எலிசபெத் கேடி ஸ்டாண்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் கேடி ஸ்டாண்டன் 1880கள், வயது 65
பிறப்புஎலிசபெத் கேடி
(1815-11-12)நவம்பர் 12, 1815
ஜான்ஸ்டவுன், நியூயார்க்கு, அமெரிக்க ஐக்கிய நாடு
இறப்புஅக்டோபர் 26, 1902(1902-10-26) (அகவை 86)
நியூயார்க்கு நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு
பணிஎழுத்தாளர், பெண்கள் வாக்குரிமை இயக்கவாதி, பெண்களின் உரிமைகள் செயல்பாட்டாளர், அடிமை ஒழிப்பு இயக்கவாதி
பெற்றோர்டேனியல் கேடி(1773–1859)
மார்கரெட் இலிவிங்ஸ்டன் கேடி (1785–1871)
வாழ்க்கைத்
துணை
ஹென்றி ப்ரூஸ்டர் ஸ்டாண்டன்
(தி. 1840; இற. 1887)
பிள்ளைகள்7
கையொப்பம்

எலிசபெத் கேடி ஸ்டாண்டன் (Elizabeth Cady Stanton) (1815 நவம்பர் 12 - 1902அக்டோபர் 26) 1800களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை அமெரிக்காவில் பெண்கள் உரிமை இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1848 அமெரிக்காவின் நடந்த செனெகா பால்ஸ் மாநாட்டின் பின்னணியில் முக்கிய சக்தியாக இருந்தவர். பெண்களின் உரிமைகளைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரே நோக்கத்திற்காக அழைக்கப்பட்ட முதல் மாநாடாகும். மேலும், அதன் உணர்வுகள் பிரகடனத்தை எழுதிய முதன்மை எழுத்தாளர் ஆவார். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோருவது மாநாட்டில் ஒரு சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் இது விரைவில் பெண்கள் இயக்கத்தின் மையக் கொள்கையாக மாறியது. இவர் மற்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும், குறிப்பாக அடிமை ஒழிப்பு இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார்.

பெண்கள் உரிமை இயக்கம்[தொகு]

சூசன் பிரவுன் அந்தோனி
எலிசபெத் கேடி ஸ்டாண்டன்

1851 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்க சமூக சீர்திருத்தவாதியும் பெண்கள் உரிமை ஆர்வலருமான சூசன் பி. அந்தோனியைச் சந்தித்து, பெண்கள் உரிமை இயக்கத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு தசாப்த கால கூட்டாட்சியை உருவாக்கினார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான பிரச்சாரத்திற்காக இவர்கள் மகளிர் விசுவாச தேசிய அமைப்பு ஒன்றை நிறுவினர். இது அமெரிக்க வரலாற்றில் அதுவரை மிகப்பெரிய மனு இயக்கத்தை வழிநடத்தியது. பெண்கள் உரிமைகளுக்காக பணியாற்றுவதற்காக இவர்கள் 1868 இல் தி ரிவெல்யூசன் என்ற செய்தித்தாளைத் தொடங்கினர்.

உள்நாட்டுப் போருக்குப் பிறகு, இவரும் அந்தோணி ஆகிய இருவரும் அமெரிக்க சம உரிமைகள் சங்கத்தின் முக்கிய அமைப்பாளர்களாக இருந்தனர். இது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகளுக்காக குறிப்பாக வாக்குரிமைக்கான உரிமை பிரச்சாரம் செய்தது. அமெரிக்க அரசியலமைப்பின் பதினைந்தாவது திருத்தம் கறுப்பின ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமையை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இவர்கள் அதை எதிர்த்தனர். ஒரே நேரத்தில் அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் அனைத்து பெண்களுக்கும் வாக்குரிமை நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இயக்கத்தில் உள்ள மற்றவர்கள் திருத்தத்தை ஆதரித்தனர். இதன் விளைவாக பிளவு ஏற்பட்டது. பிளவுக்கு வழிவகுத்த கசப்பான வாதங்களின் போது, ஸ்டாண்டன் சில சமயங்களில் தனது கருத்துக்களை உயரடுக்கு மற்றும் இனரீதியாக தாக்கும் மொழியில் வெளிப்படுத்தினார். இதற்காக இவரது பழைய நண்பர் பிரடெரிக் தக்ளஸ் அவளை நிந்தித்தார்.

இவர், தேசிய பெண்கள் வாக்குரிமை சங்கத்தின் தலைவரானார். இவரும் அந்தோனியும் இயக்கத்தின் தங்கள் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உருவாக்கினர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிளவு குணமடைந்தபோது, ஸ்டாண்டன் ஒன்றுபட்ட அமைப்பான தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தின் முதல் தலைவரானார். இது பெரும்பாலும் ஒரு கெளரவ நிலைப்பாடு; பெண்களின் வாக்களிக்கும் உரிமையில் அமைப்பு பெருகிய முறையில் கவனம் செலுத்திய போதிலும், இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.

எழுத்து[தொகு]

ஹிஸ்டரி ஆப் சஃப்ரேஜ் என்ற நூலைன் முதல் மூன்று தொகுதிகளின் முதன்மை எழுத்தாளராக இவர் இருந்தார். இவர் தி வுமன்ஸ் பைபிள் என்ற புனைகதை அல்லாத நூலின் முதன்மை ஆசிரியராகவும் இருந்தார். இது விவிலியத்தின் ஒரு முக்கியமான பரிசோதனையாகும்.

குழந்தை பருவமும் குடும்ப பின்னணியும்[தொகு]

எலிசபெத் கேடி நியூயார்க்கின் ஜான்ஸ்டவுனில் ஒரு முன்னணி குடும்பத்தில் பிறந்தார். நகரத்தின் பிரதான சதுக்கத்தில் உள்ள இவர்களது குடும்ப மாளிகை பன்னிரண்டு ஊழியர்களால் பரமரிக்கப்பட்டது. பழமைவாதியான இவரது தந்தை டேனியல் கேடி, மாநிலத்தின் பணக்கார நில உரிமையாளர்களில் ஒருவர். கூட்டாட்சிக் கட்சியின் உறுப்பினரான அவர் ஒரு வழக்கறிஞராகவும் இருந்தார். அவர் ஐக்கிய அமெரிக்க பேரவையில் ஒரு தடவை பணியாற்றினார். மேலும், நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் நீதியாகவும் இருந்தார். [1] இவரது தாயார், மார்கரெட் லிவிங்ஸ்டன் கேடி, மிகவும் முற்போக்கானவர், அடிமை ஒழிப்பு இயக்கத்தின் தீவிரமான கேரிசோனிய பிரிவை ஆதரித்தார். மேலும், 1867இல் பெண்கள் வாக்குரிமைக்காக ஒரு மனுவில் கையெழுத்திட்டார். [2]

திருமணமும் குடும்பமும்[தொகு]

எலிசபெத் கேடி ஸ்டாண்டன் தனது மகள் ஹாரியட்டுடன்

இவர், தனது உறவினரும் முக்கிய அடிமை ஒழிப்பு முகவரான ஹென்றி புரூஸ்டர் ஸ்டாண்டனை [3] 1840இல் திருமணம் செய்து கொண்டார். [4] திருமணத்திற்குப் பிறகு ஸ்டாண்டன் தனது கணவரின் குடும்பப் பெயரை தனது ஒரு பகுதியாக வைத்துக் கொண்டார். எலிசபெத் கேடி ஸ்டாண்டன் அல்லது ஈ. கேடி ஸ்டாண்டன் என்று கையெழுத்திட்டார்.

செனெகா பால்ஸில் உள்ள ஸ்டாண்டனின் வீடு

தம்பதியருக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர். [5] இவரது மகள்களில் ஒருவரான ஹாரியட் ஸ்டாண்டன் பிளாட்ச், தனது தாயைப் போலவே, பெண்கள் வாக்குரிமை இயக்கத்தின் தலைவரானார்.

மரணம், அடக்கம் மற்றும் நினைவு[தொகு]

உட்லான் கல்லறையில் ஹென்றி புரூஸ்டர் ஸ்டாண்டன் மற்றும் எலிசபெத் கேடி ஸ்டாண்டன் ஆகியோரின் நினைவுச்சின்னம். இவரது சாதனைகள் நினைவுச்சின்னத்தின் மற்றொரு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன

அமெரிக்க அரசியலமைப்பின் பத்தொன்பதாம் திருத்தத்தின் மூலம் பெண்கள் அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமையை அடைவதற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு 1902 அக்டோபர் 26 அன்று நியூயார்க் நகரில் ஸ்டாண்டன் இறந்தார். தனது மரணத்திற்குப் பிறகு மூளையை விஞ்ஞான ஆய்வுக்காக கோர்னெல் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தார். ஆனால் அது சம்பந்தமாக அவரது விருப்பம் நிறைவேற்றப்படவில்லை. [6] நியூயார்க் நகரத்தின் பிராங்க்சில் உள்ள உட்லான் கல்லறையில் இவரது கணவருடன் இவர் அடக்கம் செய்யப்பட்டார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Griffith, pp. 3–5
  2. Ginzberg, p. 19
  3. Stanton, Eighty Years & More, p. 72
  4. McMIllen, p. 96
  5. Griffith, p. 66
  6. Ginzberg, pp. 185–86
  7. Wilson, Scott. Resting Places: The Burial Sites of More Than 14,000 Famous Persons, 3d ed.: 2 (Kindle Locations 44700-44701). McFarland & Company, Inc., Publishers. Kindle Edition.

நூல்பட்டியல்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Elizabeth Cady Stanton
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


ஸ்டாண்டனின் படைப்புகள்[தொகு]

ஸ்டாண்டனின் படைப்புகளின் தொகுப்புகள்[தொகு]

பிற இணைய ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_கேடி_ஸ்டாண்டன்&oldid=3236418" இலிருந்து மீள்விக்கப்பட்டது