அன்டனின் டுவோராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்டனின் டுவோராக்

அன்டனின் லெப்போல்ட் டுவோராக் (Antonín Leopold Dvořák - செப்டெம்பர் 8, 1841 – மே 1, 1904) புனைவியப் பாணியில் இசையமைத்த செக் இசையமைப்பாளர் ஆவார். இவர் மோரேவியாவினதும் தனது சொந்த இடமான பொஹீமியாவினதும் நாட்டுப்புற இசைக் கூறுகளையும் கலந்து இசையமைப்புக்களைச் செய்தார். இவரது ஆக்கங்களில், புது உலக சிம்பொனி (New World Symphony), சிலவோனிய நடனங்கள் (Slavonic Dances) போன்றவை புகழ் பெற்றவை ஆகும்.

இளமைக் காலம்[தொகு]

டுவோராக், அன்றைய ஆஸ்திரியப் பேரரசில் அடங்கியிருந்ததும், இன்று செக் குடியரசில் உள்ளதும், பிராக் நகருக்கு அருகில் உள்ளதுமான நெலாஹோஸ்வெஸ் என்னும் ஊரில், 1841 செப்டெம்பர் 8 ஆம் தேதி பிறந்தார். தனது வாழ்நாளின் பெரும் பகுதியையும் அவர் அங்கேயே கழித்தார். இவரது தந்தை ஃபிரான்டிசெக் டுவோராக் (1814-1894), ஒரு இறைச்சி விற்பனையாளரும், விடுதி உரிமையாளரும், சித்தெர் (zither) எனப்படும் இசைக் கருவிக் கலைஞரும் ஆவார். இளம் வயதிலேயே அன்டனின் டுவோராக்கின் இசைத் திறமையை அவரது பெற்றோர் புரிந்து கொண்டனர். 1847 ஆம் ஆண்டு, ஆறாவது வயதில் ஊர்ப் பள்ளியில் சேர்க்கப்பட்ட டுவோராக், தனது முதல் இசைக் கல்வியை அங்கேயே பெற்றார். 1857 முதல் 1859 வரை பிராக் நகரில் இருந்த ஒரே ஆர்கன் பள்ளியில் சேர்ந்தார். படிப்படியாக வயலின், வயோலா ஆகிய இசைக் கருவிகளை இசைக்கக் கூடிய திறமையை இவர் பெற்றார். 1860கள் முழுதும் பொஹீமிய தற்காலிக அரங்க இசைக் குழுவில், வயோலோ இசைக் கலைஞராகப் பணியாற்றினார். இது 1866 ஆம் ஆண்டிலிருந்து புகழ் பெற்ற பெட்ரிக் சிமேத்தானா (Bedřich Smetana) என்பவரால் நடத்தப்பட்டது. தனது வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கான தேவை காரணமாக டுவோராக், இசை கற்பிப்பதிலும் ஈடுபட்டிருந்தமையால் இவருக்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிதாக இருந்தது. 1871ல், இசையமைப்பில் ஈடுபடுவதற்காக இசைக் குழுவிலிருந்து விலகிக் கொண்டார். இக் காலத்தில் இவர் தனது மாணவியான யோசஃபினா செர்மக்கோவா (Josefína Čermáková) என்பவரிடம் காதல் கொண்டு அவரைக் கவர்வதற்காக சைப்பிரஸ் மரங்கள் என்னும் பாடலொன்றை உருவாக்கினார். எனினும் அப்பெண் வேறொருவரை மணந்து கொண்டார். 1873ல், டுவோராக் அப்பெண்ணின் தங்கையான அன்னா என்பவரை மணந்து கொண்டார். அவர்களுக்கு 9 பிள்ளைகள் பிறந்தனர்.

இக் காலப்பகுதியில் டுவோராக் ஒரு குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராகப் பெயர் பெறத் தொடங்கினார். இவர் பிராக்கிலிருந்த சென். அடல்பர்ட் தேவாலயத்தில் ஆர்கன் இசைக் கலைஞர் ஆனதுடன், சிறந்த இசையமைப்புக்களையும் செய்யத் தொடங்கினார். 1875ல் டுவோராக் தனது இரண்டாவது இசை ஆக்கத்தை உருவாக்கினார். 1877 ஆம் ஆண்டில், இசைத் திறனாய்வாளர் எடுவார்ட் ஹான்சிலிக், புகழ் பெற்ற ஜொகான்னெஸ் பிராம்ஸ் இவரது இசையால் கவரப்பட்டுள்ளதாக அறிவித்தார். பின்னாளில் ஜொகான்னெஸ், டுவோராக்கின் நண்பரானார். பிராம்ஸ் இசை வெளியீட்டாளர் சிம்ராக் என்பவரைத் தொடர்பு கொண்டதன் காரணமாக, டுவோராக்கின் முதல் தொகுதியான சிலவோனிய நடனங்கள் 1878ல் வெளியிடப்பட்டது. இது உடனடி வெற்றியாக அமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டனின்_டுவோராக்&oldid=2267444" இருந்து மீள்விக்கப்பட்டது