அரிசேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிசேனன்
தர்ம-மகாராஜா
ஆட்சிக்காலம்சுமார் 480 - 510 பொ.ச.
முன்னையவர்தேவசேனன்
மரபுவாகாடகப் பேரரசு

அரிசேனன் ( Harishena; ஆட்சிக்காலம் சுமார் 480 – 510 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தின் வத்சகுல்மக் கிளையின் கடைசி அறியப்பட்ட ஆட்சியாளர் ஆவார். இவர் தனது தந்தை தேவசேனனுக்குப் பிறகு பதவியேற்றார். அரிசேனன் பௌத்த கட்டிடக்கலை, கலை மற்றும் கலாச்சாரத்தின் சிறந்த புரவலராக இருந்தார். அஜந்தாவின் உலக பாரம்பரிய நினைவுச்சின்னம் இவரது மிகப்பெரிய பாரம்பரியமாக இருந்தது. இவர் பல வெற்றிகளையும் பெற்றவர். இவரது ஆட்சியின் முடிவும், வத்சகுல்மக் கிளையின் இறுதியும் மறைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அரிசேனனின் மரணத்திற்குப் பிறகு வாகாடக வம்சம் முடிவுக்கு வந்தது.

ஆட்சி[தொகு]

வத்சகுல்மக் கிளையின் வாகாடக ஆட்சியாளர்களில் அரிசேனன் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்துள்ளார் இவரது மந்திரி வராகதேவனின் அஜந்தா குகைக் கல்வெட்டு, குந்தள நாடு ( கதம்பர்களின் இராச்சியத்தைக் குறிக்கலாம்), அவந்தி (மேற்கு மால்வாவின் பகுதி), கலிங்கம், கோசலம், லதா, ஆந்திரா மற்றும் திரிகூடம் (வடக்கு கொங்கணைச் சுற்றியுள்ள திரிகூடகர்களின் பிரதேசங்கள் ) உட்பட பல நாடுகளில் மன்னரின் செல்வாக்கு பரவியிருப்பதை விவரிக்கிறது.[2] [3] மேற்கில், அறியப்பட்ட வாரிசுகள் இல்லாத வியாக்ரசேனனின் மரணத்தைத் தொடர்ந்து பொ.ச.495-இல் திரிகூடக வம்சம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. மேலும் இந்த ஆட்சியாளர்களின் வரிசையின் முடிவு அரிசேனனின் வெற்றியின் காரணமாகவும் இருக்கலாம். [4] வடக்கில், அனுபா பிராந்தியத்தின் ஒரு பகுதி இவரது இராச்சியத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரிகிறது. ஏனெனில் இந்த பிராந்தியத்தின் பாக் குகைகள் அஜந்தாவின் பாணியிலும் தேதியிலும் நெருங்கிய தொடர்புடையவை. [5] இவரின் தலைமையின் கீழ் வாகாடகப் பேரரசின் பரப்பளவு, பேரரசர் முதலாம் பிரவரசேனனின் ஆட்சியின் போது இருந்ததை விட அதிகமாக இருந்தது. [6]

வாகாடக வம்சத்தின் நந்திவர்தன-பிரவரபுர கிளையில் இவரது சமகாலத்தவர் அந்தக் கிளையின் கடைசி அரசரான இரண்டாம் பிருதிவிசேனன் ஆவார். இக்காலத்தில் வத்சகுல்மாவின் வாகாடகாக்களுக்கும் நந்திவர்தன-பிரவரபுரத்தின் வாகாடகர்களுக்கும் இடையிலான உறவுகள் பற்றி திட்டவட்டமான எதுவும் தெரியவில்லை. [7] இருப்பினும், இரண்டாம் பிரிதிவிசேனனின் மரணத்தைத் தொடர்ந்து வாகாடக வம்சத்தின் இரு பிரிவுகளுக்கும் இவர் தலைமை ஏற்றார் என்று தெரிகிறது. [8] நந்திவர்தன-பிரவரபுர கிளையுடன் ஒப்பிடும்போது வத்சகுல்மா கிளையின் அதிக செல்வமும் முக்கியத்துவமும் இக்காலத்தின் தொல்லியல் பதிவேட்டில் பிரதிபலிக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டின் முதல் ஆறு தசாப்தங்களில் நந்திவர்தன-பிரவரபுர இராச்சியத்திலிருந்து ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், பிந்தைய காலத்திற்குக் காரணம் கூறப்படுவது மிகக் குறைவு. முற்றிலும் மாறாக, 460 -களுக்குப் பிந்தைய காலத்தில் வத்சகுல்மா இராச்சியம் அதன் சொந்த பிரமிக்க வைக்கும் கலை மற்றும் கட்டிடக்கலையை உருவாக்கியது. இது நந்திவர்தன-பிரவரபுர கிளையில் அதன் சமகாலத்தவர்களை விட அதிகமாக இருந்தது. [9]

அஜந்தா குகைகள்[தொகு]

அஜந்தா குகைகளில் உள்ள பல நினைவுச்சின்னங்கள் (மேலே உள்ள படம்) அரிசேனனின் ஆட்சியைச் சேர்ந்தவை.

அஜந்தாவில் உள்ள நினைவுச்சின்னமான பாறைக் குகைகள் வாகாடக கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளை வழங்குகின்றன. அஜந்தா குகைகள் அவற்றின் சுவர் ஓவியங்களுக்காக மிகவும் பிரபலமானவை. அவை பண்டைய இந்தியாவில் இருந்து எஞ்சியிருக்கும் மிக அற்புதமானவை; அவை "பண்டைய பாரம்பரியத்தின் உச்சத்தை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக விவரிக்கப்பட்டுள்ளன. கலை வரலாற்றாசிரியர் வால்டர் ஸ்பிங்கின் கூற்றுப்படி, அஜந்தாவின் குகைகள் 9, 10, 12, 13 மற்றும் 15ஆ தவிர அனைத்து பாறை-வெட்டு நினைவுச்சின்னங்களும் இவரது ஆட்சியின் போது கட்டப்பட்டன. [10] இருப்பினும் இவரது பார்வை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரிசேனனின் மந்திரி வராகதேவர், அஜந்தாவில் உள்ள குகை 16-இன் விகாரத்தை தோண்டினார். [11] அஜந்தாவில் உள்ள பௌத்த குகைகளில் மூன்று, இரண்டு விகாரங்கள் (குகைகள் 16 மற்றும் 17) மற்றும் ஒரு சைத்தியம் (குகை 19) ஆகியவை இவரது ஆட்சியின் போது தோண்டப்பட்டு ஓவியம் மற்றும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டன.[12]

வாரிசுகளும் வாகாடக ஆட்சியின் முடிவும்[தொகு]

இவருக்குப் பிறகு பெயர் தெரியாத இரண்டு ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்ததாகத் தெரிகிறது. இவர் தனது வாழ்நாளில் அனுபவித்த அதிகாரமும் செல்வாக்கும் இருந்தபோதிலும், பொ.ச.510-இல் இவரது மரணத்திற்குப் பிறகு வாகாடக இராச்சியத்தின் சிதைவும் சரிவும் மிக விரைவாக நிகழ்ந்ததாகத் தெரிகிறது. வாகாடகா இராச்சியத்தின் வீழ்ச்சியைச் பற்றிய சூழ்நிலைகள் தெளிவாக இல்லை. சுமார், பொ.ச.550 வாக்கில் பாதாமியின் சாளுக்கியர்கள் முந்தைய வாகாடகா பிரதேசங்களின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தனர். இருப்பினும், சாளுக்கிய பதிவுகள் வாகடகர்களுடனான மோதலைப் பற்றி எந்தக் குறிப்பும் செய்யாததால், சாளுக்கிய விரிவாக்கத்திற்கு முன்பே வகாடகர்கள் அதிகாரத்தை இழந்ததாகத் தெரிகிறது. [13] ஆரம்பகால சாளுக்கிய மன்னர்கள் விதர்பா , மத்தியப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளில் நளர்களுக்கு எதிராகப் போரை நடத்தினர். இதனால் நளர்கள் கிழக்கில் உள்ள முன்னாள் வகாடகா பிரதேசங்களில் தங்கள் ஆதிக்கத்தை நீட்டித்திருக்கலாம். [7] அரிசேனனின் வாரிசுகளின் பலவீனமான ஆட்சியின் போது வடக்கில் காலச்சூரிகளும் தெற்கில் கதம்பர்களும் முன்பு வாகாடக இறையாண்மையின் கீழ் இருந்த நிலங்களின் மீது தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியதாகத் தெரிகிறது. [14]

சான்றுகள்[தொகு]

 1. Shastri (1997). Vakatakas: Sources and History. Aryan Books International. பக். 212. 
 2. D.C. Sircar (1997). Majumdar, R.C.. ed. The Classical Age (Fifth ). Bharatiya Vidya Bhavan. பக். 186-187. 
 3. Singh (2016). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. Pearson India Education Services. 
 4. A.S. Altekar (1960). Yazdani, Ghulam. ed. The Early History of the Deccan. Oxford University Press. பக். 187-188. https://archive.org/details/in.ernet.dli.2015.63303. 
 5. Bakker (1997). The Vakatakas: An Essay in Hindu Iconology. Egbert Forsten. பக். 38-39. 
 6. A.S. Altekar (2007). Majumdar, R.C.. ed. The Vakataka-Gupta Age. Motilal Banarsi Dass. 
 7. 7.0 7.1 D.C. Sircar (1997). Majumdar, R.C.. ed. The Classical Age (Fifth ). Bharatiya Vidya Bhavan. பக். 186-187. D.C. Sircar (1997). Majumdar, R.C. (ed.). The Classical Age (Fifth ed.). Bharatiya Vidya Bhavan. pp. 186–187.
 8. Altekar (2007), p. 110
 9. Bakker (1997), p. 40
 10. Spink, Walter, M. (2009). Ajanta: Defining Features, in Indica, Vol.46, No.1, Mumbai: Heras Institute of Indian History and Culture, pp.3-38
 11. Mahajan V.D. (1960, reprint 2007) Ancient India, New Delhi: S. Chand, ISBN 81-219-0887-6, pp.590-91
 12. Nashik district e-gazetteer - History, ancient period பரணிடப்பட்டது 27 செப்தெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
 13. Altekar (2007), p. 114
 14. Altekar (2007), p. 115
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசேனன்&oldid=3582881" இலிருந்து மீள்விக்கப்பட்டது