ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை என்பது, கி.மு இரண்டாவது ஆயிரவாண்டு அளவில் இந்தோ-ஐரோப்பிய அல்லது ஆரிய மொழி பேசும் இனத்தவர் இந்தியாவுக்குள் நுழைந்தது தொடர்பிலான ஒரு கொள்கை ஆகும். இது பரந்த அளவிலான இந்தோ-ஐரோப்பிய இடப்பெயர்வுடன் தொடர்புள்ளது. இந்தோ-ஆரிய மொழி பேசுவோர் ஐரோப்பாவில் அல்லது மத்திய ஆசியாவில் தோன்றி, உலகில் அவர்கள் இன்று வாழுகின்ற பகுதிகளுக்குப் பரந்து சென்றமை பற்றிய கோட்பாடு இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகும். ஆயினும், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைந்த முறைபற்றிச் சர்ச்சைகள் நிலவுகின்றன. ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை, அவர்களின் இடப்பெயர்வு வன்முறையோடு கூடிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனக் கருதுகிறது.

கோட்பாட்டின் வரலாற்றுப் பின்னணி[தொகு]

இந்தோ ஐரோப்பியர், மற்றும் அவர்கள் பேசும் மொழிகள் தொடர்பான ஆராய்ச்சிகள், 1790 இல், வில்லியம் ஜான்ஸ் என்பார், சமஸ்கிருதத்துக்கும், கிரேக்கம், லத்தீன் முதலிய மொழிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி எடுத்துக்காட்டி அவை முன்னிருந்து அழிந்துபோன இன்னொரு மொழியிலிருந்து தோன்றி இருக்கலாம் என்று எழுதியதிலிருந்தே தொடங்கின. அவர் ஜெர்மானிக் மொழிகளும், செல்ட்டிக் மொழிகளும்கூட அதே மொழியிலிருந்தே தோன்றியிருக்கக்கூடும் எனவும் கருதினார். இது பின் வந்த ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஸ்லாவிக் மொழிகளும் இதே தொடக்க மொழியிலிருந்தே உருவாகின எனக் கண்டு பிடித்தனர்.

மூலம் பற்றிய ஆய்வுகள்[தொகு]

சில ஆய்வாளர்கள், குறிப்பாக 1808 இல், பிரெட்ரிக் ஸ்கிலேகல் (Friedrich Schlegel) போன்றவர்கள், இந்தியாவே இந்தோ ஐரோப்பியப் பண்பாட்டின் தொடக்க இடமாக இருக்கக்கூடும் எனக் கருதினார். வேறு சில ஆய்வாளர்கள், மொழிகளில் பரவலை, விவிலியத்தில் சொல்லப்பட்ட மனிதத்தோற்றத்தின் அடிப்படையில் பொருத்துவதற்கு முயற்சித்தார்கள். மொழிகளிடையான குழப்பநிலை (Confusion of tongues) மற்றும் பேபெல் கோபுரத்தின் வீழ்ச்சி தொடர்பாக விவிலியத்தில் சொல்லப்பட்ட நிகழ்வுகளை அவர்கள் இந்த ஆய்வுகளுக்குள் பொருத்த முயன்றனர். விவிலியத்தில் சொல்லப்பட்ட ஜஃபேத் (Japheth) என்னும் இனக்குழுவினர், மெசொப்பொத்தேமியா அல்லது அனத்தோலியாவில் இருந்து, காக்கேசசுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்குள்ளும் சென்றதாகக் கருதப்பட்டது. இது பொது மூலம் ஒன்றைக் கொண்ட மொழிகள் பரவியதோடு ஒத்ததாகக் காணப்பட்டது. அத்துடன், இந்தோ ஆரிய மொழிகளின் தோற்றத்தை இந்தியாவுக்கு மிகவும் அண்மையில் கொண்டு வந்தது.

1840 அளவில், இந்தோ ஐரோப்பிய மொழிகளின் பரவல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள், இந்தியா, இந்தோ ஐரோப்பிய மொழிப் பகுதியின் எல்லையில் இருப்பதையும், மூல இடத்துக்கு அண்மையில் மொழிகள் கூடுதலான பிரிவுகளாக அமைந்திருக்கும் என்ற கோட்பாட்டையும் பயன்படுத்தி, அது ஒரு மூல இடமாக அமைய முடியாது என்று தீர்மானித்தனர். அத்துடன், ஈரானியர்களின் புனித நூல்களில் வடக்கிலுள்ள தாயகம் பற்றிக் குறிப்பிட்டிருப்பதையும், இந்துக்களின், இருக்கு வேதத்தில் உள்ள போர்கள் பற்றிய வர்ணனைகளை முன்வைத்தும், ஆரியர்கள் வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் வந்தனர் என்று முடிவு எடுத்தனர்.

இந்தக் கோட்பாடு சிறப்பாக மாக்ஸ் முல்லர் (Friedrich Max Müller) என்னும் மொழியியலாளரின் ஆய்வுகளுடன் தொடர்புபட்டது. இவர்,ஆரியர்கள் பக்ட்ரியாவிலிருந்து அல்லது அதனிலும் வடக்காக மத்திய ஆசியப் புல்வெளிப் பகுதியில் உள்ள ஒரு இடத்திலிருந்து கி.மு 1500 ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்குள் புகுந்ததாகக் கூறினார். வேதக் கடவுள்களுக்கும், கிரேக்க, ரோம மற்றும் நோர்ஸ் புராணங்களில் காணும் கடவுள்களுக்கும் தொடர்பு கண்ட அவர், ஐரோப்பியப் பண்பாடு மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஆதி ஆரியர்களிடமிருந்தே தோன்றியிருக்கலாம் எனவும் கணித்தார்.

மொழியியல் ஆய்வுகள்[தொகு]

இந்தோ ஐரோப்பிய மொழிகளில், அண்ணவினமாதல் (palatalization) போன்ற ஆய்வுகளும், பிற மொழியியல் ஆய்வுகளும், இந்தோ ஐரோப்பிய மொழிகளின் முதன் மொழி இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்தை ஆதரிக்கவில்லை.

பிற்கால வளர்ச்சிகள்[தொகு]

1920 ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பண்பாட்டின் அழிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டதோடு, இந்தோ ஐரோப்பியர்கள் அல்லது ஆரியர்கள் இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்து மேலும் ஆட்டம் கண்டது. சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலமும், ஆரியர்கள் இந்தியாவுக்குள் புகுந்த காலமும் பொருந்தி வந்தது, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஒரு தனியான சான்றாகக் கருதப்பட்டது. போர்களில் இறந்தது போல் காணப்பட்ட பல எலும்புக் கூடுகள் அகழ்வுகளின்போது மேற்பகுதியில் காணப்பட்டமையும், சிந்துவெளியின் வன்முறைமூல வீழ்ச்சிக் கருத்துக்கு உரம் இட்டது.

வரலாற்றுக்கான இந்திய ஆய்வு மையத்தைச் சேர்ந்த டி. என். திரிபாதி, பாகிஸ்தான் ஆய்வாளர்கள் டி.என்.ஏ வினைக் கொண்டு செய்த சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி மக்களிடையே ஆரிய திராவிட வேறுபாடுகள் காணப்படவில்லை என்றார். கிறிஸ்துவுக்கு 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தனர் எனும் வாதம் தவறானது எனவும் அவர் கருத்து வெளியிட்டார் பரணிடப்பட்டது 2007-11-23 at the வந்தவழி இயந்திரம்.

எதிர்வாதம்[தொகு]

சிலர் மாக்ஸ் முல்லர் இந்தியர்களது மதமான இந்து மதம் அவர்களை இயக்குகிறது என்று கருதியதாகவும், அதன் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் அவர்களை அடக்குவது சுலபம் என்றென்னி வேண்டுமென்றே இந்த கொள்கையை உருவாக்கியதாகவும் கருதுகின்றனர். இதன் மூலம் ரிக் வேதத்தின் தன்மையை கெடுத்து, இந்தியர்கள் மனதில் பிரிவினைவாத எண்ணத்தை உருவாக்கி அவர்களை ஆளலாம் என்றவர் எண்ணியதாக கூறுகின்றனர். மேற்குறிப்பிட்ட எண்ணத்தில் அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் இக்கொள்கையின் எதிர்வாதத்திற்கு ஆதரமாக காட்டுகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3000 years
    Source Müller, Georgina, The Life and Letters of Right Honorable Friedrich Max Müller, 2 vols. London: Longman, 1902.)