அய்யப்ப பணிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யப்ப பணிக்கர்

முனைவர் கே. அய்யப்ப பணிக்கர் (ஆங்கிலம்: Dr. K. Ayyappa Paniker) (பிறப்பு:12 செப்டம்பர் 1930 - இறப்பு: 23 ஆகஸ்ட் 2006), ஒரு செல்வாக்குமிக்க மலையாள கவிஞரும், இலக்கிய விமர்சகரும், கல்வியாளரும் அறிஞரும் ஆவார். மலையாளக் கவிதைகளில் நவீனத்துவத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவர், நவீனத்துவ, பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடுகளிலும், பண்டைய இந்திய அழகியலிலும், இலக்கிய மரபுகளிலும் ஈடுபாடுடையவர் ஆவார். குருசேத்திரம் (1960) போன்ற இவரது ஆரம்பகால படைப்புகள் மலையாள கவிதைகளில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்பட்டன. [1] அய்யப்பபணிக்கருடெ கிருதிகள், சிந்தா போன்ற பல கட்டுரைகள் இவரது தலைமுறையின் நாடக எழுத்தாளர்களுக்கு ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தின. . [2] [3]

இவரது வாழ்க்கை கல்வியுடனும் இலக்கியத்துடனும் நாற்பதாண்டுகளாய் நீடித்தது. இவர் கேரள பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் இயக்குநராக ஓய்வு பெறுவதற்கு முன்பு பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார். இவர் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். குரு கிரந்த் சாகிப், பிரெஞ்சு மொழியில் ஒரு புத்தகம் உட்பட பல முக்கியமான படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவர் இந்திய இலக்கியங்கள் குறித்து எழுதியுள்ளார். சாகித்ய அகாதமியின் இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியராகவும் இருந்தார். இந்திரா காந்தி தேசிய கலை மையம் வெளியிட்டுள்ள இந்தியக் கதை கூறியல் என்பது இவரின் மற்றொரு முக்கியமான படைப்பாகும். இது இந்திய இலக்கியத்தில், வேதம், வாய்வழி இலக்கியங்களிலிருந்து பௌத்தம், சமகால இலக்கியங்களுக்கு பல்வேறு வகையான விவரிப்புக் கலைகளைப் படித்த முதல் வகையாகும்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

ஆலப்புழாவிற்கு அருகிலுள்ள காவலத்தில் பெரியமன இல்லத்தின் ஈ.நாராயணன், எம். மீனாட்சியம்மா ஆகியோருக்கு எட்டு குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். இவர்களில் அறுவர் பெண்கள். இவரது தாயார் இவரது 12 வயதிலேயே இறந்துவிட்டார். இவருக்கு தந்தையிடமிருந்து பாசம் இல்லாமல் வளர்ந்தார். இந்த ஆரம்ப வேதனையும் தனிமையும் இவரது கவிதைகளில் ஆழமாக பிரதிபலித்தன. இவர் உயர்கல்வி படிக்கும்போதே எழுதத் தொடங்கினார். [3]

இவருக்கும் இவரது உறவினரும், வரலாற்றாசிரியரும், நிர்வாகியும், நாடக ஆசிரியரும் கவிஞருமான காவலம் நாராயண பணிக்கருக்கும் காவலம் கிராமம் ஒரு இல்லமாக இருந்தது. [4] இவர் தனது முதல் கவிதையை 16 வயதில் மாத்ருபூமி வார இதழில் வெளியிட்டார். கோழிக்கோடு மலபார் கிறித்துவக் கல்லூரியில் இடைநிலையும், 1951 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மேதகைமையும் முடித்தார். அதன் பின்னர் கேரள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பேராசிரியர் இராபர்ட் ஈ. கிராஸின் மேற்பார்வையில் ராபர்ட் லோவலின் கவிதைகள் குறித்த முனைவர் ஆய்வுக் கட்டுரையுடன் பணிக்கர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் இவர் யேல், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் (1981–82) பிந்தைய முனைவர் ஆராய்ச்சியை மேற்கொண்டார். [5]

தொழில்[தொகு]

பணிக்கர் 1951 இல் கோட்டயம் சி.எம்.எஸ் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக சேர்ந்தார். அங்கு ஒரு வருடம் பணியாற்றிய பின்னர் திருவனந்தபுரத்து மகாத்மா காந்தி கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1952 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் 1965 வரை கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த கட்டத்தில், இவர் ஆங்கில நிறுவனத்தில் பேராசிரியராகவும் , கேரள பல்கலைக்கழகத்தின் (1965–74) துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1974 ஆம் ஆண்டில், கேரள பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஆங்கில நிறுவனத்தில், ஆங்கில வாசிப்பாளாராக 1980 வரை பணிபுரிந்தார். கேரள பல்கலைக்கழகத்தில் கலை பீடத்தின் துறைத் தலைவராகப் பணிபுரிந்து 1990 இல் ஓய்வு பெற்றார்.

தனது நீண்ட தொழில் வாழ்க்கையில், அமெரிக்காவின் 25 பல்கலைக்கழகங்கள் உட்பட பல தேசிய, சர்வதேச பல்கலைக்கழகங்களில் விரிவுரை செய்தார். அங்கு கவிஞர்களான ஜேம்ஸ் டிக்கி, ஜான் ஹாலண்டர், செஸ்லா மிலோஸ், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகியோரைச் சந்தித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருந்தனர். 2006 ஆகத்து 23 அன்று திருவனந்தபுரத்தில் தனது 76 வயதில் இறந்தார். [6] அடுத்த நாள் இவரது சொந்த கிராமமான காவலத்தில், இவரது பாரம்பரிய குடும்ப இல்லமான ஒலிகல் தரவாட்டின் மேற்குப் பகுதியில், இந்த நோக்கத்திற்காக இவர் ஒதுக்கி வைத்திருந்த நிலத்தில், தகனம் செய்யப்பட்டார். இவரது பல படைப்புகளில், குறிப்பாக பதுமணிப்பூக்கள் என்ற தொகுப்பில் 'காவலம்' என்ற கவிதையில் இந்த வீட்டினைப் பற்றிய குறிப்பு உள்ளது.[7]

மேலும் படிக்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யப்ப_பணிக்கர்&oldid=3260745" இருந்து மீள்விக்கப்பட்டது