இன்று நீ நாளை நான்
| இன்று நீ நாளை நான் | |
|---|---|
| இயக்கம் | மேஜர் சுந்தரராஜன் |
| தயாரிப்பு | பழ. கருப்பையா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சிவகுமார் லட்சுமி ஜெய்சங்கர் தேங்காய் சீனிவாசன் மேஜர் சுந்தரராஜன் மனோரமா சுலக்ஷனா |
| ஒளிப்பதிவு | விநாயகம் |
| படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
| வெளியீடு | ஆகத்து 12, 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இன்று நீ நாளை நான் (Indru Nee Nalai Naan) இயக்குநர் மேஜர் சுந்தரராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12 ஆகத்து 1983.
கதை
[தொகு]பழனியப்பன் ஒரு கிராமத்தில் வசிக்கும் அனாதை. அவன் சிறுவயது முதலே மருதாசலத்தின் வீட்டில் வேலை செய்து வருகிறான். மருதுவின் பெற்றோர் பழனியைத் தங்கள் சொந்த மகனைப் போலவே நடத்துகிறனர். கிராமத் தலைவரான மருது அரசியலில் பெரிய அளவில் வளர விரும்புகிறான். அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவள் பாப்பாத்தி. பாப்பாத்தியின் தாய் ஒரு உள்ளூர் நிலப்பிரபுவின் வைப்பாட்டியாக இருந்ததால், யாரும் பாப்பாத்தியைத் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை. வள்ளி பாப்பாத்தியின் சிறுவயதுத் தோழி. ஒரு நாள், பாப்பாத்தியைப் பார்க்கும் பழனி, அவளை மருதுவுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். ஏனெனில் மருது சாதி முறையை நம்பாதவர் மேலும் கிராமத்தில் பல சமூக-பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பவர். மருதுவுக்கும் பாப்பாத்தியைப் பிடித்துப்போக, அவர்கள் திருமணம் செய்துகொள்கிறனர்.
திருமணமான அன்றே மருது அரசியல் தொடர்பான பணிக்காக சென்னை செல்கிறான். அவன் ஒரு மாதத்திற்குப் பிறகே திரும்புவான் என்பதால் பாப்பாத்தி ஏமாற்றமடைகிறாள். இதற்கிடையில், பழனிக்கும் வள்ளிக்கும் இடையே காதல் மலர்ந்து அவர்கள் திருமணம் செய்துகொள்கிறனர். ஒரு மாதத்திற்குப் பிறகு வீடு திரும்பும் மருது, வரவிருக்கும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக நிற்க விரும்பி அதற்காக தன் கட்சித் தலைவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு கொடுக்கிறான். அதை அறிந்து அவனின் தந்தை கோபமடைகிறார். மருது எப்போதும் தேர்தல் பணிகளிலேயே மூழ்கியிருப்பதால் பாப்பாத்தியுடன் செலவிட அவனுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. இதனால் அவள் அவனது அன்பிற்காக ஏங்குகிறாள். வள்ளி கர்ப்பமாகிறாள், ஆனால் மருதுவுடன் ஒருமுறை கூட நெருக்கமாக இருக்க வாய்ப்பு கிடைக்காததை நினைத்து பாப்பாத்தி வருந்துகிறாள். துரதிர்ஷ்டவசமாக, தேர்தலில் தோல்வியடையும் மருது மதுவுக்கு அடிமையாகிறான். மாரடைப்பால் மருதுவின் தந்தை இறக்கிறார். தேர்தல் தோல்வியால் மனமுடைந்துபோகும் மருது, தொடர்ந்து மது அருந்துகிறான். இதனால் அவனது உடல்நலம் கெடுகிறது. இறுதியில், மருது இறந்துவிடுகிறான்.
வள்ளி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்; வாழ்க்கையில் வேறு யாரும் இல்லாததால் அக்குழந்தையைத் தானே வளர்த்தெடுக்க பாப்பாத்தி முடிவு செய்கிறாள். தான் செய்வது சரியல்ல என்று தெரிந்திருந்தாலும், மெல்ல மெல்ல பழனியின் மீது பாப்பாத்திக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. வள்ளி மீண்டும் கர்ப்பமாகிப் பிரசவத்திற்காகத் தன் தாய் வீட்டிற்குச் செல்கிறாள். இப்போது, பாப்பாத்தி பழனியிடம் தன் காதலைக் கூறுகிறாள். தனது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பழனியை தான் திருமணம் செய்துகொள்ள வள்ளி சம்மதிப்பாள் என்று அவள் நினைக்கிறாள். பழனி குழப்பமடைந்தாலும், பாப்பாத்தியின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். இருப்பினும், பின்னர் அவன் தன் முடிவை மாற்றிக்கொண்டு, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள வள்ளியைப் பார்க்கச் செல்கிறார்.
பழனிக்கும் பாப்பாத்திக்கும் இடையிலான விவகாரத்தை அறிந்துகொள்ளும் வள்ளி கடும் கோபமடைகிறாள். அவள் பாப்பாத்தியுடன் சண்டையிட்டு அவளை அரிவாள்மணையால் வெட்ட முயல்கிறாள். பழனி அவளைத் தடுத்து தள்ளுகிறான். இதனால் மனமுடைந்த வள்ளி தற்கொலை செய்துகொள்கிறாள். பழனியைப் பழிவாங்க நினைக்கும் உள்ளூர் சண்டியர் ஒருவன், பாப்பாத்தியைத் திருமணம் செய்துகொள்வதற்காகவே பழனி வள்ளியைக் கொன்றுவிட்டதாகப் புகார் அளிக்கிறான். அத்துடன் பொய் சாட்சிகளையும் உருவாக்குகிறான். நீதிமன்றத்தில் வள்ளி கொலை வழக்கில் பழனி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்குதண்டனை விதிக்கபடுவதற்கு முந்தைய நாள், பாப்பாத்தி சிறையில் பழனியைச் சந்திக்க வருகிறாள் அப்போது வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்வைத் தொடங்கும்படி பழனி அவரிடம் கேட்டுக்கொள்கிறான். ஆனால், பாப்பாத்தி பழனியின் கண்முன்னே தன்தைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறக்கிறாள். மனைவியைத் தவிர வேறுயாரையும் மனதில் கூட நினைக்கக்கூடாது என்றும், தனது வாழ்க்கையே அதற்கு ஒரு தவறான உதாரணம் என்றும் பழனி சிறையில் ஒரு சமூகச் செய்தியை முன்வைக்கிறான். இறந்து கிடக்கும் பாப்பாத்தியைப் பார்த்து இன்று நீ நாளை நான் என்று அவள் இன்று இறந்ததையும், நாளை தான் துக்கு தண்டனையால் இறக்கவிருப்பதையும் குறிப்பிடுகிறான்.
நடிகர்கள்
[தொகு]- சிவகுமார்- பழனியப்பன்
- ஜெய்சங்கர்- மருதாச்சலம்
- லட்சுமி- பாப்பாத்தி
- சுலக்சனா - வள்ளி
- தேங்காய் சீனிவாசன்- மருத்துவர்
- மனோரமா - கமலம்
- மேஜர் சுந்தர்ராஜன்- காவல் அதிகாரி
தயாரிப்பு
[தொகு]இன்று நீ நாளை நான் திரைப்படம், சி. ஏ. பாலனின் தூக்கு மர நிழலில் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த புதினம் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.[1][2] மேஜர் சுந்தரராஜன் இயக்கிய இப்படமானது, கல்தூண் (1982) படத்திற்குப் பிறகு அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும்; இதனை அவரின் தம்பி சம்பத் மற்றும் பழ. கருப்பையா ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இப்படத்தின் பணிகள் 1982 அக்டோபர் 12 அன்று தொடங்கப்பட்டது. "காங்கேயம் காளைகளே" என்ற பாடல் சேலம் - ஆத்தூர் சாலையில் படமாக்கப்பட்டது. சிறப்புக் அனுமதியுடன் சேலம் சிறையிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் சிவகுமாரின் வீடாகக் காட்டுவதற்கு, சேலத்தில் உள்ள எல். ஆர். சண்முகத்தின் வீடு பயன்படுத்தப்பட்டது.[3]
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். .[4]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
|---|---|---|---|
| 1 | 'வா புள்ள நல்ல புள்ள' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | கங்கை அமரன் |
| 2 | 'தாழம்பூவே கண்ணுறங்கு' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, உமா ரமணன் | வைரமுத்து |
| 3 | 'பொன்வானம் பன்னீர்' | எஸ். ஜானகி | |
| 4 | 'மொட்டு விட்ட முல்லக் கொடி' | எஸ். ஜானகி, எஸ். பி. சைலஜா | |
| 5 | 'காங்கேயம் காளைகளே' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கங்கை அமரன், சாய்பாபா, சுதாகர் | கங்கை அமரன் |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]இன்று நீ நாளை நான் 1983 ஆகத்து 12 அன்று வெளியிடப்பட்டது. கல்கியின் ஜெயமன்மதன், நடிகர்களின் நடிப்பையும் இளையராஜாவின் இசையையும் பாராட்டி, கதையை சரியாக விவரித்ததற்காக சுந்தர்ராஜனைப் பாராட்டி முடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இணைய வெளியினிலே!" (in ta). தினமணி. 25 January 2016 இம் மூலத்தில் இருந்து 5 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210705045456/https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2016/jan/26/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-1264878.html.
- ↑ "நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு". Thinnai. 8 December 2014. Archived from the original on 5 July 2021. Retrieved 5 July 2021.
- ↑ சிவகுமார் (11 June 2021). "திரைப்படச்சோலை 39: இன்று நீ நாளை நான்". இந்து தமிழ் திசை. Archived from the original on 12 June 2021. Retrieved 12 June 2021.
- ↑ ராமானுஜன், டாக்டர் ஆர். (21 September 2018). "ராகயாத்திரை 22: பொன்வானம் பன்னீர் தூவுது!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 29 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210429191337/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/176486-22.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1983 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- திரைப்படமாக்கப்பட்ட இந்தியப் புதினங்கள்