அம்பேத்கர் மக்கள் இயக்கம்
| அம்பேத்கர் மக்கள் இயக்கம் | |
|---|---|
| சுருக்கக்குறி | அ.ம.இ |
| நிறுவனர் | வை.பாலசுந்தரம் |
| தொடக்கம் | 14 ஏப்ரல் 1977 |
| கொள்கை | சாதி எதிர்ப்பு வர்க்க எதிர்ப்பு சமூக நீதி தமிழ் தேசியம் |
| நிறங்கள் | நீலம் வெள்ளை |
| இ.தே.ஆ நிலை | அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி |
| கட்சிக்கொடி | |
| இணையதளம் | |
| https://www.ambedkarmakkaliyakkam.com | |
| இந்தியா அரசியல் | |
அம்பேத்கர் மக்கள் இயக்கம் (Ambedkar Makkal Iyakkam)[1] என்பது தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்படும் அரசியல் கட்சியாகும். இதனை 1977ல் நிறுவியவர் வை. பாலசுந்தரம் ஆவார்.[2] தென்னிந்தியாவின் முதல் அம்பேத்கரிய இயக்கம் இதுவாகும்[2]. இந்த இயக்கம் சமூக வளர்ச்சி, சமத்துவம், மனித உரிமை, மகளிர் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி மற்றும் பஞ்சமி நிலம் மீட்புக்காக செயல்படுகிறது.
சென்னையின் ஐம்பெரும் ஆளுமைகள் என்று அறியப்படுகிற ஐயா இளைய பெருமாள், சொல்லின் செல்வர் சக்திதாசன், பெரியவர் சுந்தரராசனார், டாக்டர் சேப்பன் இவர்களோடு ஒரு இணைப் போராளியாகச் செயலாற்றியவர் பாவலர் வை.பா அவர்கள்.
அம்பேத்கர் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பின்னால் வைபா நடத்திய பேரணிகள், மாநாடுகள் தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. 1980களில் நிறையப் போராட்டங்களில் அமைப்பு ஈடுபட்டது. குறிப்பாக அம்பேத்கரிய இயக்கங்கள் பெரும்பாலும் வடமாவட்டச் செல்வாக்கிலானதாக இருந்துவந்த நிலையில் வடக்கே தொடங்கப்பட்ட அமைப்பானது தென்மாவட்டங்களிலும் சற்றே விரிந்து செயல்பட்டதென்றால் அது அம்பேத்கர் மக்கள் இயக்கம்தான்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மதுரை வட்டாரத்தில் செல்வாக்குப் பெறும்வரையிலும் இந்த அமைப்பே அப்பகுதியில் இயங்கியது. 1950களில் வாடிப்பட்டி பொட்டுலுபட்டியில் காந்திஜி பள்ளியைத் தொடங்கிய பொன்னுத்தாய் அம்மாள் அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகியாக விளங்கினார்.
1980களில் சங்கனாங்குளம் ஊரில் தலித் பெண்கள்மீது வன்முறை ஏவப்பட்டது. திருமங்கலம் நாகராணி, வாடிப்பட்டி பஞ்சு கொல்லப்பட்டனர். இதற்கெதிரான போராட்டத்தை இந்த இயக்கமே நடத்தியது. வாடிப்பட்டி பஞ்சுவுக்காகப் போராட்டம் நடக்கவிருந்த நிலையில் மேடை கொளுத்தப்பட்டது. வைபா காரின் மேல் ஏறிநின்று கூட்டத்தில் பேசினார். 1980களில் தமிழகத்தில் முதன்முதலாகப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இடஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் வைபா வழக்கு தொடர்ந்தார். அதே தருணத்தில் மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு ‘பஞ்சாயத்து ராஜ்நகர் பாலிகா’ என்ற மசோதாவைக் கொணர்ந்தது. அதுபற்றிய வழக்கில் நீதிமன்றம் வைபாவின் மனுவையும் கணக்கிலெடுக்கச் சொன்னது. எனவே அவர் வழக்கின் காரணத்தையும் சேர்த்துத்தான் உள்ளாட்சிகளிலும் இடஒதுக்கீட்டுக்கான தெளிவைப் பஞ்சாயத்து ராஜ்நகர் பாலிகா திருத்த மசோதாவில் இணைத்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ambedkar Makkal Iyakkam – Social Justice in the Indian society".
- ↑ 2.0 2.1 "காலச்சுவடு | நெடுவழி விளக்குகள்". www.kalachuvadu.com. Retrieved 2023-09-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- இளமுருகு முத்துவின் காணொளி
- Demonstration seeking judicial probe The Hindu, 10 January 2007
- Ex-Mayor passes away The Hindu, 8 December 2019
- AMI Official Website
- [1]
