உள்ளடக்கத்துக்குச் செல்

கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டர் கோழிக்கறி
தாய்லாந்தில் இருந்து வாத்துக் கறி
சோறும் கோழிக் கறியும் (தில்லி)
பனீர் கறி ரொட்டியுடன்

சங்கநூல்களில் கறி எனும் சொல் மிளகைக் குறிப்பதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாளில் கறி (ஒலிப்பு) (Curry) என்பது பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளையும் குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குப் போன ஒரு சொல்.[1]

"கறி" சொல் பயன்பாடு[தொகு]

"கறி" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமின்றி இன்று உலகளாவிய அளவில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும்.

இந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப்பில் வேகவைத்து (கறியாக சமைத்து) உணவுக்காக பெறப்படுபவற்றைக் குறிக்கிறது. இவ்வாறு கறியாக சமைத்து உண்ணும் உணவு வகைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுத்தலாம். ஒன்று சைவ உணவு. மற்றொன்று அசைவ உணவு. இதில் அசைவு உணவு என்பது மாமிச உணவு வகைகளைக் குறிக்கும். அதனை "மச்சக்கறி" என அழைக்கும் வழக்கும் உள்ளது. சைவ உணவு என்பது அசைவம் அல்லாத மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து பெறப்படும் உணவு வகைகளைக் குறிக்கும். இவ்வாறு மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பயன்படுபவற்றையே மரக்கறிகள் என அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் ஒரு சமுதாயத்தினர் இந்த உணவைக் கறியமுது என்றே அழைக்கின்றனர். அதாவது அமுதத்தைப் போன்ற கறி என்பதாகும்.

சங்க இலக்கியத்தில் மிளகைக் குறிப்பதற்குக் "கறி" சொல் பயன்பாடு[தொகு]

சங்க இலக்கியத்தில் பல இடங்களில் கறி மிளகைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. மிளகு எனுஞ்சொல் நான்குமுறை மட்டுமே வந்துள்ளது.[2]

 1. சந்தன மரத்தில் படரும் மிளகுக்கொடி - கறி வளர் சாந்தம் – அகநானூறு 2-6
 2. மிளகு பரவியுள்ள மலை - கறி இவர் சிலம்பின் – அகநானூறு 112-14
 3. கிரேக்கர்கள் கப்பலில் பொன்னும் பொருளும் கொண்டுவந்து மிளகை வாங்கிச் செல்லுதல் - யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு 149-10
 4. முரட்டுக் குரலையுடைய வயதான மானொன்று மிளகுக் கொழுந்தைத் தின்ன விரும்பாமை - அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ – அகநானூறு 182-14
 5. பாறைமீது படர்ந்துள்ள மிளகுக்கொடி - துறுகல் நண்ணிய கறி இவர் படப்பை – அகநானூறு 272-10,
 6. மிளகு வளரும் மலைமேல் - கறி வளர் அடுக்கத்து – நற்றிணை 151-7
 7. வளர்ந்த மிளகுக்கொடியில் உறங்கும் கானாங்கோழி – வாரணம் முதிர் கறி யாப்பில் துஞ்சும் நாடன் – நற்றிணை 151-7
 8. மிளகு வளரும் மலைமேல் - கறி வளர் அடுக்கத்து – குறுந்தொகை 90-2
 9. மிளகு வளரும் மலைமேல் - கறி வளர் அடுக்கத்து – குறுந்தொகை 288-1
 10. மிளகு வளரும் மலைமேல் - கறி வளர் சிலம்பின் – ஐங்குறுநூறு 243-1
 11. மிளகு வளரும் மலையில் – கறிய கல் – ஐங்குறுநூறு 246-1
 12. மிளகு வளரும் மலையில் - கறி வளர் சிலம்பில் – கலித்தொகை 52-17
 13. மிளகொடு சமைத்த சோற்றுடன் ஊன் துவையல் - ஊன் துவை கறி சோறு உண்டு – புறநானூறு 14-14
 14. மிளகு வளரும் மலையில் - கறி வளர் அடுக்கத்து – புறநானூறு 168-2
 15. வீடுகளில் குவிந்திருக்கும் மிளகு - மனைக் குவைஇய கறி மூடையால் – புறநானூறு 343-3
 16. மலையிலுள்ள சந்தனமும் மிளகும் - சிலம்பின் கறியொடும், சாந்தொடும் – பரிபாடல் 16-2
 17. கொத்தாக இருக்கும் பச்சை மிளகுத் துணர் - காய்த்துணர்ப் பசுங்கறி – மலைபடுகடாம் 521
 18. கொடியில் காய்த்துத் தொங்கும் மிளகுத்துணர் - கறிக் கொடிக் கருந்துணர் – திருமுருகாற்றுப்படை 309
 19. பலா மரத்தில் படர்ந்திருக்கும் மிளகுக்கொடிகள் - பைங்கறி நிவந்த பலவின் – சிறுபாணாற்றுப்படை 43
 20. மாதுளை பிளந்து வெண்ணெய்யும் மிளகும் சேர்த்து - நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து – பெரும்பாணாற்றுப்படை 307
 21. இஞ்சி, மஞ்சள், பச்சை மிளகும் இன்னபிறவும் - இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் – மதுரைக்காஞ்சி 289
 22. மூடைமூடையாய் வந்திறங்கிய கருமிளகும் - காலின் வந்த கருங்கறி மூடையும் – பட்டினப்பாலை 186

கறியின் வகைகள்[தொகு]

செய்யும் முறைக்கேற்ப கறியின் பெயர்கள் மாறுபடுகின்றன. எண்ணெயில் வதங்கும்படி சமைக்கும்போது 'வதக்கல்', வேகவைத்த பருப்போடு சமைத்தால் 'பொறியல்', கற்று புளி சேர்த்து செய்தால் 'புளிக்கறி', சமான அளவில் காய்த்துண்டுகளையும், அரைத்த பருப்பு விழுதையும் சேர்த்து செய்யும்போது 'உசிலி', வேகவைத்த காய்களை பருப்பு, புளியோடு சேர்த்து நன்றாகக் கடைந்து சற்று நீர்த்த நிலையில் செய்வது 'மசியல்', பொதுவாக நன்றாக நீர் வற்றும்படி புரட்டி செய்வது 'புரட்டல்' முதலியன ஆகும்.


அடிப்பாகம்[தொகு]

ஒரு மரத்தின் (அடிப்பகுதி) வேர் பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் கிழங்குகள் என அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு:

 • மரவள்ளிக்கிழங்கு
 • உருளைக்கிழங்கு
 • வள்ளிக்கிழங்கு

நடுப்பாகம்[தொகு]

மரத்தின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் தண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு:

 • வாழைத் தண்டு (வாழைமரத்தின் நடுப்பாகத்தை வெட்டி பெறப்படும் பகுதி)
 • கோகிலைத் தண்டு (இதனை கோகிலைக் கிழங்கு என்றும் அழைப்பர்)

இலைப்பகுதி[தொகு]

மரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை கீரைவகைகள் என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினுடைய இலைகளைக் குறிக்கும்.)

எடுத்துக்காட்டு:

 • மரவள்ளிக்கீரை
 • புதினாக்கீரை
 • வல்லாரைக்கீரை (சிலக் கீரைகள் முழுச் செடிகளாகவே பயன்பட்டாலும் குறிப்பாக அதன் இலைப்பகுதியையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

நுனிப்பகுதி[தொகு]

இலைகளின் (கீரைகளின்) நுனிப்பகுதையை மட்டும் உணவாகக் கொள்ளும் பொழுது அவற்றை கொழுந்துவகைகள் என்றழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு:

 • பூசணிக்காய் கொழுந்து
 • புளியங் கொழுந்து

மலரும் பகுதி[தொகு]

மரத்தின் பூக்கும் பூக்களை கறியாக சமைத்து உணவாகக் கொள்ளும் பொழுது அவை பூ வகைகள் என அழைக்கப்பட்டன.

எடுத்துக்காட்டு:

 • அத்திப்பூ

பூக்கள் காயானால்[தொகு]

இவ்வாறு மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து வந்த நாம், மரத்தில் காய்க்கும் காய்களில், கறியாக சமைத்து உண்பதற்கு பயன்படுபவனவற்றை காய்கறி வகைகள் அல்லது காய்கறிகள் என்று வகைப்படுத்துகின்றோம்..

எடுத்துக்காட்டு:

 • கத்தரிக்காய்
 • பூசணிக்காய்
 • வெண்டிக்காய்

(காய்கறிகள் என்பது கறியாக சமைத்து உற்கொள்ளப்பயன் படும் காய்களை மட்டுமே குறிக்கும்.)

காயின் உற்பகுதி[தொகு]

செடிகளின் காய்கள் அல்லது பழங்களின் உள்ளிருக்கும் விதைகளை கறியாக சமைத்து உண்ணக்கூடியவற்றை தானியங்கள் என்றழைக்கப்பட்டன. அவற்றை தானியத்தின் பெயரோடு கறி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. (இதில் அரிசியும் ஒரு தானியம் என்றாலும், அது தமிழரது பிரதான உணவாக இருப்பதால் சிலர் அதனை ஒரு தானியமாகப் பார்ப்பதில்லை அல்லது கூறுவதில்லை)

எடுத்துக்காட்டு:

 • அவரை
 • பாசிப்பயறு

தானியங்கள் முளைக்கும் பருவம்[தொகு]

இந்த தானியங்கள் முளைக்கும் பருவத்தில் அவற்றை கறி சமைப்பதற்காக எடுக்கப்படுபவற்றை முளைகள் என்றே அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு:

 • சோயாமுளை
 • பயறு முளை

இவ்வாறு மரம், செடி, கொடி என்பவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பெறப்படும் அனைத்துப்பாகங்களுக்கும் ஒரே பெயராக “மரக்கறிகள்” என்றழைக்கப்படுகின்றன. மரத்தின் காய்கள் பழுத்தப்பின் அவற்றை கறியாக சமைத்து உண்பதில்லை என்பதால் அவை “மரக்கறிகள் எனும் பெயர்வழங்கலில் இருந்து விலகி பழங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

தமிழர்களின் அன்றாட உணவுகளில் சோறும் கறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கறி இந்தியாவிலும் ஆசியாவில் பல காலமாக ஒரு முக்கிய உணவு வகையாக இருந்து வருகிறது. தற்காலத்தில் மேற்குநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் இந்திய உணவை உண்ண தெரிவு செய்யும் மேற்கு நாட்டினர் "Lets go to cuury" என்று கூறுவர்.

கறி வகைகள்[தொகு]

 • குழப்பு, சாம்பார்
 • கூட்டுக்கறி, பிரட்டல், மசியல்
 • கீரை
 • பருப்பு
 • வறை
 • பாற்கறி
 • வதக்கிய கறி


மேற்கோள்கள்[தொகு]

 1. The term curry may derive from the Tamil word kari (கறி - in Tamil means sauce). It is understood that the British mistook the term, as the Tamil people call Kari Columbu which means meat gravy as being curry, derived from the usage of "Kari" in the Tamil language and other South Indian Dravidian languages, to connote some of the stew/gravy-like dishes eaten with rice "The Origins of 'Curry'". Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
 2. Vaidehi Herbert. "Sangam Poems Translated by Vaidehi". Sangam Poems Translated by Vaidehi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறி&oldid=3548636" இலிருந்து மீள்விக்கப்பட்டது