்றளியின் அர்த்தமண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து போனது. தற்போது இதன் அடித்தளம் மட்டும் எஞ்சியுள்ளது. சதுர வடிவில் அமைந்த கருவறையும் கருவறையின் மேலமைந்த ஏகதள அல்ப விமானம் நாகர வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த விமானத்தின் அதிட்டானம் பாதபந்த அதிட்டானம் ஆகும் உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை ஆகிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. அதிட்டானத்தின் மேலே எழும் சுவர்கள் நான்கு அரைத்தூண்களால் மூன்று பத்திகளாகப் பிரித்தமைக்கப்பட்டுள்ளன. சாலைப்பத்தியில் எவ்விதமான கோட்டங்களும் அகழப்படவில்லை.[4]. [2][1]
நான்முக அரைத்தூண்களுக்கு மேலே உள்ள விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. இதற்கு மேலே வாஜனமும் அதற்குமேல் வலபியும் பிரஸ்தர உறுப்புகளாக அமைந்துள்ளன. வாலபியில் பூத கண வரிசை எதுவும் இடம்பெறவில்லை. பிரஸ்தரத்திற்கு மேலே கூரை அமைந்துள்ளது. கூரை முன்னிழுப்புப் பெற்று கபோதமாக நீட்சி பெற்றுள்ளது. கபோதத்தில் பக்கத்திற்கு இரண்டு வீதம் அழகிய கூடுகள் காட்டப்பட்டுள்ளன. கபோதத்திற்கு மேலே பூமிதேசம் இடம்பெற்றுள்ளது. பூமிதேசத்தில் யாளி வரி காட்டப்பட்டுள்ளது.[4]. [2][1]
காளியபட்டி சிவன் கோவில் கருவறை ஏகதள நாகர விமான .கிரீவத்தின் நான்கு புறமும் கிரீவ கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டங்களில் தெய்வ உருவங்கள் எதுவும் நிறுவப்படவில்லை.கோட்டங்களுக்கு மேலே அமைந்துள்ள மகாநசிகைகள் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளன. நான்முக சிகரம் அழகான வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சிகரத்திற்கு மேலே இரத்தினபீடமும் பத்மபீடமும் அமைந்துள்ளன. சிகரத்திற்கு மேலே தூபி காணப்படவில்லை.[4] [2].[1]
கருவறைக்கு முன்பு அர்த்தமண்டபம் இருந்திருக்க வேண்டும். தற்போது சுமார் 6 அடி சதுர வடிவிலான அடித்தளம் மட்டும் எஞ்சியுள்ளது. அர்த்தமண்டபத்தின் அடித்தளம் கருவறையின் அடித்தளத்துடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. நந்தி மண்டபத்தின் அடித்தளம் மற்றும் துணைக்கோவில்களின் அடித்தளங்களின் எச்ச்ங்களையும் காணமுடிகிறது. இக்கோவிலைச் சுற்றி அமைந்திருந்த நுழைவாயில் மற்றும் சுற்று மதில்கள் இருந்த சுவடுகளையும் காண முடிகிறது.[4]. [2][1]
கல்வெட்டுகள்
[தொகு]இக்கோவிலின் தெற்குச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள பரகேசரிவர்மனின் 18 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டு இக்கோவிலின் காலத்தைக் கணிக்க உதவியதாக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். விஜயாலய சோழன் பரகேசரிவர்மன் என்ற பட்டப்பெயரைக் கொண்டிருந்த தொடக்ககால சோழ மன்னன் ஆவான். முதலாம் பராந்தகனும் பரகேசவர்மன் எனும் பட்டப்பெயரைக் கொண்டிருந்தான், ஆனால் பராந்தனின் கல்வெட்டுகளில் பரகேசரிவர்மன் என்ற பெயருடன் பராந்தகன் பெயரும் சேர்ந்தே மதுரை கொண்ட பரகேசரி என்ற சொற்றோடர் இடம் பெற்றிருக்கும். ஆகவே இக்கோவிலை எழுப்பியவன் விஜயாலய சோழனே என்பது எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனின் வாதம்.[4] [2]
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய சோழர்கள் என்ற நூலில் விசாலூர், திருப்பூர் மற்றும் காளியபட்டி ஆகிய ஊர்களில் உள்ள சிறிய சிவன் கோவில்கள் அனைத்தும் விஜயாலய சோழன் காலத்தைச் சேர்ந்தவை என்று குறிப்பிட்டுள்ளார். [2]
காளியாபட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இதே போன்ற பிற கோயில்கள், 9 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் முத்தரையர்களால் எழுப்பப்பட்டிருக்கலாம் என்று டக்ளஸ் பாரெட் என்று கருதுகிறார். [2]
கே வி சௌந்தர ராஜன், பனங்குடி, காளியாபட்டி, விசாலூர் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் மற்றும் பிற ஒத்த கட்டிடங்களை, கி.பி. 860 ஆம் ஆண்டைச் சேர்ந்த பாண்டியர்களின் கலைப்பாணியில் அமைந்த சின்னங்களாகக் கருதுகிறார். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 அருள்மிகு காளியாபட்டி சிவன் திருக்கோயில் ] தமிழிணையம் தமிழர் தகவலாற்றுபடை
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Kaliyapatti – Ruined Shiva Temple Saurabh Saxena. Puratattva January 11, 2011
- ↑ Kaliyapatti Onefivenine
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Balasubrahmanyam, S R (1966). Early Chola Art part 1. Asia Publishing House. Mumbai. pp 52-54