ஐரோப்பிய ஒன்றிய வரலாறு
ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்பது இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பாவில் அரசியல் மற்றும் பொருளாதார ஒற்றுமை ஏற்பட நிறுவப்பட்ட அமைப்பாகும். போருக்குப்பின் நடைபெற்ற சமுதாய மறு சீரமைப்புப் பணியின் முக்கிய அம்சமாக ஐரோப்பிய ஒன்றியம் உருவானது.[1][2] ஐரோப்பியக் கண்டத்தின் அரசியல் மற்றும் வளமையை பிரான்சு மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையிலான போர் ஒருபோதும் பாதிக்கக் கூடாது என பிரெஞ்சு அரசியல்வாதியான சான் மோனட் (Jean Monnet) கருத்து தெரிவித்தார். இத்தகைய ஒற்றுமை ஏற்பட இத்தாலி மற்றும் பெனிலக்ஸ் ( பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க்) நாடுகளும் தங்களது ஆதரவைத் தெரிவித்தன.[3]
பெல்ஜியம், பிரான்சு, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவின.[4]
தோற்றம்
[தொகு]பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சர் இராபர்ட் ஸ்கூமான் (Robert Schuman) 1950-ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் 1951-ல் ரோம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் படி பெல்ஜியம், பிரான்சு, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளுக்கிடையே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் இரும்பு குழுமம் (ECSC - European Coal and Steel Community ) ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அடிப்படையாகக் கருதப்படுகிறது. ரோம் உடன்படிக்கையின் படி ஐரோப்பிய பொருளாதாரக் குழுமம்(EEC - European Economic Community) மற்றும் அணுவாற்றல் குழுமம் (EURATOM-European Atomic Energy Community) ஏற்படுத்தப்பட்டது.[5]
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.
1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.
போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.
1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஐரோ வலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.
2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
நோக்கங்கள்
[தொகு]- ஐரொப்பியக் குடியுரிமை
யை ஏற்படுத்துதல்
- ஐரோப்பியக் குடிமக்களுக்கு குடிமை உரிமைகளை உறுதிசெய்தல்
- சமுதாய முன்னேற்றத்தை உயற்த்துதல்
- ஐரோப்பிய பாதுகாப்பைப் வலுப்படுத்துதல்
- சமநீதியை உறுதிசெய்தல்
ஐரோப்பியக் கூட்டமைப்பின் அங்கங்கள்
[தொகு]ஐரோப்பிய நிறுவனத்தில் ஐந்து அங்கங்கள் உள்ளன. அவை:
- ஐரோப்பிய நாடாளுமன்றாம்
- ஐரோப்பிய ஒன்றிய மன்றம்
- ஐரோப்பிய ஆணையம்
- ஐரோப்பிய நீதிமன்றாம்
- ஐரோப்பிய கணக்கீட்டாளர் மன்றம்
ஐரோப்பிய நாடாளுமன்றம்
[தொகு]இது ஐரொப்பியக் கூட்டமைப்பின் சட்டம் இயற்றும் அமைப்பாகும். இதன் அங்கத்தினர்கள் உறுப்பு நாடுகளின் குடிமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1979-ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய நாடாளுமன்றாத்தின் தேர்தல் மக்களாட்சி முறைப்படி நடைபெற்றது. இதன் தலைமையகம் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க் (Strasburg) என்னுமிடத்தில் உள்ளது. தற்போது இதில் 736 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இது ஐரோப்பிய சட்டமன்றத்தின் பாதி அளவு ஆகும்.
ஐரோப்பிய ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது மாற்றங்கள் செய்வது நாடாளுமன்றத்தின் முக்கிய அதிகாரமாகும்.
ஐரோப்பிய ஒன்றிய மன்றம்
[தொகு]ஐரோப்பிய ஒன்றிய மன்றம் சில நேரங்களில் 'அமைச்சர்களின் கூட்டமைப்பு மன்றம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பியச் சட்டமன்றத்தின் மறுபாதியாகும். ஒவ்வொரு உறுப்பு நாடுகளில் இருந்தும் ஒருவர் இந்த அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2009 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ஹெர்மன் வான் ராம்பே (Herman Van Rampay) என்பவர் இந்த அவையின் முதல் நிரந்தரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு, டிசம்பர் முதலாம் தேதி இவர் பதவியேற்றார்.
ஐரோப்பிய ஆணையம்
[தொகு]ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகத் துறையாகச் செயல்படுவது ஐரோப்பிய ஆணையமாகும். மேலும் சட்டம் இயற்றுவதற்குத் தூண்டுதலாக இருந்து ஐரோப்பியர் கூட்டமைப்பின் அன்றாடப் பணிகளைச் செய்கிறாது. ஐரோப்பியக் கூட்டமைப்பின் சட்டங்களை வடிவமைத்து, அதனை ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிப்பது இதன் முதன்மைப் பணியாகும்.
ஐரோப்பிய நீதிமன்றம்
[தொகு]இது லக்சம்பர்க் நகரில் அமைந்துள்ளது. இதில் 15 நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் அனைத்து உடன்படிக்கைகளும், மன்றத்தின் சட்டங்களுக்கு உட்பட்டதா என்பதைத் தீர்மானிப்பது இந்நீதிமன்றமாகும். இம்மன்றத்தின் தீர்ப்புகளும், ஒன்றியத்தின் சட்டங்களும் உறுப்பு நாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்.
ஐரோப்பிய கணக்கீட்டாளர் மன்றாம்
[தொகு]ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவுக் கணக்குளை நிர்வகிப்பது ஐரோப்பியக் கணக்கீட்டாளர் மன்றமாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்துடன் இணைந்து வளங்கள் மற்றும் நிதியைச் சிறந்த முறையில் பங்கீடு செய்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய நாடுகள்
[தொகு]ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சூன் 2016-இல் ஐக்கிய இராச்சியம் விலகியது. [6] [7]
உசாத்துணை
[தொகு]தமிழ்நாடு அரசின் சமச்சீர்கல்விப் பாடநூல், ஒன்பதாம் வகுப்பு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வெளியீடு-2011.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burgess, Michael (2000). Federalism and European union: The building of Europe, 1950 - 2000. Routledge. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415226473.
Our theoretical analysis suggests that the EC/EU is neither a federation nor a confederation in the classical sense. But it does claim that the European political and economic elites have shaped and moulded the EC/EU into a new form of international organization, namely, a species of "new" confederation.
- ↑ Kiljunen, Kimmo (2004). The European Constitution in the Making. Centre for European Policy Studies. pp. 21–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789290794936.
- ↑ "Declaration of 9 May 1950". European Commission. பார்க்கப்பட்ட நாள் 5 September 2007.
- ↑ name="Europa History 45-59" "A peaceful Europe – the beginnings of cooperation". European Commission. பார்க்கப்பட்ட நாள் 12 December 2011.
- ↑ name="Europa History 45-59"
- ↑ வாக்களிப்பு முடிவும் அது குறித்த கருத்துகளும்
- ↑ பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?
வெளியிணைப்புகள்
[தொகு]- History of the EU Official Europa website
- CLIOH-WORLD CLIOH-WORLD: Network of Universities supported by the European Commission (LLP-Erasmus) for the researching, teaching and learning of the history of the EU, including History of EU Integration, EU-Turkey dialogue, and linking to world history.
- An Outline of the Emergence of the European Union