ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒன்றிணைப்புச் சட்டங்கள் (Acts of Union) என இரு நாடாளுமன்ற சட்டங்கள் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் 1706ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இசுக்கொட்லாந்துடன் ஒன்றிணைப்பு சட்டம் மற்றும் 1707ஆம் ஆண்டில் இசுக்கொட்லாந்து நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இங்கிலாந்துடன் ஒன்றிணைப்பு சட்டம் - குறிப்பிடப்படுகின்றன. இரு நாடுகளின் நாடாளுமன்றங்களை பிரதிநிதிப்படுத்திய ஆணையர்களின் உரையாடல்களுக்கிணங்க சூலை 22, 1706 ஒப்பிட்ட ஒன்றிய உடன்பாட்டுக் கூறுகளை செயல்படுத்தும் விதமாக இருநாட்டு நாடாளுமன்றங்களும் இந்தச் சட்டங்களை முறையே நிறைவேற்றின. இந்தச் சட்டங்கள் முன்பு தனி நாடுகளாக, இரு நாடாளுமன்றங்களுடன் ஆனால் ஒரே மன்னருடன் விளங்கிய இங்கிலாந்து இராச்சியத்தையும் இசுக்கொட்லாந்து இராச்சியத்தையும் ஒன்றிணைத்தன. புதிதான ஒன்றிணைந்த நாடு "பெரும் பிரித்தானியா" என அழைக்கப்பட்டது.[1]

இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்திடமிருந்து இசுக்கொட்லாந்து மன்னர் ஆறாம் ஜேம்ஸ் மரபுவழியாகப் பெற்ற 1603ஆம் ஆண்டிலிருந்தே இரு நாடுகளும் ஒரே மன்னரைக் கொண்டிருந்தன; மணிமகுடங்களின் ஒன்றிணைப்பு என இது விவரிக்கப்பட்டாலும் 1707 வரை உண்மையில் ஒருவர் தரித்த இரு மகுடங்களாகவே இருந்தது. முன்னதாக இருநாடுகளையும் நாடாளுமன்றச் சட்டங்கள் மூலமாக ஒன்றிணைக்க 1606, 1667, மற்றும் 1689 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மூன்று முயற்சிகள் தோல்வியுற்றன.

இந்தச் சட்டங்கள் மே 1, 1707 முதல் செயல்பாட்டிற்கு வந்தன. இந்நாளில் இசுக்கொட்லாந்து நாடாளுமன்றமும் இங்கிலாந்து நாடாளுமன்றமும் இணைந்து பெரும் பிரித்தானிய நாடாளுமன்றம் உருவானது. இது இலண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் அமைந்தது.[2] எனவே இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றங்களின் ஒன்றிணைப்பு எனக் குறிப்பிடப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Article I of the Treaty of Union
  2. Act of Union 1707, Article 3
  3. "Britannia Incorporated". Simon Schama (presenter). A History of Britain. BBC One. 2001-05-22. No. 10. 3 minutes in.

வெளி இணைப்புகள்[தொகு]