வீரகேசரி (நாளிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வீரகேசரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீரகேசரி
Virakesari.jpg
வீரகேசரி நாளிதழின் சின்னம்
வகை தினசரி
வடிவம்

உரிமையாளர்கள் வீரகேசரி நிறுவனம்
ஆசிரியர் ஆர். பிரபாகன்
தொடக்கம் 6 ஆகஸ்ட் 1930 (1930-08-06)
மொழி தமிழ்
தலைமையகம் கொழும்பு, இலங்கை
சகோதர
செய்தித்தாள்கள்
மித்திரன்

இணையம்: virakesari.lk

வீரகேசரி இலங்கையில் இருந்து வெளிவரும் ஒரு முன்னோடித் தமிழ் நாளிதழ்.

வரலாறு[தொகு]

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.

வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

வீரகேசரி ஆரம்பிக்கப்பட்டு ஓரிரண்டு ஆண்டுகளில் கொழும்பில் கிராண்ட்பாஸ் வீதி 185 ஆம் இலக்கத்துக்கு அதன் அச்சகம் மாற்றப்பட்டது.

ஆரம்பத்தில் இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர் தொடர்பான செய்திகளையும் தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்ட செய்திகளையுமே வெளியிட்டு வந்தது. நாளடைவில், இது ஒரு தேசியப் பத்திரிகையாக உருவெடுத்தது.

1943 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீரகேசரி ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறியது. சுப்பிரமணியம் செட்டியாரின் தனிச் சொத்தாக இருந்த இந்நிறுவனம், 1950களின் ஆரம்பத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியது. பொது முகாமையாளராக இருந்த ஈஸ்வர ஐயர் மேலாண்மை இயக்குனரானார். கே. பி. ஹரன் (1939-1959) ஆசிரியராக இருந்தார். சங்கரநாராயணன் பொது முகாமையாளரானார். இவர்கள் மூவரையும் தனது சொந்த ஊரான தமிழ்நாடு ஆவணிப்பட்டியில் இருந்து சுப்பிரமணியம் செட்டியார் இயக்கினார்.

கே. பி. ஹரனுக்கு முன்னர் அறிஞர் வ. ரா சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

வீரகேசரி ஞாயிறு இதழ்[தொகு]

பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளுடன், அறிமுக எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தது.

வீரகேசரி இணையதளம்[தொகு]

வீரகேசரி இணையதளம் 2001 ஆம் ஆண்டுமுதல் இயங்கி வருகிறது. இலங்கையின் முதல் தர செய்தி இணையதளம் என்ற விருதினை மொறட்டுவை பல்கலைக்கழகம் 2012 ஆம் ஆண்டு வழங்கியது. இதன் ஆசிரியராக நிர்ஷன் இராமானுஜம் செயற்பட்டு வருகிறார்.

வீரகேசரிப் பிரசுரங்கள்[தொகு]

இலங்கை நாவல் பிரசுரத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது. எழுபதுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தினையடுத்து, தேசிய இலக்கிய உணர்வு வலுப்பெற்றபோது ஈழத்துத் தமிழிலக்கியத்திலே ‘சுய தேவைப் பூர்த்தி’ ஒரு முக்கிய பிரச்சினையாயிற்று இத்தகையதொரு சூழ்நிலையிலேதான் வீரகேசரி நிறுவனம் புத்தகப் பிரசுர முயற்சியில் கவனம் செலுத்தியது.

ஐந்தாண்டுக் காலப்பகுதியிலே இருபத்தொன்பது எழுத்தாளர்களின் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாக வெளியிடப்பட்டுள்ளன. கே. வி. எஸ். வாஸ் (ரஜனி), க. குணராசா (செங்கை ஆழியான்), கே. டானியல், அருள் சுப்பிரமணியம், வ. அ. இராசரத்தினம், அன்னலட்சுமி இராசதுரை, பா. பாலேஸ்வரி, கோகிலம் சுப்பையா, கே. எஸ். ஆனந்தன், அருள் செல்வநாயகம் ஆகிய நாடறிந்த நாவலாசிரியர்களின் எழுத்துக்கள் வீரகேசரிமூலம் பிரசுரமாகியுள்ளன. க. சொக்கலிங்கம் (சொக்கன்), பி. கே. இரத்தினசபாபதி (மணிவாணன்),ஆர். சிவலிங்கம் (உதயணன்), பொ. பத்மநாதன் ஆகியோர் ஒரு சில தொடர் கதைகள் எழுதியதோடு அமைந்து, பின்னர் வீரகேசரி பிரசுரக்களத்தைப் பயன்படுத்தி நாவலாசிரியர்களானவர்கள்.

வீரகேசரி பிரசுரமூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாவலாசிரியர்கள் என்ற வகையில் அ. பாலமனோகரன், தெணியான், இந்துமகேஷ். நயிமா ஏ. பஷீர், எஸ். ஸ்ரீ ஜோன்ராஜன், வை. அஹ்மத், தெளிவத்தை ஜோசப், ஞானரதன், இந்திராதேவி சுப்பிரமணியம், கே. ஆர். டேவிட். வி. ஆர். நீதிராஜா, புரட்சிபாலன், கே. விஜயன் ஆகியோர் அமைகின்றனர்.

இவர்களைத்தவிர, உருது மொழி நாவலாசிரியர் கிருஷன் சந்தர் காலஞ்சென்ற செ. கதிர்காமநாதன் செய்த தமிழாக்கத்தின் மூலமும், சிங்கள நாவலாசிரியர் கருணாசேன ஜயலத், தம்பிஐயா தேவதாஸ் செய்த தமிழாக்கத்தின் மூலமும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாயினர். (குறிப்பு - வீரகேசரி பிரசுர நாவல்கள்)

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரகேசரி_(நாளிதழ்)&oldid=1868087" இருந்து மீள்விக்கப்பட்டது