உள்ளடக்கத்துக்குச் செல்

கண்புரை நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்புரை
Cataract
மனிதக்கண்ணில் கண்புரை -- உருப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண் மருத்துவம்
ஐ.சி.டி.-10H25.-H26., H28., Q12.0
ஐ.சி.டி.-9366
நோய்களின் தரவுத்தளம்2179
மெரிசின்பிளசு001001
கண் வில்லையின் இடத்தைக் காட்டும் மனிதக்கண்ணின் குறுக்குவெட்டுத் தோற்றம்

கண்புரை (ஒலிப்பு) (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவும் தன்மையைக் (transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு. திரை என்றால், தோல் சுருக்கம் / கண்புரை என்று இரு பொருள் கொள்ளலாம். கண்புரைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை; இவை விழித்திரையில் (retina) விழும் ஒளியின் அளவைக் குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலை ஆகும். அச்சமயத்தில் அவர்களின் கிட்டப்பார்வை கூடுதலாகிக் கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். அவர்களுக்கு நீல நிறத்தைக் காண்கின்ற திறனும் குறையும். பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை (பெரும்பாலும்) பெரியளவு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை முற்றிலும் பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம்.[1] இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும்.[2]

இந்தியாவில் பார்வைக்குறைபாடுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 68 லட்சம். இதில் 63 விழுக்காடு பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். [3]

வயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை (senile cataract) முதலில் சற்று ஒளிபுகாத்தன்மையுடன் துவங்கி, வில்லை பெருத்து, பின்னர் முழுமையும் ஒளி புகாவண்ணம் சுருங்கும் தன்மையானது.[4] தவிர மார்காக்னிய கண்புரை (Morgagnian cataract), கண்வில்லையின் புறப்பகுதி (cortex) பால் போன்ற திரவமான வகையில் மாறித் தடிப்பை உண்டாக்கும்; இதனால் கண்வில்லையின் உறை உடைபட்டு வழியலாம். சரியாகச் சிகிட்சை அளிக்கப்படாவிட்டால் குளுக்கோமா என்ற கண் நோய் உருவாகிடக் காரணமாக அமையும். சில முதிர்ந்த கண்புரையில் வில்லையை இணைத்திருக்கும் தசைநார்கள் உள்ளேயோ வெளியேயோ இடம் பெயரலாம். அவ்வாறு தானாகவே வெளியே நகர்ந்தால் ஓரளவு ஒளி உட்புகுமாதலால் அதனை இறைவனின் வரமாகப் பழங்காலத்தினர் கருதினர்.

ஆங்கிலத்தில் இதன் பெயரான காடராக்ட் என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் cataracta என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாகக் காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது முத்து (pearl,pearl eyed) என்று அழைக்கப்படுகிறது.[5]

அறிகுறிகளும் நோய்த்தன்மையும்

[தொகு]

கண்புரை முதிர்ந்த நிலையில் பார்வை முற்றிலும் குறைபடுகிறது. துவக்கக் காலங்களில் கண்பார்வையில் சற்றே திறன் குறைந்து வெளிச்சமான பொருட்களைக் காண்கையில் கண் கூசும். இரவு நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் எதிர்வரும் வாகனங்களின் ஒளியால் அவதியுறுவர். ஒளிமாறுபாடுகளைக் கண்டறியும் திறன் பாதிக்கப்படும். இதனால் நிழல்கள், வண்ண மாற்றங்கள், வரிவடிவங்கள் காண்பது கடினமாகும். இந்த அறிகுறிகளைக் காணின் கண்மருத்துவர் ஒருவரை நாடுதல் வேண்டும்.

நகரப்பகுதிகளில், சர்க்கரைநோய் போன்ற காரணிகளால் புரை தோன்ற வாய்ப்புகள் உள்ளவர்கள் தெருவிளக்கினைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் கண்டால், அதிலும் ஒரு கண்ணில் மட்டும், கண்மருத்துவரை நாடுதல் மிகவும் தேவையாகும்.

காரணிகள்

[தொகு]

கண்புரை நோய் பலவித காரணங்களால் வருகின்றன:

  • புற ஊதாக்கதிர்களுக்கு நெடுங்காலமாகக் கண்ணை வெளிப்படுத்துவது
  • சர்க்கரை நோயின் தாக்கம்
  • இரத்த அழுத்த நோயின் தாக்கம்
  • பயங்கரமான அடி

இவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பிறக்கும்போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபுவழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும்.

தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். ஐசுலாந்து விமான ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வணிக விமானங்களை ஓட்டுபவர்களிடம் கண்புரை வருவதற்கு மற்றவர்களை விட மூன்று மடங்கு வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது வான்வெளியில் அவர்கள் கூடுதல் கதிர்வீச்சிற்கு எதிர்படுவதால் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.[6] இதேபோல அகச்சிவப்புக் கதிர்களுக்கு எதிர்பட்ட கண்ணாடி ஊதுபவர்கள் போன்றோரும் இதே போன்ற வாய்ப்பினைக் கொண்டுள்ளனர். நுண்ணலைக் கதிர்களும் கண்புரை வரக் காரணமாகும். ஒவ்வாமை நிலைகளும் சிறுவர்களிடையே புரைநோய் வரக் காரணமாக அமைந்துள்ளது.[7]

கண் புரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, வளர்ந்து கொண்டோ அல்லது நிலையாகவோ, மென்மையாகவோ அல்லது வலிதாகவோ இருக்கலாம்.

ஸ்டீராய்ட் போன்ற சில மருந்துகளும் கண்புரை தோன்றக் காரணிகளாக அமைகின்றன.[8]

கண்புரை மையப்புரை (nuclear), புறத்துபுரை (cortical), முதிர்ந்த புரை (mature), மிகமுதிர்ந்த புரை (hypermature) என வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்து வெளிப்புறப் புரை (பெரும்பாலும் மருந்துகளால்)[8][9]) மற்றும் உட்புறப் புரை (பெரும்பாலும் வயதானவர்களிடையே) எனவும் பிரிக்கப்படுகின்றன.

புரையின் வகைகள்

[தொகு]

கண்ணில் ஏற்படும் புரை பல வகைப்படும். பெரும்பாலான புரைகள் லென்ஸில் ஏற்படும் இரசாயண மாற்றத்தினால் ஏற்படுகின்றன.

முதுமைப் புரை

[தொகு]

பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்புரை ஏற்பட வாய்ப்புண்டு. புரைகளில் 80 சதவிகிதம் முதுமைப் புரையாகும்.

பிறவிப் புரை

[தொகு]

குழந்தைகளுக்கு அபூர்வமாக இந்தப் புரை நோய் ஏற்படுகிறது. இது கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு உண்டாகும் நோயாலோ அல்லது பரம்பரை காரணமாகவோ வரலாம்.

கண்ணில் அடிபடுவதால் வரும் புரை

[தொகு]

இந்தப்புரை எந்த வயதினருக்கும் வரலாம். பலமான அடி, ஊசி முனைக்காயம், வெட்டுக்காயம், அதிகமான வெப்பம், இரசாயனப் பொருட்கள் போன்ற காரணங்களால் லென்ஸ் பாதிக்கப்பட்டு புரை உண்டாகலாம்.

பிற நோய்களால் ஏற்படும் புரை

[தொகு]

கண்நீர் அழுத்த நோய், கிருஷ்ணபடல அழற்சி, நீரழிவு நோய், கண்ணுக்குள் வளரும் கட்டி போன்ற காரணங்களாலும் புரை உண்டாகலாம்.

மருந்துகளால் ஏற்படும் புரை

[தொகு]

நீண்ட நாட்கள் ஸ்டீராய்டு சொட்டு மருந்துகளை உபயோகிப்பதாலும், மாத்திரைகளாக உட்கொள்வதாலும் புரை ஏற்படும். குறிப்பாக ஆஸ்துமா மற்றும் மாற்று சிறுநீரக நோயாளிகளுக்கு இப்புரை வர வாய்ப்புகள் அதிகம்.

தடுப்பு

[தொகு]

அறிவியல் முறையிலான தடுப்பு வழிகள் எதுவும் அறியப்படவில்லை எனினும் சூரிய ஒளியிலிருந்து காக்கும் குளிர்க்கண்ணாடிகள் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி புரை தோன்றும் வயதைத் தள்ளிப் போடலாம் எனக் கூறப்படுகிறது.[10][11] ஆக்சியேற்றிப்பகைகளான உயிர்சத்துகள் A, C மற்றும் E முதலியன அவை இயற்கையாக விளங்கும் உணவுப்பொருட்களை உண்பதனால் நோய்வரும் நிலையைத் தள்ளிப்போடுவதாகவும் ஆனால் இவற்றை வில்லைகளாக உண்பதால் பயனெதுவும் இல்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.[12]

சிகிட்சை

[தொகு]
கடற்படை மருத்துவமனை ஒன்றில், வலதுகையில் சோதனைக்கருவியும் இடது கையில் கத்தியும் கொண்டு நுண்ணோக்கியினடியில் கண்புரை அறுவை செய்யும் காட்சி

மிகவும் வெற்றி கண்ட பொதுவான சிகிட்சை முறை, கண்புரை அறுவை சிகிட்சை செய்யத்தகுந்த நிலைக்கு முதிர்ந்த பிறகு, கண்வில்லை வைக்கப்பட்டுள்ள உறையில் ஓர் கிழிசலை ஏற்படுத்தி மேகமூட்டமான வில்லையை நீக்குவதே ஆகும். இவ்வாறு கண்வில்லையை நீக்குவதில் இருவகை அறுவை முறைகள் உள்ளன:

  • உறையிலிருந்து வில்லையை நீக்குதல் (extracapsular cataract extraction, or ECCE)
  • உறையுடன் வில்லையை நீக்குதல் (intracapsular cataract extraction, or ICCE).

முதல்முறையில் கண்வில்லையை மட்டுமே அறுவை சிகிட்சை மூலம் நீக்கப்படும். பெரும்பாலான வில்லையுறை அப்படியே இருக்கும். மிக கூடுதலான அதிர்வெண் உடைய ஒலி அலைகளால் கண்வில்லை சிறுதுகள்களாக உடைக்கப்பட்டு (phacoemulsification) வெற்றிட உறிஞ்சி வழியாக உறிஞ்சப்படும்.

இரண்டாம்(ICCE) முறையில் கண்வில்லை அதன் உறையுடன் அறுவை சிகிட்சை மூலம் நீக்கப்படும். இது தற்போது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை.

இரண்டு முறைகளிலும் புரைவிழுந்த கண்வில்லை நீக்கப்பட்டு அதனிடத்தில் நெகிழ்வினால் ஆன வில்லையொன்று நிலையாகப் பொருத்தப்படுகிறது. நவீன வில்லை தொழில்நுட்பத்தில் முன்னதாக கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறை இருந்தவர்களுக்கு இந்த வில்லையில் அதற்கான திருத்த வடிவமைப்பும் மேற்கொள்ளப்படுவதால் அறுவை சிகிட்சைக்குப் பின்னர் தனியாக கண்ணாடி எதுவும் அணிய வேண்டியதில்லை.

கண்புரை அறுவைகள் உடலின் அப்பகுதியில் மட்டும் தாக்கமேற்படுத்தும் மயக்க மருந்துகளுடன் செய்யப்படுவதால் நோயாளி அன்றே வீடு திரும்பலாம்.

கண்வில்லையுறை நீக்கப்படும் இரண்டாம் முறையில் செயற்கை வில்லையை கண்ணினுள்ளே பொருத்த வியலாது. அவர்களுக்கு தடித்த கண்ணாடிகள் அணிய வேண்டியிருக்கும். அத்தகைய தடித்த கண்ணாடிகளின் ஒளிப்பண்புகளால் ஜாக் இன் தி பாக்ஸ் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.[13] இந்தக் கண்ணாடிகளை பராமரிப்பதும் மிகவும் கடினமாகும். இக்காரணங்களால் கண்ணினுள் வில்லைகள் (IOL) பொருத்தவியலும் முதல் முறை நவீன மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது; நோயாளிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

நோய் வீச்சு

[தொகு]
10,000 பேருக்கு குறைபாடு சமனாக்கப்பட்ட வாழ்வு ஆண்டுகள் - 2002ஆம் ஆண்டு.[14]
  தரவில்லை
  120க்கு குறைவு
  120-240
  240-360
  360-480
  480-600
  600-720
  720-800
  800-960
  960-1080
  1080–1200
  1200–1320
  1320க்கு கூடுதல்

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி உலகளவில் பார்வையற்றோரில் 48% (18 மில்லியன் மக்கள்) முதிய வயதினால் ஏற்படும் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்கள்.[15] பல நாடுகளில் அறுவை சிகிட்சைச் சேவைகள் போதுமானதாக இல்லையாதலால் பார்வை இழப்பவர் எண்ணிக்கைக் கூடி வருகிறது. மக்கள்தொகையின் வயது ஏற ஏற புரைநோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பார்வை குறைகள் உள்ளவர்கள் எண்ணிக்கைக்கு முதன்மைக் காரணமாக கண்புரை உள்ளது. அறுவை சிகிட்சைக்கான காத்திருப்பு, அறுவை சிகிட்சை விலை, போதிய தகவலின்மை, போக்குவரத்து போன்ற காரணங்களால் அறுவை சிகிட்சை மேம்பட்ட வளரும் நாடுகளிலும் கண்புரையால் பார்வைத்திறன் குறைந்தவர்கள் இருக்கக்கூடும்.

ஐக்கிய அமெரிக்காவில் 52 முதல் 64 வயதுடையோரில் 42% பேருக்கு கண்புரை நோயுள்ளதாகவும்,[16] 65 முதல் 74 வரை உள்ளோருக்கு 60% வரை உள்ளதாகவும்,[17] 75 முதல் 85 வயதுடையோருக்கு 91% வரை உள்ளதாகவும் [16]கண்டறியப்பட்டுள்ளது.

வளர்கின்ற தொழில்மயமாக்கம் ஓசோன் இருப்பைக் குறைப்பதால் கதிரவனின் ஒளியில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் கூடி கண்புரை நோயின் பரவலை கூடுதலாக்கும் என்று நம்பப்படுகிறது.[18]

வரலாறு

[தொகு]

கண்புரை பற்றிய தொன்மையான செய்திகளை விவிலியம் மற்றும் இந்து ஆவணங்களிலிருந்து பெறுகிறோம்.[19] முதன் முதலில் இதற்கான அறுவை சிகிட்சையை இந்திய மருத்துவர் சுசுருதா கி. மு ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கியதாகத் தெரிகிறது.[20] இந்திய அறுவைமுறையில் ஜபமுகி சாலகா என்ற சிறப்புக்கருவி, ஓர் வளைந்த ஊசி, மூலம் கண் வில்லையை பெயர்த்தெடுத்தனர்.[20] பின்னர் சூடான வெண்ணெயில் ஊறவைத்துக் கட்டுப் போட்டனர்.[20] இந்த முறை வெற்றிகரமாக அமைந்தாலும் சுசுருதா இதனை தேவையேற்பட்டால் மட்டுமே பயன்படுத்த அறிவுரைத்தார்.[20] கிரேக்க மருத்துவர்களும் மெய்யியலாளர்களும் இந்த அறுவை சிகிட்சையைக் காண இந்தியாவிற்கு வந்தனர்.[20] இந்த முறை சீனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.[21]

தொன்மையான உரோமாவில் கண்புரை மற்றும் சிகிட்சை குறித்த குறிப்புகள் கி. பி 29 ஆம் ஆண்டு இலத்தீன் கலைகளஞ்சிய ஆசிரியர் ஔலஸ் கார்னியலஸ் செல்சஸ் எழுதிய தெ மெடிசன் (De Medicinae) புத்தகத்தில் உள்ளன.[22] கண் மருத்துவத்துறையில் உரோமானியர்கள் சிறந்து விளங்கினர்.[23]

ஈராக்கிய கண்மருத்துவர் அம்மர் இபின் அலி உறுஞ்சுதல் முறையில் முதன்முதலில் புரையெடுத்தார். ஓர் வெறுமையான உலோக உறுஞ்சுகுழலை கண்ணின் மேல் வைத்து தோலினடி (hypodermic) ஊசி மூலம் புரையை உறிஞ்சினார்.[24] கி.பி 1000 ஆம் ஆண்டில் அவர் எழுதிய Choice of Eye Diseases என்ற புத்தகத்தில் தாம் எவ்வாறு தோலினடி ஊசியைக் கண்டுபிடிக்கும்போது ஓர் விபத்தாக கண்புரை வெளியேற்றத்தைக் கண்டறிந்ததாக விளக்கியுள்ளார்.[25]

ஆராய்ச்சிகள்

[தொகு]

உடற்கொழுப்பைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்டாடின்கள் ஆக்சியேற்றுப்பகையாகவும் விளங்குகின்றன. வயதானவர்களுக்கு வரும் புரைகளில் முதன்மையான மையப்புரை நோய்க்கு ஆக்சிசனேற்றமே முக்கிய காரணியாக விளங்குவதாக்க் கருதப்படுகிறது. ஆகவே மையப்புரை மற்றும் ஸ்டாடின்களிடையே உள்ள தொடர்பை அறிய ஓர் ஆராய்ச்சிக்குழு மைய கண்புரை வர வாய்ப்புள்ள 1299 தன்னார்வலர்களுக்கு ஸ்டாடின் மருந்து கொடுத்து ஓர் ஆய்வு செய்தனர்.அதன் முடிவுகள் ஸ்டாடின்கள் நோய் வருவதை தவிர்ப்பதாகத் தெரிய வந்துள்ளது.[26]

இதே போன்ற ஆய்வுகள் சத்துகள் தூதேன் மற்றும் சீசாக்சாந்தின் மீதும் நடத்தப்பட்டன.ஆனால் அவை சரியான முடிவு எட்டக்கூடியனவாக அமையவில்லை.[27][28][29][30] எலிகளிடம் நடத்திய ஆய்வுகளில் மற்றும் பிற சோதனைகளில் பில்பெர்ரி (நாவல் பழம் ?) இரசம் நல்ல முடிவுகளைத் தந்துள்ளது.[31][32][33]

கடந்த சில ஆண்டுகளாக அசிடைல் கார்னோசின் அடங்கிய கண் சொட்டுமருந்துகளை உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கண்புரை நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கண்சொட்டுகள் ஆக்சிசனேற்றத்தைக் குறைத்து கண்வில்லை கடினமாவதைக் குறைக்கிறது.[34],[35]. ஆயினும் சரியான சோதனைகள் நடத்தப்படாததால் இந்த சொட்டு மருந்து பாவிப்பது பலத்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. காட்டராக்டு டாட் காம்
  2. "Common Causes of Vision Loss in Elderly Patients – July 1999 – American Academy of Family Physicians". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2010-02-03.
  3. கண்புரை நோயும் பிற பார்வைக் குறைபாடுகளும் Dr.புரூனோ
  4. eMedicine – Cataract, Senile : Article by Vicente Victor D Ocampo. From eMedicine The Continually Updated Clinical Reference
  5. Webster's Revised Unabridged Dictionary (1913 edition). பரணிடப்பட்டது 2007-01-11 at the வந்தவழி இயந்திரம் Public Reference Tools – The ARTFL Project (American and French Research on the Treasury of the French Laanguage), University of Chicago
  6. Rafnsson, V; Olafsdottir E, Hrafnkelsson J, Sasaki H, Arnarsson A, Jonasson F (2005). "Cosmic radiation increases the risk of nuclear cataract in airline pilots: a population-based case-control study". Arch Ophthalmol 123: 1102–1105. doi:10.1001/archopht.123.8.1102. பப்மெட்:16087845. 
  7. Chen CC, Huang JL, Yang KD, Chen HJ (March 2000). "Atopic cataracts in a child with atopic dermatitis: a case report and review of the literature". Asian Pac. J. Allergy Immunol. 18 (1): 69–71. பப்மெட்:12546060. 
  8. 8.0 8.1 SPENCER R, ANDELMAN S. "Steroidsarebad Cataracts. Posterior Subcapsular Cataract Formation In Rheumatoid Arthritis Patients On Long Term Steroid Therapy". Arch Ophthalmol 74: 38–41. பப்மெட்:14303339. 
  9. Greiner J, Chylack L (1979). "Posterior subcapsular cataracts: histopathologic study of steroid-associated cataracts". Arch Ophthalmol 97 (1): 135–44. பப்மெட்:758890. 
  10. Neale, RE; JL Purdie, LW Hirst, and AC Green (2003-11). "Sun exposure as a risk factor for nuclear cataract". Epidemiology (journal)/Epidemiology 14 (6): 707-712. PubMed. 
  11. J.C. Javitt, F. Wang and S. K. West, “Blindness Due to Cataract: Epidemiology and Prevention.” பரணிடப்பட்டது 2008-04-06 at the வந்தவழி இயந்திரம் Annual Review of Public Health 17 (1996): 159-77. Cited in Five-Year Agenda for the National Eye Health Education Program (NEHEP), p. B-2; National Eye Institute, U.S. National Institutes of Health
  12. A randomized, placebo-controlled, clinical trial of high-dose supplementation with vitamins C and E and beta carotene for age-related cataract and vision loss: AREDS report no. 9. Arch Ophthalmol. 2001 Oct;119(10):1439-52
  13. Roving ring scotoma &Jack-in-the-box Phenomenon in Aphakic spectacles – December 2008 – Medicine Decoded
  14. "Mortality and Burden of Disease Estimates for WHO Member States in 2002" (xls). World Health Organization. 2002.
  15. WHO | Priority eye diseases.
  16. 16.0 16.1 Sperduto RD, Seigel D. Sperduto RD, Seigel D. "Senile lens and senile macular changes in a population-based sample." Am J Ophthalmol. 1980 Jul;90(1):86-91. PubMed.
  17. Kahn HA, Leibowitz HM, Ganley JP, Kini MM, Colton T, Nickerson RS, Dawber TR. "The Framingham Eye Study. I. Outline and major prevalence findings." Am J Epidemiol. 1977 Jul;106(1):17-32. PubMed.
  18. எஆசு:10.1136/bmj.331.7528.1292-d
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  19. "A short history of cataract surgery". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2010-02-03.
  20. 20.0 20.1 20.2 20.3 20.4 Finger, page 66
  21. Lade & Svoboda, page 85
  22. "Cataract history". Archived from the original on 2017-05-03. பார்க்கப்பட்ட நாள் 2010-02-03.
  23. The Romans carried out cataract ops, February 9, 2008, BBC News
  24. Ibrahim B. Syed PhD, "Islamic Medicine: 1000 years ahead of its times", Journal of the International Society for the History of Islamic Medicine 2 (2002): 2-9 [7].
  25. Finger, Stanley (1994), Origins of Neuroscience: A History of Explorations Into Brain Function, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், p. 70, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-514694-8
  26. Klein, Barbara; Ronald Klein, Kristine Lee, and Lisa Grady (2006). "Statin Use and Incident Nuclear Cataract". Journal of the American Medical Association 295 (23): 2752–2758. doi:10.1001/jama.295.23.2752. பப்மெட்:16788130. 
  27. Nutrition. 2003 Jan;19(1):21 Lutein, but not alpha-tocopherol, supplementation improves visual function] in patients with age-related cataracts: a 2-y double-blind, placebo-controlled pilot study
  28. Invest Ophthalmol Vis Sci. 2006 Sep;47(9):3783-6. Lutein and zeaxanthin and the risk of cataract: the Melbourne visual impairment project
  29. Invest Ophthalmol Vis Sci. 2006 Jun;47(6):2329-35. Plasma lutein and zeaxanthin and other carotenoids as modifiable risk factors for age-related maculopathy and cataract: the POLA Study
  30. J Am Coll Nutr. 2004 Dec;23(6 Suppl):567S-587S Lutein and zeaxanthin and their potential roles in disease prevention
  31. Dietary supplementation with bilberry extract prevents macular degeneration and cataracts in senesce-accelerated OXYS rats Adv Gerontol. 2005;16:76-9
  32. Yamakoshi J, et al. J Agric Food Chem. 2002 Aug 14;50(17):4983-8.
  33. Ann Ottalmol Clin Ocul, 1989
  34. Williams DL, Munday P. The effect of a topical antioxidant formulation including N-acetyl carnosine on canine cataract: a preliminary study. Vet Ophthalmol. 2006;9(5):311-6
  35. Guo Y, Yan H. Preventive effect of carnosine on cataract development. Yan Ke Xue Bao. 2006; 22(2):85-8

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்புரை_நோய்&oldid=3891973" இலிருந்து மீள்விக்கப்பட்டது