பஞ்சகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°15′N 88°30′E / 26.25°N 88.50°E / 26.25; 88.50
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் பஞ்சகர் மாவட்டத்தின் அமைவிடம்

பஞ்சகர் மாவட்டம் (Panchagarh District) (வங்காள மொழி: পঞ্চগড়, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். 1404.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[1] இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வடக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பஞ்சகர் நகரம் ஆகும். பஞ்சகர் எனில் ஐந்து கோட்டைகள் என்று பொருள். வங்காளதேச நாட்டின் தேசியத் தலைநகர் டாக்காவிலிருந்து வடக்கில் 475 கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சகர் மாவட்டம் உள்ளது.

பஞ்சகர் மாவட்ட எல்லைகள்[தொகு]

வங்காளதேசத்தின் வடக்கில் அமைந்த பஞ்சகர் மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இந்தியாவுடன் 288 கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டது. இம்மாவட்டத்தின் வடக்கில் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டமும், வடகிழக்கில் ஜல்பாய்குரி மாவட்டம் மற்றும் கூச் பெகர் மாவட்டமும், மேற்கில் தெற்கு தினஜ்பூர் மாவட்டம் மற்றும் வடக்கு தினஜ்பூர் மாவட்டங்களும், தெற்கில் தினஜ்பூர் மாவட்டம் மற்றும் தாகுர்காவ்ன் மாவட்டமும், கிழக்கில் நீல்பமரி மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

ஆறுகள்[தொகு]

இம்மாவட்டத்தில் பாயும் பதினாறு ஆறுகளில் கரதோயா, அத்ராய், டீஸ்டா, நகோர், மகாநந்தா, தங்கோன், தகுக், பத்ராஜ், புல்லி, தல்மா, சவாய், குரும், வெர்சா, திர்னொய் மற்றும் சில்கா முக்கியமானவைகளாகும்.

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தில் நீர் வளம் மிக்கதால் நெல், சணல், கரும்பு, கோதுமை, தேயிலை, மா, பலா, வாழை, கொய்யா, தென்னை, பாக்கு, விளாச்சி பயிரிடப்படுகிறது.

மேலும் தேயிலை, சர்க்கரை, அரிசி, ஆயத்த ஆடைகள் ஆலைகள், எண்ணெய் ஆட்டும் தொழிற்சாலைகள், மரம் அறுக்கும் ஆலைகள் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ரங்க்பூர் மாவட்டத்தில் அமைந்த பஞ்சகர் மாவட்டம் ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: பஞ்சகர் சதர், போடா, தேதுலியா, தேவிகஞ்ச் மற்றும் அதோரி ஆகும். மேலும் இம்மாவட்டத்தில் போட்டா மற்றும் பஞ்சகர் என இரண்டு நகராட்சி மன்றங்களும், 67 உள்ளாட்சி ஒன்றியங்களும், 919 கிராமங்களையும் கொண்டுள்ளது. [2] இம்மாவட்டம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [3]

மக்கள் தொகையியல்[தொகு]

1404.62 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 9,87,644 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 4,96,725 ஆகவும், பெண்கள் 4,90,919 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 101 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 542.00 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 51.8 % ஆக உள்ளது.[4]மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமியச் சமயத்தைப் பின்பற்றி, வங்காள மொழி பேசுகின்றனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"বাংলাপিডিয়া, মির্জা গোলাম হাফিজ"

"জেলা তথ্য বাতায়ন, পঞ্চগড়।"

26°15′N 88°30′E / 26.25°N 88.50°E / 26.25; 88.50

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சகர்_மாவட்டம்&oldid=2176019" இலிருந்து மீள்விக்கப்பட்டது