எச்சவுறுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எச்சவுறுப்புக்கள் (Vestigiality) என்பது யாதெனில், உடற்கூற்று ஒப்பியல் (Comparative anatomy) சான்றுகளில், விலங்குகளின் உடலில் பயனின்றியும்,[1] நல்ல வளர்ச்சி பெறாமல் குன்றியும் காணும் சில உறுப்புக்கள் இவை உயிரியின் பரிணாம வளர்ச்சிக்குச் சான்றாகும். இச்சான்று உறுப்புக்களை, எச்சவுறுப்புக்கள் என அழைக்கின்றனர்.

பறவை[தொகு]

புறாவின் இறகு
கிவி (பறவை) எச்ச இறகு

சில எச்சவுறுப்பு, ஒரு விலங்கினத்தில் பயனுள்ளதாயிருக்கும். ஆனால், அதே இனத்தின் நெருங்கிய இனத்தில் அதே உறுப்புப் பயனற்றுக் குன்றியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, சாதாரணப் பறவைகளுக்குப் பறக்க உதவும் இறக்கைகள் நியூசிலாந்திலுள்ள கீவிபறவையில் மிகச் சிறுத்து உடம்பின் இறகுகளால் மூடப்பட்டு இருக்கின்றன. அவை வெளியே காணப்படுவதில்லை ; பறப்பதற்குப் பயன்படுவதுமில்லை. ஆனாலும் அந்நுண்ணிய இறக்கைகளில் புறாவின் இறக்கைகளிலிருப்பது போல், எலும்புக் கோவையும் தசைத் தொகுதியும் உண்டு. மற்றப் பறவைகள் தத்தம் அலகுகளை இறக்கைக்குள் வைத்துக் கொண்டு உறங்குவதுபோல், கீவியும் தன் அலகை இறக்கைக்குள் வைத்துக்கொண்டு உறங்க முயல்கிறது. இதிலிருந்து கீவி பெரிய பயனுள்ள இறக்கைகளையுடைய மரபிலே பிறந்திருக்க வேண்டும்; ஆயினும் கீவி வசிக்கும் இடங்களில் தற்காலம் வரை, அதற்கு எதிரிகள் இல்லையென்பதால், அவை பறக்கத் தேவையில்லை ; ஆதலால் படிப்படியாக இறக்கைகள் சிறுத்துப் பயனற்று வந்திருக்க வேண்டும் என்ற பரிணாமக் கொள்கைத் தெரிகிறது.

ஊர்வன[தொகு]

மலைப்பாம்பின் எச்சவுறுப்பு

தவளை, பல்லி முதலிய விலங்களுக்கு நான்கு கால்களுண்டு. எனினும் பல்லிக்கு நெருங்கிய உறவான பாம்புக்குக் காலில்லை. ஆனால் மலைப்பாம்புகள் சிலவற்றில், மலவாயிலின் ஒவ்வொரு பக்கமும் ஒரு முள் அல்லது நகம் போன்ற பாகத்தைக் காணலாம். அந்தப் பாம்பின் உடம்பின் உட்பாகத்தை அறுத்துப் பார்த்தால் முள் போன்ற பாகத்துடன் இணைக்கப்பட்ட இடுப்பெலும்பு, தொடையெலும்பு, கீழ்க்கால் உள்ளெலும்பு முதலியவற்றைப் பார்க்கலாம். இச்சான்றுகளிலிருந்து, பாம்புகள் நாற்கால் உயிர்களான ஓந்திகளிலிருந்து தோன்றியிருக்கவேண்டு மென்பதும் ஓந்தியினத்திலேயே பலவற்றிற்குக் கால்களில்லை; ஆனால் தோள் வளையமும் இடுப்பு வளையமும் உண்டு. பின்னர்ப் பாம்பு வரிசைப் விலங்குகள் கல் இடுக்குக்களிலும் வளைகளிலும் ஊர்ந்து செல்ல முற்படவே, கால்கள் தேவையில்லாதுபோய்ப் பயனற்ற கால்கள் குறையத் தொடங்கி, இறுதியில் முள் போன்ற பாகங்களாகச் சிறுத்துப்போயிருக்க வேண்டுமென்பதும் பின்னர் நாளடைவில் கால்கள் இல்லாமலே போயின என்பதும் தெளிவாகின்றன.

பாலூட்டி[தொகு]

நிலத்தில் வாழும் பாலூட்டிகளுக்கு, உடம்பில் மயிர்ப்போர்வையுண்டு. ஆனால் நீர்வாழ் பாலூட்டிகளில், முக்கியமாகக் கடல் வாழ் பாலூட்டிகளுக்கு மயிர்ப் போர்வை யில்லாதிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, திமிங்கிலம், கடற்பன்றி, கடற்பசு முதலியவற்றிற்கு உதடுகளின் பக்கத்திலுள்ள தடித்த உரோமங்களைத் தவிர வேறு மயிர்ப் போர்வையில்லை. ஆனாலும் திமிங்கிலத்தில் சிறு குட்டிகளுக்குச் சில சமயங்களில், நிலப்பாலூட்டிகளில் இருப்பது போல் அடர்த்தியான மயிர்ப்போர்வை காணப்படுவதாகக் குக்கெந்தால் (Kukenthal) என்னும் அறிஞர் கூறுகிறார். மேலும், மேற்கூறிய விலங்குகளின் முன்கால்கள் துடுப்புப்போல் மாறியிருக்கின்றன. திமிங்கிலத்தில் பின்கால்கள் இருக்கவேண்டிய இடத்தில் சில சிறு எலும்புகள் தசைக்குள் மறைந்திருக்கின்றன. அவைகளே தேய்ந்து வந்து எஞ்சியிருக்கும் இடுப்பெலும்பும் தொடையெலும்பும் முன்கால் எலும்பும் ஆகும். ஆகவே மேற்கூறிய எச்சவுறுப்புக்களாகிய உரோமம், சிறிய எலும்புகளிலிருந்து இக்கடல்வாழ் பாலூட்டிகள், நிலம்வாழ் பாலூட்டிகளிலிருந்து தோன்றியிருக்க வேண்டுமென்றும், நீர் வாழ்க்கையிலீடுபட்டமையால் உரோமமும் பின்கால்களும் தேவையில்லாமற் போய் அவை சிறுத்துவிட்டன வென்றும் பரிணாமவியல் அறிஞர் எண்ணுகிறார்கள்.

கண்[தொகு]

பினியல் கண்- எச்சவுறுப்பு[2].[1]

முதுகெலும்பிகளுக்குச் சாதாரண இரு கண்களோடு தலையின் மேற்புறத்தில் கண்கள் இருந்தனவென்று தெரிகிறது. நியூசிலாந்தில் வசிக்கும் ஸ்வீனொடான் என்னும் பெரிய ஓணான் போன்ற பிராணியின் தலையின் மேற்புறத்தில் கண்திரை, வில்லைக்கண் நரம்பு முதலியவையுள்ள பினியல் (Pineal) கண் எச்சமாக இன்றைக்கும் உண்டு. அதற்குச் சாதாரணமாகக் கண்களின் முக்கிய பாகங்களிருப்பினும் இக்கண்ணால் காணமுடியாது. எனினும் இருள் பகல் என்று உணர முடியலாம்.

மனித எச்சவுறுப்புகள்[தொகு]

மனித உடம்பிலுள்ள முக்கியமான சில பயனற்ற எச்சவுறுப்புக்களை ஆராயந்த வீடர்சையம் (Wiedersheim) என்ற செருமானிய உயிரியல் அறிஞர், நம் முடலில் சுமார் 180 பயனற்ற உறுப்புக்கள் உண்டென்கிறார். அதில் அனைவருக்கும் தெரியும் உறுப்பு குடல்வால் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சவுறுப்புகள்&oldid=2873956" இலிருந்து மீள்விக்கப்பட்டது