இலங்கைக் காட்டுக்கோழி
இலங்கைக் காட்டுக்கோழி | |
---|---|
![]() | |
ஆண் கோழி, சிங்கராஜக் காடு, இலங்கை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | கல்லிபார்மஸ் |
குடும்பம்: | Phasianidae |
துணைக்குடும்பம்: | Phasianinae |
பேரினம்: | Gallus |
இனம்: | G. lafayetii |
இருசொற் பெயரீடு | |
Gallus lafayetii Lesson, 1831 | |
![]() | |
பரவல் |
இலங்கைக் காட்டுக்கோழி (Srilankan Junglefowl)(கல்லசு இலபாயெட்டீ) பேசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டும் வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது வீட்டில் வளர்க்கும் கோழிகளை உருவாக்கிய காட்டுக்கோழியான, இந்தியாவின் சிவப்புக் காட்டுக்கோழி எனப்படும் கல்லசு கல்லசு சிற்றினத்திற்கு நெருங்கிய உறவுள்ளது.
இவை அளவிற் பெரிய பறவைகள். ஆண் பறவைகள் பல நிறம் கொண்ட இறகுகளைக் கொண்டவை. எனினும் அடர்த்தியான காடுகளில் இவற்றைக் கண்டுகொள்வது கடினம். இவை காடுகளிலும், பற்றைகளிலும் வாழுகின்றன. இலங்கையில் இவற்றை, கித்துல்கல, யால, சிங்கராஜ ஆகிய இடங்களில் காணலாம்.
இது கல்லது பேரினத்தைச சேர்ந்த நான்கு வகைப் பறவைகளில் ஒன்று. இது நிலத்தில் கூடு கட்டும் பறவை. ஒரு கூட்டில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். பெசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த பல பறவைகளைப் போலவே இவ்வகையிலும், ஆண் பறவைகள், அடைகாப்பதிலோ அல்லது பொரிக்கும் குஞ்சுகளை வளர்ப்பதிலோ எவ்வித பங்கும் வகிப்பதில்லை. இவ்வேலைகளை மங்கலான நிறத்துடன், சிறப்பான உருமறைப்புக்கான உடலைக் கொண்ட பெண் பறவைகளே செய்கின்றன.
ஆண் இலங்கைக் காட்டுக்கோழி சுமார் 66 முதல் 73 செ.மீ. வரை நீளம் கொண்ட பறவையாகும். இது நாட்டுக் கோழி போன்ற உடலமைப்பும், செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிற உடலும், கடும் ஊதா நிற சிறகுகளையும், வாலையும் கொண்டது. தலையின் பின்பகுதியும், கழுத்தும் பொன்னிறமானவை. முகம் வெறுமையான சிவப்புத் தோலையும், முகப்பகுதியிலிருந்து மடிந்து நீண்டு தொங்கும் செந்நிறத் தோற் பகுதியையும் கொண்டது. உச்சியிலமைந்துள்ள "கொண்டை" யும், மஞ்சளான மையப் பகுதியுடன் கூடிய சிவப்பு நிறமானதே.
பெண் மிகவும் சிறியது, 35 செ.மீ. நீளம் மட்டுமே உடையது. இவை அடிவயிற்றிலும், மார்பிலும் வெள்ளை நிறம் அமைந்த, மண்ணிற உடலை கொண்டவை.
பெரும்பாலான பெசண்ட் குடும்பப் பறவைகளைப் போலவே இலங்கைக் காட்டுக்கோழியும் நிலத்தில் வாழும் வகையாகும். இவை நிலத்தைக் கால்களால் கிளறி, பல்வேறு விதைகள், விழுந்த பழங்கள், மற்றும் பூச்சிகள் போன்றவற்றை எடுத்து உண்கின்றன.
இந்தக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகப் அறிவிக்கப்பட்டுள்ளது.
உசாத் துணை[தொகு]
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp, ISBN 0-691-04910-6