உள்ளடக்கத்துக்குச் செல்

ரங்க்பூர் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ரங்க்பூர் கோட்டம்
রংপুর বিভাগ
வங்காளதேசத்தில் ரங்க்பூர் கோட்டத்தின் அமைவிடம்
வங்காளதேசத்தில் ரங்க்பூர் கோட்டத்தின் அமைவிடம்
ரங்க்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்
ரங்க்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்
நாடு வங்காளதேசம்
நிறுவிய நாள்25 சனவரி 2010
தலைமையிடம்இரங்க்பூர்
பரப்பளவு
 • மொத்தம்16,184.99 km2 (6,249.06 sq mi)
மக்கள்தொகை
 (2011 census)
 • மொத்தம்1,57,87,758
 • அடர்த்தி980/km2 (2,500/sq mi)
நேர வலயம்ஒசநே+6 (வ.சீ.நே)
ஐஎசுஓ 3166 குறியீடுBD-F
இணையதளம்www.rangpur.gov.bd

ரங்க்பூர் கோட்டம் (Rangpur Division) (வங்காள மொழி: রংপুর বিভাগ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் எட்டு கோட்டங்களில் ஒன்றாகும். ராஜசாகி கோட்டத்தின் வடக்கில் உள்ள எட்டு மாவட்டங்களைக் கொண்டு ரங்க்பூர் கோட்டம், வங்காளதேசத்தின் ஏழாவது கோட்டமாக 25 சனவரி 2010-இல் புதிதாக துவக்கப்பட்டது.[1]வங்காளதேசத்தின் வடக்கில் 16184.99 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த ரங்க்பூர் கோட்டத்தில் எட்டு மாவட்டங்களும், ஐம்பத்தி எட்டு துணை மாவட்டங்களும், 15,665,000 மக்கள் தொகையும் கொண்டது. இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இரங்க்பூர் நகரம் ஆகும்.

கோட்ட எல்லைகள்[தொகு]

வங்கதேசத்தின் வடக்கில் அமைந்த ரங்க்பூர் கோட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும், வடகிழக்கில் அசாம் மாநிலமும், கிழக்கில் மேகாலயா மாநிலமும், தென்கிழக்கில் டாக்கா கோட்டமும், தெற்கில் ராஜசாகி கோட்டமும், மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

கோட்ட நிர்வாகம்[தொகு]

ரங்க்பூர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட ரங்க்பூர் கோட்ட நிர்வாகத்தில், ரங்க்பூர் மாவட்டம், தாகுர்காவ்ன் மாவட்டம், தினஜ்பூர் மாவட்டம், நீல்பமரி மாவட்டம், பஞ்சகர் மாவட்டம் மற்றும் குரிகிராம் மாவட்டம், காய்பாந்தா மாவட்டம், லால்முனிர்காட் மாவட்டம் என எட்டு மாவட்டங்களும் மற்றும் ஐம்பத்தி எட்டு துணை மாவட்டங்களும் உள்ளது.[2] இக்கோட்டத்தின் முக்கிய நகரங்கள் ரங்க்பூர், சையதுபூர், தினஜ்பூர் ஆகும்.

வரலாறு[தொகு]

முகலாயப் பேரரசர் அக்பரின் படைத்தலைவர் மான் சிங் 1575-இல் ரங்க்பூரின் ஒரு பகுதியைக் கைப்பற்றினார். 1686-இல் ரங்க்பூர் பகுதி முழுவதும் முகலாயப் பேரரசின் கீழ் ஒரு சர்க்கார் எனும் வருவாய் பகுதியாக இருந்தது. சென்றது.[3]

மக்கள் தொகையியல்[தொகு]

16184.99 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 1,57,87,758 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 78,81,824 ஆகவும், பெண்கள் 79,05,934 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.3% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 975 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 48.5% ஆக உள்ளது.[4]இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

பொருளாதாரம்[தொகு]

இக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு, இஞ்சி முதலியன பயிரிடப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

ரங்க்பூர் கோட்டத்தின் தொடருந்துகள், சாலைகள் மற்றும் வானூர்தி நிலையங்கள், தேசியத் தலைநகரான டாக்கா மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. ரங்க்பூர் கோட்டத்திலிருந்து நாள்தோறும் பேருந்துகள் மற்றும் 21 விரைவுத் தொடருந்துகள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு பயணிக்கிறது. இக்கோட்டத்தில் அமைந்த மூன்று வானூர்தி நிலையங்களில் சையதுபூர் வானூர்தி நிலையம் முக்கியமானதாகும்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற கோட்டங்களைப் போன்று, இக்கோட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், சட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள்[தொகு]

ரங்க்பூர் கோட்டத்தின் முக்கிய கல்வி நிறுவனங்களாக கார்மைக்கேல் கல்லூரி, ஹாஜி முகமது தனேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ரங்க்பூர் மருத்துவக் கல்லூரி, ரங்க்பூர் இராணுவப் பயிற்சிக் கல்லூரி, பேகம் ருக்கியா பல்கலைகழகம் மற்றும் இசுலாமிய சமயக் கல்வி போதிக்கும் மதராசாக்கள் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajib Mondal (2012). "Rangpur Division". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. Rangpur Division, Bangladesh
  3. Nasrin Akhter (2012). "Sarkar". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  4. [1][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்க்பூர்_கோட்டம்&oldid=3529680" இலிருந்து மீள்விக்கப்பட்டது