அநு. வை. நாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அநு. வை. நாகராஜன்
பிறப்பு(1933-05-25)25 மே 1933
உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
இறப்புஆகத்து 2, 2012(2012-08-02) (அகவை 79)
வெள்ளவத்தை, கொழும்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்வைரமுத்து, இராசம்மாள்

அநு. வை. நாகராஜன் (மே 25, 1933 - ஆகத்து 02,2012) வானொலிப் பேச்சு, மேடைப் பேச்சு, மேடை நாடக இயக்கம், நடிப்பு, திறனாய்வு, கதை, கவிதை, ஆக்கம், சிறுவர் இலக்கியம் என ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையில் பல பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் பிறந்தவர். பெற்றோர் வைரமுத்து, இராசம்மாள். அநுராதபுரத்திலும், பின்னர் இறுதிக் காலத்தில் வெள்ளவத்தையிலும் வாழ்ந்தவர். தொடக்கக் கல்வியை, அநுராதபுரம் திருக்குடும்பக் கன்னியர் தமிழ் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை அநுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியிலும் கற்றார்.

மூன்று ஆண்டு காலம் தற்காலிக எழுதுவினைஞராக அநுராதபுரம் இரயில்வே திணைக்களத்திலும், சுகாதாரத் திணைக்களத்திலும் பணியாற்றிய பின்னர் சமூகசேவைக் கல்வியில் "டிப்ளோமா" கற்கைக்காக தமிழ்நாடு சென்றார். பட்டம் பெற்று மீண்டும் இலங்கை திரும்பி அநுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயத்தில் 1956 ஆம் ஆண்டில் தொண்டராசிரியராகப் பணியாற்றினார்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் இடைநிலை கலைமாணி, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதனிலைமாணி, தமிழ்நாடு, சென்னை சைவ சித்தாந்த சமாஜத்தின் சைவப் புலவர் பட்டம் போன்றவற்றையும் பெற்றார்.

பதவிகள்[தொகு]

உதவி ஆசிரியராக இருந்தவர், பின்னர் அதிபராக (தரம் 1) இருந்து பல பாடசாலைகளை முன்னேற்றி, இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (2 ஆம் வகுப்பு) இருந்து கல்வி அதிகாரியாக பணியாற்றினார்.

இலக்கியப்பணி[தொகு]

வானொலிப் பேச்சு, மேடைப் பேச்சு, மேடை நாடக இயக்கம், நடிப்பு, திறனாய்வு, கதை, கவிதை, ஆக்கம் என இவர் கைபடாத துறையே இல்லை. தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர். வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, ஒப்சேவர் போன்ற பல பத்திரிகைகளின் செய்தி நிருபராகவும், புகைப்பட நிருபராகவும் செயற்பட்டவர். பின்னர் சுதந்திரன், அறிவுக்களஞ்சியம், விளக்கு, மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் எழுதினார். ஆரம்பகாலத்தில் அநுராதபுரத்தில் அன்னை என்ற முத்திங்கள் கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு பெற்ற ஆரம்ப அனுபவமே இவருக்கு நல்லதோர் அத்திவாரம் ஆகியது. இவரது பல வெளியீடுகள் சிறுவர் இலக்கியமாகவும் சமய இலக்கியமாகவும் வெளிவந்தன.

சமூக சேவை[தொகு]

யாழ். இலக்கிய வட்டம், தெல்லிப்பழை கலை இலக்கியக் களம் போன்ற இலக்கிய அமைப்புகளிலும், தெல்லிப்பழை விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம், வலிகாமம் பிரஜைகள் குழு ஒன்றியம். வலி. வடக்கு புனர்வாழ்வுக் கழகம் போன்ற பொது அமைப்புகள் ஊடாக சமூகசேவை அங்கத்தவராக மக்கள் மத்தியில் மதிப்பும் பெற்றவர்.

இவரது நூற்கள்[தொகு]

சமய இலக்கியம்[தொகு]

 • மார்கழி மங்கையர் (1971) - இசைப்பாடல்- விளக்கவுரையாக வெளிவந்தது.
 • விநாயகர் மகத்துவம் (1986) - தென் மயிலை வீரபத்திரர் ஊஞ்சல் (கவிதை)
 • பட்டரின் அபிராமி மாண்மியம் (2000)
 • விநாயகர் திருவருள் (1992)

சிறுவர் இலக்கியம்[தொகு]

 • மாணவர் நல்லுரைக்கோவை (1976)
 • காட்டில் ஒரு வாரம் (1988)
 • தேடலும் பதித்தலும் (1992) - சிறுவர் அறிவியல் நூல்.
 • அவன் பெரியவன் (1993) - சிறுவர் குறும் நவீனம், 1998 இல் திருத்திய பதிப்பாகவும் வெளிவந்தது.
 • சிறுவர் சிந்தனைக் கதைகள் (2002)
 • அறிவியல் பேழையில் ஒருசில மணிகள் (2004)
 • சிறுவர் கவிதையில் புதிய சிந்தனைகள் (2005)
 • சிறுவரும் அவர் தம் அறிவுசார் சாதனங்களும் (2005)
 • நோருவல் இருந்து கவிதை அமிழ்தம் (2006)
 • அநு.வை.நா.வின் ஒரு காலத்துச் சிறுகதைகள் (2003) - தொகுப்பு.
 • சிறுவர் பழமொழிக் கதைகள் (வர இருப்பது)

விருதுகள்[தொகு]

 • இதற்கு சாகித்திய மண்டலப் பரிசும் இந்து கலாசார அமைச்சினால் இலக்கிய வித்தகர் விருது (காட்டில் ஒருவாரம் - 1988)
 • வட, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் விருதும் பாராட்டும் (சிறுவர் சிந்தனைக் கதைகள் - 2002)
 • கண்ணதாசன் மன்றத்தால் 2004 இல் " இலக்கிய வேந்தர்" விருது வழங்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

தளத்தில்
அநு. வை. நாகராஜன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அநு._வை._நாகராஜன்&oldid=3312741" இலிருந்து மீள்விக்கப்பட்டது